116 மக்களவை தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
17ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி நடந்துமுடிந்தது. இதைதொடர்ந்து, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்குக் கடந்த 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாகக் கேரளா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றுவருகிறது. இதில் கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் 18 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யவுள்ளனர். 116 தொகுதிகளில் மொத்தமாக 1,640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் கேரள மாநிலம வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை ஆர்வமாகப் பதிவு செய்துவருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு நிலவரம்:
அசாம்- 28.64%
கேரளா- 22.24%
பிஹார்- 20.80%
கோவா- 16.88%
குஜராத்- 13.24%
ஜம்மு காஷ்மிர்- 3.39%
கர்நாடகா- 12.72%
மஹாராஷ்டிரா- 9.03%
ஒடிசா- 18%
திரிபுரா- 15.28%
உத்தரபிரதேசம்- 16.18%
மேற்குவங்கம்- 19.31%
தாத்ரா நாகர் ஹாவேலி- 11.40%
டாமன்-டையூ- 19.43%
முன்பு நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப்பதிவில் சில இடங்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது பிஜேபியின் சின்னத்திற்கு ஓட்டு பதிவாவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கோவளத்தில் 151 வாக்குச்சாவடிகளில் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் பிஜேபியின் தாமரை சின்னத்தில் ஓட்டு பதிவாவதாகக் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லையெனத் தெரிவித்துள்ளார் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா.