2001 முதல் 2006 வரை இருந்த ஜெயா ஆட்சியின் கடைசி நாட்கள். 1991 முதல் 1996 வரை இருந்த ஜெயா ஆட்சியை வெறுக்காத மக்கள் மிகக் குறைவு. ஆனால் அதைக்காட்டிலும் அட்டூழியமிக்க ஆட்சியாக 2001 – 2006 ஜெயா ஆட்சி இருந்தபோதும், துக்ளக் சோ போன்ற ஆட்கள், அந்தப் பழைய பாதிப்பு ஏற்படாதவாறு மக்களை மடைமாற்றி கோபத்தை தணித்துக் கொண்டிருந்தார்கள் !
அந்த ஆட்சியின் முதல்கோணலாக நள்ளிரவு கலைஞர் கைது அமைந்தது. அதில் வாங்கிய குட்டில் வீங்கிய மண்டைக்காயம் ஆறும் முன், பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார் அம்மையார். அப்போதும் அடாவடி கைதுகள் நிகழ்ந்தன. பார்ப்பனீய பத்திரிக்கைகள் அதை அதிரடி கைது என்று புகழ்ந்தன. குலதெய்வக் கோயில்களில் வேண்டுதல் பலிக்கான தடை, மதமாற்றத் தடை சட்டம், சுனாமி, பெருமழை வெள்ளம் என தற்போதைய மோடி ஆட்சியைப் போல தொடர் துன்பியல் சம்பவங்களாக நிகழ்ந்து, மக்கள் அல்லோகலப்பட்டாலும், 2006-ல் அவரே மீண்டும் வென்று ஆட்சியமைப்பாரென பல பார்ப்பனப் பத்திரிக்கைகள் பகிரங்கமாக எழுதின !
பலமான கூட்டணியை கலைஞர் தலைமையிலான திமுக அமைத்திருந்தும், ஜெயா கும்பல், வெகுஜன ஊடகங்களை விலைக்கு வாங்கி அன்றே பாமர மக்களின் வாக்குகளுக்கு வலை விரித்துக் காத்துக் கிடந்தது !
கலைஞர் – நாகநாதன் இணை அந்த தேர்தல் பரப்புரையில் தன் முதல் அஸ்திரத்தை எய்தது. மிகப் பலமான அந்த அஸ்திரம் வேலூர் நகரக் கூட்டத்தில் எய்யப்பட்டது. அது இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி !
இந்த இரண்டு திட்டங்களையும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நிறைவேற்றுவோமென கலைஞர் சொன்ன மாத்திரத்தில், தமிழகத்தில் அன்றிருந்த, பெரும்பான்மைமிக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஆனந்தக் கூத்தாடினர் என்றால் அது மிகையில்லை !
கலைஞர் சொன்னதைச் செய்வாரென நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தனர். ஜெயா உட்பட அனைத்து திமுக எதிர்ப்பாளர்களும் அன்றைய நிதிச்சூழலை உணர்ந்து இதெல்லாம் சாத்தியமே அற்ற ஒன்று, கலைஞர் உங்கள் அனைவரையும் ஏமாற்றப் போகிறார் என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில், பதவியேற்ற அன்றே இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்துக்கு கையெழுத்திட்டு துவக்கி வைத்தார் !
நான்கே மாதத்திற்குள், முதல்தர வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு, முதல் கட்டமாக அது வழங்கவும் பட்டது. வழங்கப்பட்ட தேதி 15/09/2006. பதவியேற்றது 13/05/2006 !
இந்தியாவில் 1982 களில்தான் வண்ணத்தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான வசதி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட கி.பி. 2000 வரை கூட, தமிழகத்தில் 25 விழுக்காடு வீடுகளுக்கு கூட தொலைக்காட்சிகள் வந்திருக்கவில்லை. இருந்தவைகளிலும் பெரும்பாலானவை கருப்பு – வெள்ளை டிவிக்கள் !
நான் சொல்வது நகரக் கணக்கு. சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த விழுக்காடெல்லாம் பூஜ்யம் முதல் பத்து விழுக்காடுதான். பஞ்சாயத்து போர்டுகளில் பொது டிவி வைக்கப்பட்டிருக்கும். எளிய மக்களின் அதிகபட்ச பொழுது போக்கு இன்பம் ,அவ்வளவுதான் !
கருப்பு – வெள்ளை தொலைக்காட்சியே எட்டாக்கனியாக இருந்த பொழுதுகளில், முதல்தரமான வண்ணத்தொலைக் காட்சியைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி அன்று எப்படி இருந்திருக்கும் ? செயற்கைகோள் வசதியுடன் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அப்போதுதான் ஒவ்வொன்றாக தோன்றிக் கொண்டே இருந்தன !
வண்ணத் தொலைக்காட்சியைப் பொருத்தி, கேபிள் இணைப்பு கொடுத்து வீட்டுக்குள் சினிமாவை, அன்றாட நாட்டு நடப்புச் செய்திகளை கொண்டுவந்து, சமூகத்தில் அனைவரும் சமமென தரத்தில் உயர்த்தி வைத்த கலைஞரை, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்றவரை, அன்று நெக்குருகி பாராட்டாத நெஞ்சங்களில்லை !
அதுவரை வசதிபடைத்தவர் வீடுகளில் மட்டும் வாசம் செய்த அவைகளை, குக்கிராமங்களில், மலைக்காடுகளில் வசித்த பழங்குடியினருக்கும் கூட அன்று முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டது. மின்னணு தொலைதொடர்பு புரட்சி பெருக்கெடுத்த வேளையில், கலைஞர் எண்ணத்தில் உதித்த இந்த உன்னதக் கணிப்பு, எண்ணற்ற நற்பயன்களை விதைத்தன !
இலவச பொருட்களை மக்களுக்கு கொடுத்து வாக்கு கேட்பது, பெறுவது பற்றி, பல நடுநிலையாளர்கள் எரிச்சலோடு முணுமுணுப்பதைக் காண முடியும். ஆனால், தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்த கலைஞரெனும் சிற்பிக்குத்தான், தமிழகத்தை எப்படி செதுக்கி அழகுப்படுத்துவது என்கிற அக்கறை இருந்தது. தமிழகம் இன்று இந்தியாவின் தலைசிறந்த ஒரு மாநிலமாக விளங்க அவர் நிர்மாணித்த மெட்ரோ ரயில், பாலங்கள், கோயம்பேடு, அண்ணா நூற்றாண்டு நூலகம், டைடல் பார்க், அணைகள், வள்ளுவன் சிலை, மருத்துவக் கல்லூரிகள் என பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானங்கள் இருந்தாலும், இன்றளவும் அவரளித்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை உபயோகித்துக் கொண்டிருப்பவன் என்கிற வகையில், அய்யாவின் பிறந்தநாளில், மீண்டுமொருமுறை அவரை நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறேன் !