ஆகஸ்ட் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் 5720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகள் கடந்தநிலையில், இன்னும் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். இதைதொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்காக 5,564 வாக்குச்சாவடிகள் என ஒட்டுமொத்தமாக 5,720 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், பொதுமக்களின் பார்வைக்காக வரும் திங்கட்கிழமை வைக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகங்கள், அனைத்து வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார் ஆணையர் பிரகாஷ்.