ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு. மேலும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையையும் வெளியிட்டது மத்திய சட்டத்துறை அமைச்சகம்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள் துறை அமைச்சர் அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் இம்மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது. மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில், திருத்தி அமைக்கப்பட்ட 370 ஆவது சட்டப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவுகள் எதன் அடிப்படையில் நீக்கப்பட்டது என்பதையும் அதில் தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த அரசாணை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனைதொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தனிக்கொடிக்கு பதிலாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவருவதால், இணையதள சேவை, செல்போன் சேவைகள் மீண்டும் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்துஸ்து வழங்கும் 370ஐ நீக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.