மறுபடி ஒரு பெண் ஊடகவியலாளர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மதத்தின் சக்தி வாய்ந்த, அதன் கொடிய சகிப்பின்மை ஏறிய குரல்கள் மனித மனங்களை வீழ்த்தும்போது அங்கு அறிவுக்கும், அடிப்படை அறத்திற்கும் வழியில்லாமல் போகிறது. இங்கு பெரும்பாலான மதங்கள் அனைத்தும் பெண்கள் மீதான நிபந்தனை அற்ற கடும் அடக்குமுறைகளைத்தான் கட்டவிழ்த்து விடுகின்றன. மதத்தின் மீதான பிரியம் கண்களை மறைக்கும்போது மதம் போதிக்கும் அடக்குமுறைகளைக் கேள்வி கேட்கும் அறிவு பல அடி ஆழத்திற்குச் சென்று புதைந்துவிடுகிறது. ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாத தீவிரவாத இயக்கமான தாலிபானின் ஆட்சி இருந்தபோது, பிற்போக்குத்தனங்களுடன் ஆட்சியதிகாரம் சேர்ந்தால் என்னமாதிரியான பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை உலகம் கண்கூடாகப் பார்த்தது.
இதோ, ஆப்கானிஸ்தான் மக்கள் இப்போது சிறிது காலமாகத்தான் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த பெண் சமூகம் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிய பெண்களின், குறிப்பாக நெருக்கடி காலங்களிலும் தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதி பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய பெண்களின் குரல் வழியாகத் தங்களுக்கான சுதந்திரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. அப்படியான எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாத அடிப்படைவாத சக்திகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடுக்கும் வன்முறையைத்தான் இங்கு தடுக்கும் வழியில்லை. இன்னும் எத்தனை உயிர்களை நாம் இந்த வன்முறைக்கு பலி கொடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
மொத்தமாக 15 பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒன்பது பேர் ஒரே நாளில் ஏப்ரல் 30-ஆம் தேதி இறந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று சர்வதேச ஊடக அமைப்புகள் கூறியிருக்கின்றன. இப்போது பெண்களின் கல்விக்காக, வேலைவாய்ப்பு உரிமைக்காகத் தொடர்ந்து பேசிவந்த மீனா மங்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை காலை, பொது இடத்தில் அவர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு மீனா தனது முகப்புத்தகப் பக்கத்தில் தனக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் விடப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இந்த மிரட்டல்கள் ஒரு வலிமையான பெண்ணை அசைக்க முடியாது என்று கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக அவர் சுடப்பட்டிருக்கிறார்.
மீனா மங்கள் ஆப்கானிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்கட்சியில் ஊடகவியலாளர். அதைத் தாண்டி பெண்ணுரிமைக்காக உணர்வுடன், பெரும் ஆசையுடன் எப்போதும் பேசும், ஆப்கானிஸ்தான் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் முகம். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் கீழவையில் கலாச்சார ஆலோசகராகப் பொறுப்பேற்றிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பே அவர் தன் உயிர் குறித்தானப் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தியிருந்தும் ஏன் அவருக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று எல்லா தரப்பிலிருந்தும் கேட்கிறார்கள்.
சமீபகாலங்களில் ஆப்கானிஸ்தானில் பெண்ணுரிமை செயல்பாடுகளுக்கு எதிரான சகிப்பின்மை தொடர்ந்து வன்முறைகளைச் செயல்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. மீனா கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு மே மாதம் 8-ஆம் தேதியன்று காபுலில் அமைந்திருக்கும் கவுன்ட்டர்பார்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைமையகம் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 24 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றிருக்கிறது. கவுன்ட்டர் இன்டர்நேஷனல் சர்வதேச அரசு சாரா தொண்டு நிறுவனம், பெண்ணுரிமை செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் அமைப்பு. தாலிபான் இந்த அமைப்பின்மீது மேற்குலக நாடுகளின் ‘அபாயகரமான’ யோசனைகளை ஆப்கானிஸ்தானில் திணிப்பதாகவும், ஆண்-பெண் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் மோசமான விஷயத்தைச் செய்வதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது, அதனாலேயே அந்த தாக்குதலைத் தொடுத்ததாகவும் அறிவித்திருக்கிறது.
தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான வெளி என்பது அடைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்தது. கணுக்கால் தெரியாமல் உடை உடுத்த வேண்டும் என்பதிலிருந்து வெளியில் தனியாக செல்லக்கூடாது, செல்லவேண்டிய நிர்பந்தத்தில் கணவருடனோ தந்தையுடனோ வெளியில் வர வேண்டும் (முறையான ஆண் துணை என்று தாலிபன் அரசு இதைக் குறிப்பிட்டிருந்தது), கல்வி தேவையில்லை என்பதுவரை நீண்டிருந்தது. முகத்தை, கணுக்காலைத் தவறுதலாகக் காட்டுபவர்களுக்குத் தெருவில் அனைவரும் காணும்படி பிரம்படி, காதலிப்பது போன்ற ‘பெரும்’ குற்றத்தை இழைத்திருந்தால் கல்லெறிந்து கொல்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டு வந்தன. சில வார்த்தைகளில் விளக்க ‘பெண்கள் வெறுமனே பிள்ளை பெற்றுக்கொடுப்பவர்களாக இருக்க விதிக்கப்பட்டிருந்தனர்’ என்று சொல்லலாம். அப்படி கூறினால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த நிலையில் இருந்து இன்று ஆப்கானிஸ்தானில் பெண்கள் மறுபடி வெளியில் வந்து, தங்கள் உரிமைகளைக் கேட்டு நிற்கிறார்கள் என்றால் அது சாதரணமான காரியமல்ல. எத்தனையோ கல்லெறிகள், பிரம்படிகள், கொலைகள், சித்திரவதைகள் தாண்டி தற்போது அங்கு பெண்கள் கல்வி கற்க பாடசாலைகளுக்கு, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள், சில பெண்கள் அதையும்தாண்டி தங்கள் கனவுகளைத் தேடி ஓடுகிறார்கள், மீனாமாதிரி சிலர் தங்களால் முடிந்த தளங்களில் எல்லாம் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள். வீடு என்ற ஒரு சிறு பரப்பளவிற்குள், உடல் முழுவதும் மறைத்து வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலிருந்து தனியார் தொலைகாட்சியில் முகம் காட்டிப் பேசும் காலத்திற்கு தான், சார்ந்த சமூகத்தையும் உடன் அழைத்துச் செல்ல ஆசைப்படும் பெண்கள் மேல் இந்த வன்முறை நிகழ்ந்து வருகிறது.
உரிமைகளை வென்றெடுக்க, வெளிகளைத் திறந்துவிட எல்லா நேரங்களிலும் பெரும் விலையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதோ, விலைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன! ஆனால், இந்த விலைகள் தேவையா? இயன்றால் தவிர்த்திருக்க முடியுமா? இதன்பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்? பிற்போக்குத்தனங்களுக்கு வழிவிட்டு மீட்ட உரிமைகளை ஆதிக்க மையத்தின் காலடியில் ஒப்படைத்துவிடலாமா? அல்லது இருக்கும் வலிமையை மேலும் மேலும் கூட்டிக்கொண்டு, அந்த வலிமையை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு இன்னும் பெரும் சக்தியுடம் மோதிப் பார்க்கலாமா? விடையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்! இந்த விடைகளின் தேர்வில் காலம்காலமாக ஒடுக்கப்பட்டு, அடிப்படை உரிமைகளுக்குக்கூட பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையில் இருக்கும் நம் போன்ற, நமக்கு எந்தவிதத்திலும் குறைவாகாத மாபெரும் கூட்டத்தின் நூற்றாண்டு கால வலி, தாகம், கனவு இருக்கிறது! இதைத்தான் நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது.