தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை, தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் குறித்து 01.04.20 நாளிட்ட அறிவிக்கை ஒன்றினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் 27.02.20 நாளிட்ட அரசாணை (நிலை) எண். 36 அடிப்படையில் ஆளும் அஇஅதிமுக அரசு, இரண்டு நாட்களுக்கு முன்பு (10.06.20) வெளியிட்டுள்ளது.
2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரால், “தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை, தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக “திருவல்லிக்கேணி” என்பதை “ட்ரிப்ளிகேன்” எனக் குறிப்பிடாமல், “திருவல்லிக்கேணி” என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக, ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்”என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக 06.09.18 அன்று அரசாணை (நிலை) எண். 192, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி, மேற்படி அறிவிப்பினை செயலாக்கம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர்களைத் தலைவர்களாகக் கொண்ட, “உயர்நிலைக் குழுவும், துறை அமைச்சரை தலைவராகக் கொண்ட, “ஆலோசனைக் குழுவும்” அமைக்கப்பட்டது.
இப்படியாக, தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில், 1018 ஊர்களின் பெயர்களை, “உயர்நிலைக் குழு” தேர்ந்தெடுத்து புதிய மாற்றங்களை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 1018 ஊர்களின் பெயர்களில் 385 ஊர்களின் பெயர்கள் மட்டும், “ஆலோசனைக் குழு”வின் பரிந்துரையுடன் அதன் தமிழ் உச்சரிப்பிற்கேற்ப, ஆங்கிலப் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அப்பாடா இனி தமிழ் பெயர்களை யாரும், ஆங்கிலத்தில் தங்கள் விருப்பம் போல எழுதி கொலை செய்யமாட்டர்கள் என்ற நிம்மதியுடன் இந்த அறிவிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை வாசித்தேன். முதலில் பிரபலமான ஊர்களின் பெயரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்து ஆவலாக தேட ஆரம்பித்தேன். மதுரை ஆங்கிலத்தில் தற்போது Madurai, இனி Mathurai என்றும், வேலூர் தற்போது Vellore இனி Veeloor என்றும், கோயம்புத்தூர் தற்போது Coimbatore இனி Koyampuththoor என்றும் மாற்றப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஒவ்வொரு ஊரின் பெயரிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்து தேடினால், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் குழப்பம், குழப்பம் அவ்வளவு குழப்பங்கள். Aa, Th, Dh,Tha, Dha, Thi, Dhi, E, Ee, Go, Ko, Ga, Ka, Gaa, Kaa, Gg, Gu, Ku, Ng, Thth, Tth, Da, Ta, Thur, Ththoor, Tthoor, Thoor, Thu, Dhu, Po, Bo, Ve, Vee, Pa, Ba, Paalayam, Paalaiyam, Zh, Z போன்ற எழுத்துக்களின் ஒலிகள், ஒரே அளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்கு எந்த அளவுகோலும் இருப்பதாகத் தெரியவில்லை.
எழும்பூர் தற்போது ஆங்கிலத்தில் Egmore என்று குறிப்பிடப்படுகிறது. அதனை “Ezhumboor” என மாற்றிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. “சோழிங்கநல்லூர்” “Solinganalloor” என மாற்றப்பட்டுள்ளது. உச்சரிப்பு அடிப்படையில் அது “Chozhinganallur” என்று மாற்றப்பட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மடிப்பாக்கம் Madippakkam என்றும், மணப்பாக்கம் Manappaakkam என்றும், நந்தம்பாக்கம் Nandambaakkam என்றும், ஆதம்பாக்கம் Aadhambaakkam என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. “பாக்கம்” என்ற பெயரை, ஒரு இடத்தில், “pakkam” என்றும், ஒரு இடத்தில் “paakkaam” என்றும், மற்றொரு இடத்தில் “baakkaam” என்றும் மாறியுள்ளார்கள்.
பூதங்குடி “Boothangkudi”, ஆலங்குளம் “Aalanggulam” என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஒரே உச்சரிப்பு கொண்ட இந்த இரண்டு ஊர்களுக்கும் ஒரு இடத்தில், “gk” என்றும் வேறொரு இடத்தில் “gg” என்றும் மாற்றப்பட்டுள்ளது. சேனாகோவில் என்ற ஊர், இனி “Seanaakovil” ஆகும். “சேதுராப்பட்டி” இனி “Sethurapatti” ஆகும். “சே” என்ற எழுத்து ஒரு இடத்தில் Sea என்றும் மற்றொரு இடத்தில் Se என்றும் மாற்றப்பட்டுள்ளது.
