இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தான், ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாட்கள் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

2017ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தவர் ராகுல் காந்தி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைக்கூட இழந்தது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கடந்த மே மாதம் 25ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் ராகுல் காந்தி. இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்க மறுத்தனர். ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே தான் கடிதம் அளித்து விட்டதாக கூறினார். கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் எனக் கூறிய அவர், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல். அதில், “மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நான் விலகுகிறேன். கட்சியின் அடுத்த தலைவரை நான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன, அதை நான் மிகவும் மதிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் தோல்விக்கு மேலும் பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சிக்கு எனது ராஜினாமா முக்கிய பங்காற்றும். அதிகார ஆசையை தியாகம் செய்வதன் மூலமே வலுவான எதிராளிகளை வீழ்த்த முடியும்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகிவருகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருமாறு வலியுறுத்தி, கட்சி தொண்டர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.