மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியைக் கடந்துள்ள நிலையில், பாசனத்திற்காக இன்று (ஆகஸ்ட் 13) அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து அணைகளிலிருந்து தமிழகத்துக்குக் காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,40,000 கன அடியிலிருந்து 2,30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 100.30 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 64.87 டி.எம்.சியாகவும் இருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். அப்போது, பேசிய அவர், “மேட்டூர் அணை திறக்கப்படுவதால் மொத்தமாக 16.05 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் 137 நாட்களுக்குத் தினமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஈரோடு, சேலம் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். மேட்டூர் – கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் உட்பட 5 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.