பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இந்த மசோதாவை தடை செய்ய வேண்டும் எனவும் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வரும் 16ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 28ஆம் தேதி கூடிய நிலையில், நேற்று (ஜூலை 1) முதல் சட்டமன்றத்தில், கேள்வி நேரம் ஆரம்பமானது. அதில் துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ”69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அரசு முடிவு எடுக்கும்.” எனத் தெரிவித்தார்.