டெல்லி கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை காலை 60 வயது முதியவரை அடித்தே கொன்றுள்ளது ஒரு கும்பல். இதனால் சிவ் விஹார் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழன், வெள்ளி அன்று டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘நிலைமை கட்டுக்குள் இருப்பதாகப் பேட்டியளித்தார். அதுமட்டுமின்றி அமித் ஷாவும் அவசர ஆலோசனைக்கு அறிவுறுத்தியதால் நாட்டின் கவனம் முழுவதும் டெல்லியின் மீதிருந்தது. டெல்லி போலீஸார் பதற்றத்துடன் காணப்பட்டனர். அந்த நிலையில் டெல்லி போலீஸார் “நாங்கள் யாரையும் ஏதும் செய்யவில்லை, அனைவரையும் விசாரித்து மட்டும் வருகிறோம். யாரையும் கைது கூட செய்யவில்லை” என்று பத்திரிகைக்குப் பேட்டிக் கொடுத்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆயூப் அன்சாரி என்பவர் வழக்கமான தனது துண்டு இரும்பு பொருக்கும் பணிக்காக காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பகுதிக்கு அருகில் உள்ள சிவ் விஹாரில் முகம் தெரியாத சிலர் அவரை விசாரித்து துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர்.
அடுத்த நாள் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் ஆயூபின் பெயர் விடுபட்டுள்ளது. முபாரக் ஹுசென் (28), தில்பர் நேகி (20), மோனிஸ் (21), பாபு சல்மானி (33), பைசன் (24) என்ற 36 இறந்த உடல்களை போலீஸார் கலவரத்தில் உயிர்ழந்ததாக கணக்கு காண்பிக்கின்றனர்.
இதைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஆயூப்பின் மகன் சல்மான் அன்சாரி கூறும்போது, “கடந்த சில நாட்களாக கலவரமாக இருப்பதால், என்னுடைய அப்பா விடியற்காலை 4 அல்லது 5 மணிக்கு இரும்பு துண்டுகள் பொருக்குவதற்காக செல்வார். அப்படிச் சென்ற அவர், வேலை முடித்துவிட்டு திரும்பி வரும்போது சுயநினைவுடன் சில காயங்களோடு வந்தார். என்னப்பா ஆயிற்று என்று கேட்டபோது, “முகம் தெரியாத சிலர்… வழிமறித்து பெயர் கேட்டனர், பெயர் கேட்டுவிட்டு அடிக்கத் தொடங்கிவிட்டனர்” என்றார்.
மேலும், “என்ன செய்வதென்று தெரியாமல், அக்கம் பக்கம் இருப்பவர்களை அழைத்து என்னுடைய அப்பாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நினைத்தேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. இதனால் எங்களது பணிக்காக வைத்திருந்த இரும்பு துண்டுகள் பொருக்கும் வாகனத்தில் எனது தந்தையை ஏற்றி பக்கத்திலிருந்து கிளினிக்குக் கொண்டு சென்றேன்.”
“அங்கு என்னுடைய அப்பா அனுமதிக்கப்படவில்லை, கிளினிக் பணியாளர்கள் என்னிடம் கேட்ட தொகை 5000 ரூபாய், அப்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, இருந்தாலும் என்னுடைய அப்பாவிற்கு உடனடி சிகிட்சை தேவைப்பட்டது. அதனால ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் அங்கு கொண்டுசெல்வதற்குள் எங்க அப்பாவின் உயிர் பிரிந்தது. எனக்கு இனிமேல் யாரும் இல்லை” என்று தேம்பி அழுகிறார் சல்மான் அன்சாரி.
இறுதியாக டெல்லி போலீஸ், டெல்லி வடக்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் கிட்டத்தட்ட 630 பேரை கைது செய்துள்ளதாகவும், 123 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.