கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேரிடம் விளக்கம் கேட்டுச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வனை ஆகிய மூன்று பேரும் அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுவதாக புகார் கூறிய அதிமுக கொறடா ராஜேந்திரன், அவர்களைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிமுன் அன்சாரி மீதும் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கைவிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த மனுகுறித்து சபாநாயகர் டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சபாநாயகரிடம் மனு அளித்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கொறடா ராஜேந்திரன், “அதிமுக கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதோடு, பல்வேறு பொதுக்கூட்டங்களில் அதிமுக கட்சிக்கு எதிராகப் பேசிவந்த 4 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். ’ என்று தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாகப் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
“உள்நோக்கத்துடன் எங்கள்மீது கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்” என்று தெரிவித்த எம்எல்ஏ கலைச்செல்வன், இரட்டை இலைக்கு ஆதரவாகவே இருப்போம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை.” என்று கூறினார்.
“சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்” என்று தெரிவித்த எம்எல்ஏ பிரபு, சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும் என்று தெரிவித்தார்.