தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பதவிவகித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 3). கலைஞரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதிக்கு இன்று 96ஆவது பிறந்த நாள். இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. ஜெ.அன்பழகன், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்தார். மக்களவை உறுப்பினர் கனிமொழியும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. தனது டிவிட்டர் பதிவில் தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். கலைஞரின் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள் என்று கூறியுள்ள அவர், கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை தாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள் என்று கூறியுள்ளார்.

மாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.