பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை தொடங்கியது.
இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதியன்று கூடிய சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ”69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அரசு முடிவு எடுக்கும்.” எனத் தெரிவித்தார்.
அதன்படி, 10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் 21 கட்சிகள் கலந்துகொண்டன. தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், தி.க சார்பில் கீ.விரமணி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், மார்க்ஸிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் கோபன்னா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், நாம் தமிழர் சார்பில் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞான தேசிகன், முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.” என்று பேசினார். கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது என்று பேசினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
தமிழகத்தில் அமலிலுள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியும் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.