ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதால், மே 19ஆம் தேதி நடக்கும் 4 தொகுதிகள் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது ஒருவரே பலமுறை வாக்களிக்க முயல்வது, ஏமாற்றுவது போன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக வாக்களித்தபிறகு, வாக்காளர்களின் விரலில் மை இடப்படுகிறது. வரும் 18ஆம் தேதி நடைபெறும் தேர்தலின்போது, வாக்காளர்கள் அனைவருக்கும் வழக்கமான முறையில் ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும். தேர்தலில் வைக்கப்படும் மை அவ்வளவு எளிதாக அழியாது. அழிக்கவும் முடியாது.
இந்நிலையில் அடுத்த மாதம் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மக்களவை தேர்தலில் வைத்த மை அழியாது என்பதால், இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கலுக்கு நடு விரலில் மை வைக்க வேண்டும் என்று கூறினார் சத்யபிரதா சாஹூ.
மேலும், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினரால் இதுவரை தமிழகத்தில் மட்டும் 170 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.