ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தீர்மானத்தை அறிவித்தார். பாஜக, அதிமுக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவையடுத்து தீர்மானம் நிறைவேறியது. நாடெங்கும் இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீர் பயாஸ் மற்றும் ஆசிர் அஹமது மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தை கிழித்து எரிய முற்பட்டனர். இதனால் மார்ஷல்களை வைத்து அவர்கள் இருவரையும் குண்டுக்கட்டாக அவையிலிருந்து வெளியேற்றினார் அவைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு. இதனால் கோபத்தின் உச்சத்துச் சென்ற மீர் பயாஸ் தனது கைகளில் கருப்பு பட்டை கட்டிக்கொண்டு குர்தாவைக் கிழித்து ஆர்ப்பட்டம் செய்து வருகின்றார்.
நாடெங்கும் உள்ள பல தலைவர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ என்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் மக்களவையில் பேசிய வைகோ, ‘ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள்’ என்று கூறினார். ஆனால் ‘காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்’ என்று முன்பு ஒருமுறை பாடல்பாடிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் இவ்விவகாரத்துக்கு ஆதரவளித்துப் பேசியுள்ளார். மேலும் இதனை ஆதரித்து அதிமுக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சௌரப்ஜி, ‘இது ஒன்றும் புரட்சிகரமான முடிவல்ல; முழுக்க முழுக்க அரசியல் முடிவேயன்றி போற்றத்தக்க முடிவல்ல’ என்றார்.
இதுபற்றிப் பேசிய காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முக்தி, ‘காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்பது எங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு அல்ல; அது எங்கள் உரிமை; காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான ஒப்பந்தம் அது; இன்று அதனை இந்தியா மீறியுள்ளது; இது இந்தியாவிற்கு பேராபத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, “இது அநீதியானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது; ஒரு பெரும் போராட்டம் எங்கள் முன்னே இருக்கிறது; இதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.