மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் தொடர்பாகக் குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பலருடைய தபால் வாக்குக்கான விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்பப் படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. இதனால், சிறு காரணங்களுக்காகக் கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ”அரசுப் பணியாளர்களான காவல் துறையை சேர்ந்தவர்கள் 90,002 பேரின் தபால் வாக்குகள் முழுமையாகப் பதிவான தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆனால், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்கத் தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும்.” என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4,35,003 பேருக்குத் தபால் வாக்கு அளிக்கப் படிவங்கள் வழங்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். மேலும் முறையாகப் படிவங்கள் நிரப்பாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திடம் விளக்கம் அளித்துள்ளது.
இதைகேட்ட நீதிபதிகள், தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். எதிர்காலத்தில் தபால் ஓட்டுக்கள் பதிவில் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாதவாறு தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.