1969ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நாட்டின் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியில் நாட்டில் நிகழ்ந்த பெரும்மாற்றங்களில் ஒன்று வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைத்த அச்சரித்திர நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1980ஆம் ஆண்டு அரசு மேலும் 6 வங்கிகளை தேசியமயமாக்கியது.
வங்கிகள் ஏன் தேசியமயமாக்கப்பட்டன?
1947 முதல் 1955 வரை நாடெங்கிலும் 361 தனியார் வங்கிகள் பெரும்சரிவைச் சந்தித்த வங்கிகளாக இருந்தன. பல வங்கிகள் தங்களிடம் பணம் செலுத்தியவர்களுக்கு எவ்வித உத்தரவாதமும் தராததால் பணத்தை திருப்பித் தராமல் செயல்பட்டுவந்தன. 1955ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி என்று இன்று அறியப்படும் இம்பீரியல் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது. அதுதான் நாட்டுடைமையாக்கப்பட்ட முதல் வங்கியாகும்.
மேலும் அனைத்து வங்கிகளும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்தன. விவசாயத் துறையை வங்கிகள் புறக்கணித்தன. 1950இல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 2.3 சதவீதமாக இருந்தது 1967ல் 2.2 சதவீதமாகக் குறைந்தது.
நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் விளைவு என்ன?
தனியார் ஏகபோகமாக இருந்த வங்கித்துறை நாட்டுடைமையானதன் விளைவாக மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக நிதியினை வழங்க முடிந்தது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக விளங்கி பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உருவாக்கியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த அவற்றுக்கான நிதியினை வழங்க முடிந்தது. வங்கிகள் நாட்டுடைமையானதன் விளைவாகவே இன்று விவசாயக்கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.
வங்கிகள் தனியார்வசம் இருந்தவரையில் பெரும்பான்மை மக்கள் அஞ்சல்துறையின் சேமிப்புத் திட்டங்களையே பயன்படுத்திவந்தனர். அது அரசின் நிறுவனம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அப்போது வங்கிகள் தனியாருடையதாக இருந்ததாலேயே வெகுமக்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. தேசியமயமாக்கப்பட்டதால்தான் வங்கிகளின்மீது மக்களுக்கு நம்பிக்கை உருவானது. அரசாங்கத்தை நம்பி பணம் செலுத்தலாம் என்ற தூண்டுதல் மக்களுக்கு ஏற்பட்டது. சேமிப்புத் திட்டங்கள், கடன் தேவைகள் என பொதுமக்களுக்கான சேவையாக வங்கிகள் மாறின.
மேலும் மக்களின் ஆதரவு இந்திராகாந்திக்கு கிட்டியதில் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் ஓர் பெரிய காரணம்.
இன்று மக்களுக்கான திட்டங்களை வங்கிகளின்மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தமுடிவதற்கு அன்று இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கியதே முக்கியக்காரணம்.