தமிழக அரசின் அனுமதியில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 16) பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 23 இடங்களில் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாகப் பதிலளித்திருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்குமா என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின். இதற்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த விவகாரத்தில் வல்லுனர் குழு அமைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கும் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதைதொடர்ந்து, மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் துவங்க முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடம் இருப்பதாகவும், மீறி செய்தால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.