ஈரானின் மனித உரிமைப் போராட்ட வழக்கறிஞருக்கு 38 வருடச் சிறை மற்றும் 148 கசையடிகள் தண்டனை.
இந்த கொடூர தண்டனை அவருக்கு எந்தக் குற்றத்திற்காக வழங்கப்பட்டது தெரியுமா? பெண்கள் தலையில் முக்காடுப் போடுவதை எதிர்த்து அவர் போராடியதற்காக.
நஸ்ரின் சொடௌடே வயது 55, ஈரானில் பல வருடங்களாகப் பெண்களுக்கான மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
2010 இல் இதுபோல பெண்களுக்காகப் போராடியதற்காக அவர் அரசுக்கு எதிரான சதி மற்றும் நாட்டின் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களைக் காரணம் காட்டி ஆறு வருடத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மூன்று ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டர். ஐரோப்பிய நாடாளுமன்றம் அவருக்கு மனித உரிமை போராட்டங்களுக்காக சாகரொவ் விருது அளித்து கௌரவித்தது.
இப்போது மீண்டும் அவர் பெண்கள் தலையில் முக்காடு போடுவதை எதிர்த்துப் போராடியதற்காக அவரை தேசத்திற்கு எதிராக உளவுபார்த்தல், அரசுக்கு எதிரான பிரசாரம், ஈரானின் தலைமையை அவமதித்தல் போன்ற குற்றங்களுக்காக அவரை கடந்த ஜூன் மாதம் கைது செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரானின் புரட்சி நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி முகம்மது மோகிஷே தெரிவிக்கையில் நஸ்ரின் சொடௌடேவுக்கு தேசத்திற்கு எதிரான சதி செய்தலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனையும் ஈரானின் இஸ்லாமிய உச்ச தலைவர் அலி கமினேவையை அவமதித்தற்கு இரண்டு வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் நஸ்ரின் சொடௌடேவின் கணவர் ரேஸா கான்தன் பேஸ்புக்கில் இதை மறுத்துள்ளார். நீதிபதி மோகிஷே எந்த வழக்கைப் பற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை ஆனால் அவர் தன் மனைவிக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 148 கசையடிகளும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். மரண தண்டனைகளுக்காக அறியப்பட்ட ஈரானில்கூட இது ஒரு கடுமையான தீர்ப்பு என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தி ஈரானின் தலைமை நீதிபதியாக இப்ரஹிம் ரைசி நியமிக்கப்பட்டதற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இவர் அலி கமினேவின் வாரிசாகக் கருதப்படுகிறார். இவரின் நியமனம் ஈரானின் அதிபர் ஹசான் ரௌஹானியின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக என்று பார்க்கப்படுகிறது.
இதற்கு உலகெங்கிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஐ.நா சபையைச் சேர்ந்த மனித உரிமை உயர் ஆணையர் கேட் கில்மோர் ஈரானுக்கு விரைந்தார். பல வருடங்களாக ஐ.நா சபை அதிகாரிகள் யாரையும் அனுமதிக்காக ஈரான், தற்போது கில்மோரை அனுமதித்ததை ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு அமைப்பும் இது மூர்க்கத்தனமானது என்றும் பெரும் அநீதி என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானில் மனித உரிமைக்காக போராடிதியற்கு விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே இது தான் மிகக் கடுமையான தண்டனை எனச் சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறுகிறது.
நஸ்ரின் சொடௌடேவின் கணவர் கான்தன், ஈரானின் மனித உரிமை மையத்தில் ‘இது ஈரானின் நீதித்துறைக்கே ஒரு அவமானம் என்றும் இந்தத் தீர்ப்பு இந்த நாட்டில் ஒருவர் தங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு இவ்வளவு பெரிய விலை தரவேண்டுமா ? இந்தத் தண்டனை வழக்கத்திற்கு மாறான துளியும் நியாயமில்லாது’ என்று எழுப்பியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்களை மதத்தின் பெயரால் தொடர்ந்து அவமதித்தும் அவர்களுக்கான சிறு நீதியைக்கூடத் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை இப்படி கொடூரமாக நசுக்குவதின் மூலம் அவர்கள் ஒன்றைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள் அது பெண்கள் எப்போதும் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதுதான்.