கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா, சரத்பாபு, வடிவேலு, செந்தில் என்று கலக்கல் கூட்டணியில் கவிதாலயா தயாரித்து வெளியிட்ட படம் ‘முத்து’. 1995-ஆம் அக்டோபர் 23 அன்று தீபாவளி வெளியீடாக வந்தது முத்து திரைப்படம். அது வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றன.
175 நாட்கள் தமிழ்த்திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ஜப்பான் திரையங்குகளில் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி அங்கு 12 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இன்றுவரை ஜப்பானில் வெளியான இந்தியத் திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்தது முத்து தான்.
எல்லாவற்றையு தாண்டி ரஜினி அரசியலுக்கு விதைபோட்டு நீரூற்றியதும் முத்து தான்!
முத்துவில் அப்படி என்ன சிறப்பு?
முத்து திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கொண்டாடவைத்தது. முத்துவாக வந்த ரஜினியின் ஸ்டைல், வடிவேலு-செந்தில்-காந்திமதி கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள், ராதாரவியின் வில்லத்தனம், ரஜினிக்கே உரிய திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் என்று படத்தின் திரைக்கதையை மிகநேர்த்தியாக நகர்த்தியிருப்பார் கே.எஸ்.ரவிகுமார்.
வில்லன் கும்பலிடமிருந்து மீனாவைக் காப்பாற்றிக் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளத்தாக்கைத் தாவிக்குதிக்கும் காட்சி லாஜிக்கிற்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும் அங்கு ரஜினி என்ற மனிதனின் மந்திரமும் ரவிகுமாரின் திரைமொழியும் அந்த லாஜிக் மீறலைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்கவிடாமல் திரையங்குகளைக் கொண்டாட்டக்களமாக்கியது.
“இன்று இரவு 10 மணியளவில் தோட்டத்தில் என்னைச் சந்திக்கவும்… தீபாவளிப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது..” என்ற வசனத்தில் தொடங்கும் 8 நிமிட நகைச்சுவைக் காட்சி, இன்றும் தமிழகத்தில் ட்ரெண்டிங் தான். வடிவேலுவும் செந்திலும் படத்தில் காட்டிய ஒவ்வொரு முகபாவமும் இன்றைக்கு மீம் டெம்ப்ளேட்!
படத்தின் தொடக்கத்தில் ரஜினி தனக்கே உரிய பாடலோடு குதிரை வண்டியில் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ என்று கொடுத்த மரணமாஸ் எண்ட்ரியில் தொடங்கி ‘விடுகதையா இந்த வாழ்க்கை..’ என்று கண்கலங்கி அழவைத்து வரை ரகுமானின் இசை நம்மை கதையின் உணர்வோடு நகர்த்திச் செல்வதாக இருக்கும். ’குலுவாலில்லே..’, ’தில்லானா.. தில்லானா’ என்று டூயட் பாடல்களில் மீனா நடனத்தில் கலக்கியிருப்பார்.
ராதாரவி, ஜெயபாரதி, சரத்பாபு என ஓவ்வொருவரும் தங்களுக்கே உரிய முத்திரை நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருப்பார்கள்.
கொடைவள்ளல் ஜமீனாக இருந்து துறவுபூண்ட தத்துவ ஞானியாக மாறும் அப்பா கதாப்பாத்திரத்தில் ரஜினி காட்டிய நடிப்பு – சிலிர்ப்பு!
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சீரான வேகத்தில் நகரும் திரைக்கதையில் நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்ரோசக் காட்சிகள் என்று கமர்சியல் ஃபார்முலாவையும் ரஜினிக்கே உரிய பன்ச் வசனங்களையும் சரியாகப் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.
ரஜினியின் அரசியல்:
“கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு… கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு” என்று ’குலுவாலில்லே’ டூயட் பாடலிலும் அரசியல் வாசம்பரப்பியது முத்து.
“நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்” என்ற வசனம் ரஜினி ரசிகர்களை சட்டையைக் கிழித்துகொண்டு ‘தலைவா’ என்று அலறவிட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினி முரண்பட்டிருந்த அந்த நேரத்தில் வெளியான இந்த வசனம், ரஜினிமீது அரசியல்ரீதியான எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் தற்போது, 24-ஆண்டுகள் கடந்தும் ‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்பதாக அந்த வசனம் ‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா’ என்று தொடர்கதையாகிவிட்டது. தமது திரைப்படங்கள் வெளியாகும் நேரங்களிலெல்லாம் அரசியல் கருத்துகளை வெளியிடுவது ரஜினியின் வழக்கம். அதுவே முத்துவில் தொடங்கி இப்போது தர்பார் வரை நீண்டுகொண்டே இருக்கிறது. ரஜினி வசனத்திலேயேசொல்ல வேண்டுமானால், ரஜினி வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவாரா என்பது நமக்குத் தெரியாது; ஆனால் எபோ வருவார் எப்படி வருவார் என்பது அவருக்கே தெரியாது.