சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியின் அசுரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் அதனோடு தொடர்புடைய நிலவுடமையையும் சாடும் படமாக அசுரன் அமைந்துள்ளது. குறிப்பாக ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் ஆதிக்க சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் திரைப்படத்தின் பல காட்சிகள் சமூகத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபை அமைப்பினர் இயக்குநர் வெற்றிமாறன் மீது கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். திரைப்படத்தில் நாயகன் சிவசாமியின் இளைய மகன் கதாபாத்திரமான சிதம்பரம் நாட்டு வெடிகுண்டுகளை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு வெற்றிமாறன் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல் அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகப்படுகிறோம் என்றும் அதனால் அவரை விசாரித்துப் பின்புலத்தை அறியவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அக்காட்சி பள்ளி மாணவர்களை அரசுக்கு எதிராகப் போராடத்தூண்டும் என்றும், பழைய ஜாதிய வன்மங்களைக் காட்சிப்படுத்தியது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற புகார் கொடுப்பவர்கள் பெரும்பாலும் விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் சமூக அக்கறையோடு சிந்திப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கிலும் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்புவது இந்த அமைப்புகளின் எண்ணங்களுக்கு மாறாக திரைப்படத்திற்கு மேலும் விளம்பரத்தையே தேடிக்கொடுக்கின்றது.
இதற்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. ஆனால் அது அப்படத்திற்கு இந்திய அளவில் பெரும் விளம்பரத்தைத் தேடிக்கொடுத்தது. சமீபத்தில் வெளியான மெர்சல் திரைபடத்திற்குக்கூட பாஜகவினர் பெரும் அமளியைக் கிளப்பினர். ஆனால் அதுவும் கடைசியில் அப்படத்தைப் பெரும் வெற்றிப்படமாக மாற்றுவதாக அமைந்துவிட்டது. இப்படிச் சுய-விளம்பரத்திற்காகச் சில அமைப்புகள் திரைப்படங்களை எதிர்ப்பது கடைசியில் அத்திரைப்படங்களுக்கு விளம்பரமாகத் திரும்புவது என்பதே வழக்கமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது அசுரன் படத்திற்கான விளம்பரமாகவே இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.