தமிழகத்தில் கூடுதலாகப் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில், “தமிழகத்தில் 23 இடங்களிலும், குஜராத்தில் 232 இடங்களிலும் மொத்தம் நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும். ரூ.31,996 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது.” என்று தெரிவித்திருந்தார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் புதிதாக இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் சுற்று அனுமதியில் நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 14 வட்டாரங்களிலும், மூன்றாம் சுற்று அனுமதியில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதலாகப் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானமும் திமுக சார்பில் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசே அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியையே அதிமுகதான் ரத்து செய்தது என்று கூறினார்.