தீத்தான்பண்ணை என்ற ஊர் இனி “Thithaanpannai” என்றும், கத்திரிப்பள்ளி என்ற ஊர் இனி “Kaththiripalli” என்றும் அழைக்கப்படும். அத்தினாபுரம் இனி “Athinaapuram” என்றும், அத்தியூர் இனி “Athiyoor” என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஒரே உச்சரிப்புக்கு ஒரு இடத்தில் “Tth” என்றும் மற்றொரு இடத்தில் “Thth” என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் “th” வரவே இல்லை. களத்தூர் “kalathoor” என்றும், சேத்தூர் “Sethtoor” என்றும் மாற்றப்பட்டுள்ளது.
“மாம்பாடி” என்ற ஊர் “Maambaadi” என்று மாற்றப்பட்டுள்ளது. “நாகத்தி” என்ற ஊர் இனி “Naagaththi”. ஆனால், தாராபுரம் இனி “Tharaapuram” ஆகும். “தா” என்ற நெடில் எழுத்துக்கு “Tha” என்ற குறில் உச்சரிப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அடுத்த எழுத்தான, “ரா”, “Raa” என்ற நெடில் உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆதனூர் இனி “Athanoor”. மாதம்பட்டி இனி “Mathampatti”.
திருவில்லிபுத்தூர் தற்போது ஆங்கிலத்தில் Srivilliputtur என எழுதப்பட்டுவருகிறது. அதனை “Thiruvillipuththur” என்று மாற்றிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வடக்கு திருவில்லிபுத்தூர், “vadakku Thiruvillipuththur” என்று மாற்றப்பட்டுள்ளது. அதுபோல திருவைகுண்டம் தற்போது ஆங்கிலத்தில் “Srivaikundam” என எழுதப்பட்டு வருகிறது. அதனை “Thiruvaikundam” என்று மாற்றிட வைக்கப்பட்ட பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. “கொமாரபாளையம்” Kumarapalayam என்று மாற்றப்பட்டுள்ளது.
“வாழவந்தி நாடு” Vazhavanthi Naadu என்றும், “சர்க்கார் வாழவந்தி” என்ற ஊர் “Sircar Valavandhi” என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஒரே ஊரின் பெயர் ஒரு இடத்தில், “Vazha” என்றும், மற்றொரு இடத்தில் “Vala” என்றும் அதுபோல, ஒரு இடத்தில் “thi” என்றும் மற்றொரு இடத்தில் “dhi” என்றும் மாற்றப்பட்டுள்ளது. கீழ்வேளூர் இனி “Keezveeloor” ஆகும். ஆனால் அதில் “z”க்குப் பிறகு “h” இல்லை. ஆனால் வேறு பல இடங்களில் “ழ்” வருமிடத்தில் “ZH” என்று மாற்றப்பட்டுள்ளது.
“பாளையம்” என்று வரும் பெரும்பாலான இடங்களில் “Paalayam” என்றும், ஆவுத்தி பாளையம் என்பது “Aavuthi Paalaayam” என்றும், காவல்கார பாளையம் என்பதற்கு, “kaavalkaara Paalaiyam” என்றும், ”பாலையூர்” என்பதற்கு “Paalaiyoor” என்றும் மாற்றப்பட்டுள்ளது. எதற்காக ஒரு இடத்தில் “lay’ என்றும், மற்றொரு இடத்தில் “laay” என்றும் மற்றொரு இடத்தில் “laiy” என்றும் மாற்றப்பட்டுள்ளது என்று விளங்கேவேயில்லை.
