நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் அவ்வளவு எளிதான இயந்திரங்கள் அல்ல. கப்பலின் உந்துதலில் சிக்கலோ, எதிர்பாராத வெள்ளமோ, ஆயுதங்களில் அல்லது ரியாக்டர்களில் கோளாறோ ஏற்பட்டால் அதிலுள்ள அனைவருக்கும் ஜலசமாதிதான். கவனமாக இருக்கவேண்டிய இந்த எச்சரிக்கை பட்டியலில் நீர்மூழ்கிக் கப்பலின் கதவுகளை மூடுவதும் தற்போது அவசியமாகியுள்ளது.
இந்தியக் கடற்படைக்கு இது ஒரு பெரும் பாடம். ஏனெனில் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேசத்தின் முதல் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இருப்பதிலேயே மிக மோசமான முறையில் இழந்துள்ளது. ‘தி ஹிந்து’ பத்திரிகையில் வெளியான செய்தியில் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த பத்து மாதங்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனிதத் தவறினால் நிகழ்ந்ததென்று கடற்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தெளிவாகச் சொல்வதானால் கப்பலின் வெளிப்புற கதவுகளைச் சரியாக மூடாததால் நீர் நீர்மூழ்கிக் கப்பலின் இன்ஜின் பகுதியில் நீர் புகுந்தது. இது பிப்ரவரி 2017 இல் நடந்தது. அதாவது இக்கப்பல் பணிக்கு அமர்த்தப்பட்டு சில காலமே ஆகி இருந்த காலம். அன்றிலிருந்து பல கோளாறுகளை சரிசெய்யும் பணிகளிலும், சுத்தம் செய்யும் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற பணிகளுடன் குழாய்களை மாற்றும் வேலையும் நடைபெறுகிறது.
கடல் நீர் உட்புகுந்ததால் அவை துருப்பிடித்து விட்டன. மிக அழுத்தமான நீரை 83 மெகா வாட் அணு உலைக்கு அந்த குழாய்கள் கடத்த வேண்டும் என்பதால் அதைக் கட்டாயம் மாற்ற வேண்டும். என்று இந்திய அதிகாரிகள் முடிவெடுத்ததாக பாப்புலர் மெக்கானிக்ஸ் பத்திரிக்கையைச் சேர்ந்த கைல் மிசோகாமி கூறினார். ஏனெனில் இதே போல 2002 இல் ராயல் பிரிட்டிஷ் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் நூலிழையில் அதன் அணு உலை வெடிப்பதிலிருந்து தப்பியது.
இந்த சம்பவம் வெட்கப்படும்படியாக இருந்தாலும் இந்தியப் படைகளின் திறன் குறித்து கவலை தரக் கூடியதாகவும் உள்ளது. ஏனெனில் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவின் நிலம், நீர், வான், ஆகாயம் என அனைத்து வழிகளைப் பாதுகாப்பதற்கும் K-15 மற்றும் K-4 அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட அரிஹந்த், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான ஆயுதமாகும்.
அதை விரைவாகச் செப்பனிட வேண்டும் மேலும் இதுபோன்ற அஜாக்கிரதைகள் நடக்காமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இங்கு 21000 கோடி பணம் மட்டும் அல்ல நமது படைகளின் நம்பகத்தன்மையும் ஆபத்திலுள்ளது.