மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (மார்ச் 22) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்திய தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிடுவதாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகா, தமிழகத்தில் மோடி அலை ஓய்ந்து மக்கள் அலை வீசுகிறது என்று கூறினார். மேலும், நாட்டு மக்களின் மனநிலை மோடி அரசுக்கு எதிராக உள்ளது என்றும் தமிழகத்தில் பாஜகவை சுமந்து செல்வதற்கு அதிமுக என்ன குதிரையா என்றும் கேள்வி எழுப்பினார் அவர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி.மூர்த்தி புகார் அளித்துள்ளார். அதில், கடந்த மார்ச் 12 ஆம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அது விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்தத் தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். சுமலதா, பிரகாஷ்ராஜ் இருவரும் சுயேச்சையாக வெற்றி பெற்றால் 52 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவிலிருந்து சுயேச்சையாக மக்களவைக்கு செல்பவர்கள் என்ற பெருமையைப் பெறுவார்கள்.