17ஆவது மக்களவை சபாநாயகராக இன்று (ஜூன் 19) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஓம் பிர்லா.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜுன் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் முன்னிலையில், புதிய எம்.பிக்கள் கடந்த இரண்டு நாட்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பி ஆக வெற்றி பெற்றவர் ஓம் பிர்லா மக்களவையின் சபநாயகராக தேர்வு செய்யப்படலாம் எனக் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்றைய தினம் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, பாஜக எம்.பி ஓம் பிர்லா அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக, மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்து இன்று முன்மொழிந்துள்ளது. இதையடுத்து ஓம் பிர்லா இருப்பிடம் சென்று அழைத்து வந்த பிரதமர் மோடி, சபாநாயகருக்கான இருக்கைக்கு அழைத்துச் சென்று அவரை அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார்.
57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார். ஓம் பிர்லாவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நான் ஓம் பிர்லா உடன் இணைந்து வெகு நாட்கள் பணியாற்றியுள்ளேன்.
கல்வியும் கற்றலும் நிறைந்த ஒரு மினி இந்தியா என்றே அழைக்கப்படும் கோட்டா தொகுதியின் பொறுப்பாளராக இருந்தவர் ஓம் பிர்லா. பொது வாழ்வில் மிக நீண்ட நாட்களாக இருந்து வருபவர். ஒரு மாணவர் தலைவராக தனது அரசியல் பணியைத் தொடங்கியவர். ஓய்வின்றி இன்று வரையில் சமூகப் பணியாற்றி வருகிறார்” என்றார்.