சிலோன் குடியிருப்பு, குறவர் குடியிருப்பு, மீனவர் குடியிருப்பு, கீழ குடியிருப்பு, நரயண் குடியிருப்பு, சம்படி ஆதி குடியிருப்பு, புங்கன் குடியிருப்பு, அருந்ததியர் குடியிருப்பு, மொட்டைமாடன் குடியிருப்பு, வேம்படி குடியிருப்பு, பரும்பு குடியிருப்பு, கணியன் குடியிருப்பு, பர்மா குடியிருப்பு ஆகிய ஊர்களுக்கு, தற்போது “குடியிருப்பு” என்பதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் “Colony” என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. “Colony” என்று பயன்படுத்தப்பட்டு வரும் அந்த பெயர்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் “Kudiyiruppu” என்று மாற்ற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தில் தற்போது உள்ளது போல “Colony” என்றே தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. அஞ்சுகம் காலனி, ஜெயந்தி காலனி, பர்மா காலனி ஆகிய ஊர்கள் தற்போது போலவே “Colony” என்றே தொடரும். ஆனால் அதே வேளையில், “ஆதி காலனி” மற்றும் ஆங்கிலத்தில் “Sampadi Adi Colony” என்று அழைக்கப்படும் “சம்படி ஆதி குடியிருப்பு” ஆகிய ஊர்களின் பெயர்கள் மட்டும், “Aathi Kudiyiruppu” மற்றும் “Sampadi Aadi Kudiyiruppu” என்று மாற்றம் செய்யவேண்டுமென்ற பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றில் “Aathi” என்றும் மற்றொன்றில் “Aadi” என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எருக்கஞ்சேரி என்ற ஊரின் பெயர் “Erukkanjery” என்றும், “எலந்தஞ்சேரி” என்ற ஊரின் பெயர் “Elandhanjery” என்றும் மாற்றப்பட்டுள்ளது. செஞ்சேரி “Senjeri” என்றும், செம்மஞ்சேரி “semmanjeri” என்றும், தலைக்கணாஞ்சேரி “Thalakkanaanjeri” என்றும் ஊனமாஞ்சேரி “Oonamanjeri” என்றும் மாற்றப்பட்டுள்ளது. அரசுக்கு இனி “cheri” இல்லாத தமிழகம் உருவாக்க திட்டம் போல. அதனால் தான் “cheri” என்பது “jery” மற்றும் “jeri” என்று மாற்றப்பட்டுள்ளது என நினைத்தால், அந்த நினைப்பிற்கு மாறாக, “மல்லிகைச் சேரி” என்ற ஊரின் பெயர் “Mallikaichcheri” என்று மாற்றப்பட்டுள்ளது. எதற்காக சில ஊர்கள் jery என்றும் சில ஊர்கள் jeri என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது விளங்கவில்லை.
தமிழ்நாடு என்ற நமது மாநிலத்தின் பெயர் இன்றளவும் ஆங்கிலத்தில் “TamilNadu” என்றுதான் எழுதப்பட்டு வருகிறது. “ழ்” என்ற எழுத்து வரும் பல இடங்களில் ஆங்கிலத்தில் “Zh” என்ற எழுத்துகள் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் பெயரில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
Google transliterationனில் பெயரைப் பதிவு செய்தால் கூட ஒரே மாதிரி ஒலிகளை அது தந்திருக்கும். ஒரே உச்சரிப்பிற்கு ஒரே ஒலியினைத் தரும் எழுத்துக்களைப் பயன்படுத்தாமல், வேறு வேறு எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒரே சீராக இல்லாத தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்காக, எதற்காக இவ்வளவு மெனக்கெட்டுள்ளது இந்த அரசாங்கம் என்பது துளியும் பிடிபடவில்லை. இதில் தற்போதைய அச்சம் என்னவென்றால் இந்த மாற்றம் முதல் கட்டம் மட்டும்தான் என்றும், இது தொடரும் என்றும் அந்த அரசாணையில் அறிவித்திருப்பதுதான்.
கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. அதனால் மொத்த அரசு எந்திரமும் முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேளையில் இந்த பெயர் மாற்றம், அதற்கு ஆட்சியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் நேரம் செலவிடுதல் போன்றவை தேவையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இவ்வளவு இக்கட்டான நேரத்தில் இப்படியொரு அரசாணை. அதிலும் அவ்வளவு குறைபாடுகள். எதற்காக இப்போது இந்த வேலை என்பதனை எப்படி யோசித்தாலும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. சின்ன குழந்தைகள் களிமண் வைத்து பொம்மைகள் செய்து விளையாடுவார்கள். அதில் அவர்கள் சொல்லும் உருவம் வராத போதிலும் நாம் அவைகளை கொண்டாடுவோம், ஊக்குவிப்போம். காரணம் அவர்கள் குழந்தைகள். ஆனால் மொத்த அரசு எந்திரமும் சேர்ந்து தப்பும் தவறுதலுமாக இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை எப்படி வரவேற்று கொண்டாடுவது?.