கடந்த திங்களன்று புது தில்லியில் இந்தியாவிலுள்ள முக்கியமான 200 எழுத்தாளர்கள் வருகின்ற மக்களவை தேர்தலில் வெறுப்பு அரசியலை விரட்டி அடித்து  “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” இந்தியாவுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதில் கையெழுத்திட்ட எழுத்தாளர்களிள் முக்கியமானோர் அமிதாவ் கோஷ், அருந்ததி ரோய், கிரிஷ் கர்னாட், நயன்தாரா சாகல், ஜீத் தில்லி, ரோமிலா தாபர் மற்றும் விவேக் ஷன்பாக் ஆவர்.

இந்த வேண்டுகோளை அவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, உருது, பங்களா, மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டனர்.

அக்கடிதத்தில், “நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதில் விரும்பும் உணவை உண்பது, பிரார்த்தனை மற்றும் அவர்கள் விரும்பியவாறு வாழ்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குடிமக்கள், சாதி, பாலினம் அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள்  கொல்லப்படுவதும், கடுமையாகத் தாக்கப்படுவதும் அல்லது பாரபட்சம் காட்டப்படுவதுமாக நடத்தப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

“வெறுப்பரசியல் இந்த தேசத்தைக் கூறு போட்டுள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற கலாச்சார பயிற்சியாளர்கள் ஆகியோர் வேட்டையாடப்பட்டனர், மிரட்டப்பட்டனர், மற்றும் தணிக்கை செய்யப்பட்டார்கள். அதிகாரத்தை கேள்வி கேட்பவர் எவரும் பொய்யான மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர்”. என்று எழுத்தாளர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் “பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு

எதிரான வன்முறைகளை வலுவான நடவடிக்கைகள் கொண்டு ஒடுக்க வேண்டும். வேலைவாய்ப்புகள், வளங்கள், கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இவையெல்லாவற்றிற்கும் பிரதானமாக இந்தியாவின் பெருமையான பன்முகத்தன்மையும் அதன் ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும்” என்றனர்.

 

“வெறுப்பரசியலுக்கு எதிராக வாக்களித்து அவர்களை விரட்டுவதே இதற்கான முக்கியமான முதல் படி. எமது மக்களின் பிரிவினைக்கு எதிராக வாக்களியுங்கள், சமத்துவமின்மைக்கு எதிராக வாக்களியுங்கள், வன்முறைக்கு எதிராக வாக்களியுங்கள், அச்சுறுத்தல் மற்றும் தணிக்கைக்கு எதிராக வாக்களியுங்கள். நமது அரசியலமைப்பு நமக்கு அளித்த வாக்குறுதிகளை காக்க வேண்டுமெனில் நமக்கிருக்கும் ஒரே வழி நம்முடைய வாக்குகள் மூலம் அவர்களை விரட்டியடிப்பது தான்” என்று இதில் கையெழுத்திட்ட எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வரலாற்றில் படைப்பாளிகளே அதிகாரத்திற்கு எதிராக முதல் குரல் கொடுப்பவர்களும் பலியானவர்களும் ஆவர். இன்று இந்த தேசத்தில் அப்படியான ஒரு பெரும் குரல் அவசியமாகியிருக்கிறது. ஆளும் பாஜக அரசு இந்தியாவின் மொத்த அடையாளத்தை அழிக்க நினைக்கிறது. ஆனால் இன்று அதை அழிக்கத் தேர்தல் எனும் ஒரே ஆயுதத்தைக் காலம் நமக்கு கொடுத்திருக்கிறது. அதன் வீரியம் உணர்ந்து அதைப் பயன்படுத்துவோமா?