சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய, மாநில அரசுகள். இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியையும் நடைபெற்றுவந்தது.
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்திவந்தனர். இதைதொடர்ந்து, தங்களுடைய விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம், இத்திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கமுடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நாளை காலைக்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் கூறவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
மேலும், 8 வழிச் சாலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எத்தனை பேர் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாளைக்குள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.