திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை வரும் 28ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒட்டப்பிடாரம், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, மீதமுள்ள மூன்று தொகுதிகளையும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தற்போது, இந்த மூன்று தொகுதிகளிலும் இரண்டு தொகுதிகளின் தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாரக இருப்பதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அத்துடன் சமீபத்தில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த நிலையில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் சத்யபிரதா சாஹூ.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, வரும் 28ஆம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 28ஆம் தேதி வரும் விசாரணையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.