பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் இன்று புது டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்பு அக்கட்சியில் இணைந்தார். 45 வயதான ஊர்மிளாவிற்கு வருகின்ற மக்களவை தேர்தலில் வடக்குமும்பை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
டில்லியில் இந்த சந்திப்பின்போது மடோண்ட்கருடன் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா மற்றும் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “நான் காங்கிரசில் நிலைத்து நிற்கவே விரும்புகிறேன். சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு தலைவரின் தலைமையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு அனைவருக்கும் வாய்ப்பை வழங்கப்படுகிறது, தேசப்பற்று உள்ளதா என்று மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லாத கட்சி இது” என்று கூறினார்.
இன்று அவர் தன் வாழ்வில் முக்கியமான நாள் என்றார். நமது நாட்டில் சுதந்திரத்தின் நிலை பற்றி சந்தேகம் உள்ளது. இதை எதிர்த்து குரல் கொடுக்கவே, தான் அரசியலில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார். காங்கிரஸின் கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகச் சொன்ன அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தநிலை நீடித்தால் இளைஞர்கள் எங்கே செல்வார்கள் என்றும் கேட்டார்.
மக்களின் அபிமானத்தைப் பெற்ற நடிகர்கள் தேர்தல் நேரத்தில் கட்சிகளில் சேர்வதும், அரசியல் கட்சிகள் அவர்களின் பிரபலத்தை தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும் நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நிகழ்வு. அதற்கு சமீபத்திய உதாரணம் ஊர்மிளா மடோண்ட்கர்.