நேற்று முன்தினம் காணாமல் போன கஃபே காஃபி டே நிறுவன அதிபர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் ஹொய்கேபஜார் நதிக்கரையில் இன்று (ஜூலை 31) அதிகாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்று “கஃபே காஃபி டே”. இந்நிறுவனத்தின் நிறுவனரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் ஆவார் வி.ஜி.சித்தார்த்தா. நேற்று முன்தினம் மாலை மங்களுரூவின் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் தனது காரிலிருந்து இறங்கியுள்ளார் சித்தார்த்தா. காரிலேயே இருந்த வாகன ஓட்டுநர் நீண்ட நேரமாகியும் சித்தார்த்தா வராததால் அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
நேத்ராவதி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஒன்றரை நாட்களாகத் தேடுதல் பணி நடந்து வந்த நிலையில், இன்று (ஜூலை 31) அதிகாலை ஹொய்கேபஜார் நதிக்கரையில் சித்தார்த்தாவின் உடல் கிடைத்ததாக தக்ஷின கர்நாடக துணை கமிஷனர் எஸ்.செந்தில் கூறினார்.
முன்னதாக, கடன் மற்றும் வருமான வரி பிரச்சனையில் தான் சிக்கியுள்ளதாக குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்களுக்குச் சித்தார்த்தா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையிலிருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.
நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு தனியார் நிறுவன பங்குதாரர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி வருகிறேன். சில நாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர்.
நான் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அனைவரும் வலிமையாக இருந்து, வேறு நிறுவனத்துடன் இணைந்து காஃபிடேயை நல்லபடியாக நடத்துங்கள். நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கிறேன். அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் நானே பொறுப்பு. என் குழு, ஆடிட்டர், மூத்த நிர்வாகிகள் போன்ற எவருக்கும் என் பணப்பரிவர்த்தனை பற்றி எதுவும் தெரியாது.
நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு நாள் அனைவரும் என் நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு மன்னிப்பு வழங்குவீர்கள். இத்துடன் என் சொத்து விவரங்களையும் இணைத்துள்ளேன். இது என் கடனை மீண்டும் செலுத்த உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.