கொரோனா வைரஸ் பீதி இந்தியாவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சூழலில் மக்கள் கூடும் இடங்களில் கடும் எச்சரிக்கைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று திரையரங்குகளை மார்ச் 31வரை மூடும்படியும் மக்கள் நலனைக் கணக்கில்கொண்டு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இந்த வேண்டுகோளுக்கு இணங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடைசியாக வந்த தகவலின்படி கேரளாவில் covid-19 வைரஸ் தாக்குதலுக்குப் புதிதாக 6 பேர் ஆட்பட்டிருக்கிறார்கள் என்றும் இதோடு சேர்த்து கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயிர்ந்துள்ளது.
இந்த மார்ச் மாதம் வெளிவர இருந்த இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்து பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிற ‘மரைக்கார் லைன் ஆஃப் தி அரேபியன் சீ’ திரைப்படம் வெளிவருமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் கடற்படை தளபதி நான்காம் குஞ்சாலி மரைக்காயர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய முதல் கடற்படை சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய படமாகும். அதேபோல டோவினோ தாமஸ் நடித்த ‘கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ்’ படமும் வெளியாகுமா என்று தெரியவில்லை.
அதுமட்டுமில்லாமல் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களும் கேரளாவில் வெளியாகுமா என்பதே சந்தேகமே!
கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எம்.ரஞ்சித் இதைப்பற்றி கூறுகையில், “திரையரங்குகள் மார்ச் 16வரை மூடியிருக்கும். அரசாங்கம் மார்ச் 16ஆம் தேதி நிலைமையைப் பரிசீலித்து முடிவெடுக்கும்.” என்றார். மேலும் அத்தோடு சுகாதார நிலையைக் கணக்கில்கொண்டு தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் 20க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களின் படப்பிடிப்புகள் தொடர வேண்டுமா என்று தயாரிப்பாளர்களோடு சேர்ந்து கலந்தாலோசிக்கப்படும்” என்றார்.
திரையரங்குகள் மறுபடி திறக்கப்பட்டவுடன் எந்த வரிசையில் படங்கள் வெளியிடப்படும் என்பது குறித்து தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். கேரளாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த சூழல் இந்தியா முழுக்க ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொரோனா மூலம் இந்திய திரையுலகம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.