ஒடிசாவில், ஆளும் பீஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சராக மே 29 ஆம் தேதி பதவியேற்கிறார்.
2014ல் நாடு முழுவதும் மோடி அலை வீசியதாக கூறப்பட்ட சூழலிலும், பேரவைத் தேர்தலில் 117 இடங்களைப் பிடித்து அபார வெற்றி பெற்றார். அப்போது பாஜக 10 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் பிடித்திருந்தது.
இந்நிலையில் இந்த தேர்தலில், மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த கிராமத்துப் பெண்கள் 8 பேரை நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தினார் நவீன் பட்நாயக். 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 112 இடங்களை கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தொடர்கிறார். பாஜக 23 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும் பிடித்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் பாஜக வேட்பாளர் பிடம்பர் ஆச்சார்யாவை 60, 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் நவீன் பட்நாயக். இதுவரை நான்கு முறை சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று நவீன்பட்நாயக் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டு நாடே ஆச்சரியபட்டது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மக்களின் முழு ஆதரவு பெற்ற ஒரு முதல்வராக தொடர்ந்து வெற்றி வாகை சூடியிருக்கும் நவீன்பட்நாயக் தற்போது 5 வது முறையாக ஒடிசாவில் மே 29 ஆம் தேதி பதவியேற்கிறார்.