ஹெச் 1 பி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை தொழிலாளர் துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்தார். இந்த நடவடிக்கை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் “அமெரிக்க பணியாளர்களின் நலனைக் காக்கவும் ஹெச் 1 பி விசா நடைமுறையில் மேலும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார். ஆனால் எத்தனை சதவீத அளவுக்குக் கட்டணம் உயர்ந்தப்படும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
இந்தியாவில் உள்ள பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் ஹெச்1 பி விசா விண்ணப்பங்களைப் பதிவுசெய்கின்றன. இதனால் இந்திய நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவங்கள் வெளிநாட்டு பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு ஹெச்1 பி விசா அவசியம். தொழிநுட்ப நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தப் பிரிவில் பல்லாயிரக்ககணக்கானோர் பணியில் அமர்த்துகிறது. குறிப்பாக இந்தியா, சீனாவிலிருந்து பெருமளவிலானோர் ஹெச்1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.
ட்ரம்பின் இந்த கடுமையான நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள 6.5 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.