இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், விவசாயிகளின் வருவாயை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும், 78 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவரை இல்லாத பெருமை  எனத் உரையாற்றினார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 20) உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, உரையாற்றிய குடியரசு தலைவர், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்காக அரசு மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமாகப் பேசினார்.

கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த ராம்நாத் கோவிந்த், விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும் என்று கூறினார். நம் வருங்கால தலைமுறைக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறிய அவர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும்  இலக்கை எட்டும் நோக்கில் விவசாயத்துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “நீலப்புரட்சியின் பயனாக மீன் உற்பத்தியில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது; விரைவில் முதலிடத்தைப் பெறும் சக்தி நாட்டிற்கு உள்ளது. மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது.

பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வது அரசின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய முத்தலாக், நிகாஹ் ஹலாலா போன்ற நடைமுறைகள் நீக்கப்பட வேண்டும். கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் உஜ்வாலா யோஜானா, மிஷன் ரெயின்போ, குட்லக் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு தமது அரசு முதல் நாளிலிருந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடைசி மனிதனின் துயரங்களைப் போக்கும் வகையில் அரசு முழு வீச்சில் செயல்படும் எனக் கூறினார். கிராமப்புறங்களில் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று தெரிவித்த அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.