அரசியல் கட்சியினரின் கொடி மற்றும் தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைப்பதை தவிர்த்தாலே 50 சதவீத குற்றங்கள் குறையும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக் கொடிகளும், தலைவர்களின் படங்களும் வைப்பதற்க்கு தேர்தல் ஆணையம் தடைவித்துள்ளது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடிகளைக் கட்டிக்கொண்டு, தங்களது தலைவர்களின் படங்களை வைத்துக்கொண்டு செல்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இதற்குத் தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே விபத்துகளைத் தடுக்க தேசிய மற்றும் மாநில சாலைகளை முறையாகப் பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சியில் இருப்பவர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதுடன், தங்களது தலைவர்களின் படங்களையும் மாட்டிக் கொண்டு வர மோட்டார் வாகன சட்ட விதிப்படி அனுமதி உள்ளதா” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ”இதுகுறித்து உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

கட்சி கொடி மற்றும் தலைவர் படம் போன்றவை வைப்பது மக்களையும், போலீசாரையும் மிரட்டும் வகையில் உள்ளதாகக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற செயல்களைத் தவிர்த்தாலே நாட்டில் 50 சதவீத குற்றங்கள் குறையும் எனக் கூறினர்.

மேலும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்வதை தடை செய்தாலும் குற்றச்செயல்கள் குறையும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.