மோடி அரசின் மிக மோசமான திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் எழும் கேள்வி ஒன்றுதான். இத்தனைக்குப் பிறகும் மோடி ஆதரவாளர்களால் எப்படி அவரை தூக்கிக்கொண்டாட முடிகிறது ?
மிகக் கடுமையான காலகட்டங்களிலும் மோடியை உயர்த்திப் பிடிக்கும் அவரது ஆதரவாளர்களைப் பார்க்கும்போது இங்கே பலருக்கும் ரத்தக்கொதிப்பு உச்சத்திற்கு சென்றுவிடுகிறது. சிலர் அவர்களோடு வாதம் செய்து நொந்து போவதுண்டு. என்ன சொன்னாலும் ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று விரக்தியடைவதுண்டு. மோடி ஆதரவாளர்களைப் பார்த்து கோபமும் விரக்தியும் அடைந்தவர்களில் நீங்களும் ஒருவரா எனில், இந்தக் கட்டுரையை அவசியம் வாசியுங்கள்.
மோடி ஆதரவாளர்கள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மீது கோபம் கொள்வதை விட பரிதாபம் கொள்வதே சரியானது. இங்கே மோடி ஆதரவாளர்கள் என்று நான் குறிப்பிடுவது, பாஜக எனும் கட்சிக்கு வெளியே இருந்து மோடியை ஆதரிக்கும் பார்ப்பனரல்லாத சாமானியர்களை மட்டுமே.
இவர்களுக்குள் இருக்கும் மோடி ஆதரவு என்பது ஒரு வித உளவியல் சிக்கலே. ஆம், அவர்களை அவர்களே சமாதானம் செய்துகொள்ளும் முயற்சி, ஒரு குழந்தையை குச்சி மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரு நல்ல ஆட்சி ஒரு வலிமையான தலைவர் தேவை. ஒரு கதாநாயகனைப் பார்ப்பது போலவே இவர்கள் அரசியல் தலைவர்களையும் பார்க்கிறார்கள். திரையில் தோன்றும் கதாநாயகனை இவர்கள் தூக்கிக் கொண்டாடுவதன் காரணி என்ன ? அந்த கதாநாயகன் திரையில் செய்வது போலவே இவர்கள் தரையில் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மனம் அதற்காக ஏங்கும். ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்று என்பது அவர்களுக்கே தெரியும். தங்களால் சாத்தியமில்லாத ஒன்றை ஒருவர் செய்யும்போது மனம் அதைக்கொண்டாடுகிறது. அந்த கதாநாயகனாலும் அதை திரையில்தான் செய்ய முடியுமே தவிர, தரையில் செய்ய முடியாது என்பதுவும் இவர்களுக்குத் தெரியும் ஆயினும் மனம் அதை ஏற்க மறுக்கிறது. அது போன்ற தருணங்களில்தான், தாங்கள் நேசிக்கும் கதாநாயகன் பலருக்கும் உதவக்கூடியவர். அவர் இவருக்கு அப்படி செய்தார், அவருக்கு இப்படி செய்தார். ஆனால், இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டார் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது என்ற ஒன்றை இவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
தங்களை நியாயப்படுத்த தாங்கள் நேசிக்கும் கதாநாயகனுக்கு எதிராக வேறொரு கதாநாயகனை முன் நிறுத்தி விமர்சனம் செய்வார்கள். கேலி செய்வார்கள். இவர்கள் தங்கள் கதாநாயகனுக்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அவர் சில நூறு கோடிகளை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பார்.
அதுபோலத்தான் மோடி ஆதரவாளர்களும். யதார்த்த அரசியல் களத்தில் இருந்து சிந்திக்காமல், கொள்கை சார்ந்த அரசியல் குறித்து சிந்திக்காமல் ஒரு கதாநாயகத்தன்மையுடன் தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று காத்திருந்தவர்கள்.
இவர்களின் உளவியலை சரியாகப் புரிந்து கொண்ட பாஜக மோடியை முன்நிறுத்துகிறது. மோடி சர்வ வல்லமை கொண்டவர் என்று இவர்களை நம்ப வைத்தது. பாகிஸ்தானுடன் போரா மோடியே நேரில் சென்று சண்டை செய்வார் என்ற அளவிற்கு இவர்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். அவரை சுற்றி ஒரு மாய பிம்பம் கட்டப்பட்டது. அந்த பிம்பம் உடைந்து விடாமல் கட்டிக்காக்க மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்தார். அந்த பிம்பம் உடைந்து விடாமல் பாதுகாக்க மோடி நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பதை தவிர்ப்பார். மோடி விளையாடும் ஆட்டத்தில் அவர் மட்டுமே களத்தில் நிற்பார். காரணம் வேறு யாரேனும் களத்தில் நின்றால் அவர் தோற்றுப்போவார் என்பது அவருக்கு நன்கு தெரியும். இதில் தோற்றுப்போனால் தன்னை சுற்றி எழுப்பப்பட்ட பிம்பம் உடைந்து போகும் தேர்தலிலும் தான் தோற்றுப்போவோம் என்பது மோடிக்கு நன்கு தெரியும். எனவே அவர் தனியாகவேதான் விளையாடுவார். தொடர்ந்து வெறிகொண்டு மோடியை ஆதரித்து வரும் அவரது ஆதரவாளர்களுக்கு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தனியார் மயமாக்கல், இட ஒதுக்கீடு ரத்து, என்று வரும் பிரச்னைகளின் வீரியம் புரிந்தாலும்,தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைமை தோற்றுப் போய் விட்டது என்பதை ஒத்துக்கொள்வதா என்ற இடத்தில் ஏற்படும் உளவியல் சிக்கலே இவர்களின் தொடர் மோடி ஆதரவு நிலைப்பாட்டிற்கு காரணம்.
ஆதரவும், எதிர்ப்பும் கொள்கை சார்ந்ததாக இருக்குமெனில் இவர்களால் எளிதில் யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே ஆதரவு எதிர்ப்பு இரண்டுமே தனி மனித தலைமையை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. பாஜக வும் தங்களின் வலதுசாரிக் கொள்கையை தொடர்ந்து முன் வைத்து தோற்றுப் போன நிலையிலேயே அவர்கள் தனி மனித தலைமையை முன் நிறுத்தி, சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரை தனிப்பட்ட முறையில் பலவீனமானவர்களாக சித்தரித்து ஆட்சியைப் பிடித்தார்கள். தனி மனித தலைமையின் மீதான மயக்கத்தில் இருக்கும் எந்த சமூகமும் விடுதலை பெற்றதில்லை.
சர்வ வல்லமை பொருந்திய ஒரு தலைவன் நமக்குக் கிடைத்திருக்கிறான். நாம் விரும்பும் வண்ணம் நம் நாட்டை அந்த தலைவன் மிகச்சிறப்பாக மாற்றிக் காட்டுவான் என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் மோடி ஆதரவாளர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை ஏற்கும் மன திடம் இல்லை. மோடியின் கொள்கைகளை பற்றிய புரிதல் இல்லை. திரைப்படங்களைப் போலவே , நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு தங்களின் தலைவன் வந்து சண்டையிட்டு தங்களை காப்பாற்றுவான் என்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு எப்படிப்புரிய வைப்பது அந்த பிரச்னைகளுக்கெல்லாம் காரணமே நீங்கள் கொண்டாடும் தலைவர்தான் என்று.?
17-05-2020