ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுகவில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கத் திட்டம் உள்ளதாக அதிமுக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என்று சமீபத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து முடிந்தது.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், கட்சிக்குள் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுவந்தது. இதைதொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது, “அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை” என்பதே.
மேலும், பேசிய அவர், “ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை. அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் மக்களிடையே குழப்பம் உள்ளது. அதிமுகவுக்கு ஒரே தலைமையை உருவாக்குவது பற்றி அதிமுகவின் பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். ” என்று தெரிவித்திருந்தார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி என்று இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (ஜூன் 12) நடைபெற்றது. அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எவ்வித சர்ச்சையும், பரபரப்பும் இன்றி கூட்டம் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் பங்கேற்கவில்லை. அவர் உடல்நலக் குறைவு காரணமாகக் கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், ஆகியோர் சொந்த காரணங்களால் பங்கேற்கவில்லை எனக் கட்சி தலைமைக்கு முறைப்படி விளக்கம் அளித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 113 அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதைதொடர்ந்து, பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றியைப் பெற உறுதியேற்பும் செய்தனர். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுகவில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கத் திட்டம் உள்ளதாக இந்தக் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.