இன்னும் சில தினங்களில் கொரோனா கொண்டான் கோப்பரகேசரி மோடிஜி அவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அறிவிப்பொன்றை செய்ய இருப்பதாக ஒரு அறிவிப்பை செய்வார். இம்முறை நாம் பதற வேண்டியதில்லை – லாக்டவுனை தான் நீட்டிக்க போவதாகத் தான் தலைவர் சொல்லப் போகிறார். அது மேலும் இரு வாரங்களா அல்லது ஒரு மாதமா என்கிற எண்ணிக்கையில்தான் வித்தியாசம் இருக்கும். அதற்கு முன்பு தனது விண்ணப்பங்களை ஏற்று கொரோனாவை பாதி முறியடித்து விட்ட நாட்டு மக்களை தான் சிரம் தாழ்ந்து வணங்குவதறாக கண்கலங்குவார். மீதி பாதி கொரோனாவைக் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்ட நாம் ஜனங்கள் படைவீரர்களாக தன்னுடன் அணிவகுக்க வேண்டும் என மேலும் குரல் தழுதழுக்க சொல்வார். உடனே நாமும் கண்கலங்குவோம்.
சரி, சற்று சீரியசாக ஒன்றைக் கேட்போம்: அது தான் தொற்று குறைந்து விட்டதே, வியாதி இறங்குமுகத்தில் இருக்கிறதே, இருந்தும் மோடிஜி ஏன் நம்மை வீட்டுச்சிறை வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்?
இப்போதுள்ள ஊரடங்கு அரைகுறையானது. தமிழகத்தில் மக்கள் சாலையில் சகஜமாக உலவுவதை டிவியில் பார்த்தேன். கடைகளிலும் கூட்டம் தான். வேலைக்குப் போக மட்டும் தான் மக்கள் வெளிவர இல்லையே தவிர வெளியே தான் இருக்கிறார்கள். அரசுக்கும் இது தெரியும். அரசுக்கு மற்றொன்றும் தெரியும் – கொரோனா இந்தியாவில் ஆவேசமாகப் பரவாது. இந்தியர்களின் மரபணுவினாலா, தடுப்பாற்றல் நமக்கு அதிகமென்பதாலோ தெரியவில்லை. இந்த வாரத்தில் மட்டுமே லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அதில் பாதி பேர் செத்து விடுவார்கள் என பல மருத்துவர்கள் பயமுறுத்தியது போல ஏதும் நடக்கவில்லை; அதனால் நினைத்தளவுக்கு ஆபத்தில்லை என மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறோம். இன்னொரு பக்கம், கொரோனா அதிகம் நம்மைத் தாக்காததில் நம்மை விட அதிகம் பயன்பெற்றது மோடிஜி தான். ரோஹித் ஷர்மா முப்பதாவது ஓவரில் சதம் அடித்ததும் என்ன நினைப்பார்? அடுத்த இருபது ஓவர்களும் ஆடி இதை இரட்டை சதமாக்கலாமே என. மோடிஜியும் அப்படித்தான் யோசிக்கிறார்.
இப்போதைக்கு இது நிர்வாகம் அல்ல அரசியல் (என்றைக்குமே அப்படித்தானே என கேட்காதீங்க).
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பரவலாகிய போது மோடிஜி அரசு மீது அதிருப்தி தொன்றியது உண்மை. அதனால் பதற்றம் ஏற்படத் தான் அவர் தில்லியில் குண்டர்களை அவிழ்த்து விட்டு போராளிகளைத் தாக்கி கொல்ல வைத்தார். மாணவர்களை கல்லூரிக்குள்ளும் விடுதிக்குள்ளும் புகுந்து அடிவெளுக்க வைத்தார். பலவந்தமாக போராளிகளை தெருவில் இருந்து அகற்றினார். அது அவர் மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி விட்டது. ஆனால் நமது மோடிஜிக்கு மக்களின் மறதி மீது நம்பிக்கை அதிகம்; அவருக்குத் தெரியும் தனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் ஒரு நல்வாய்ப்பு வரத்தான் போகிறது என – அப்படி எதிர்பாராமல் வந்தது தான் கொரோனா. கொரோனாவை எதிர்கொள்ள இந்த அரசு எந்த விதத்திலும் தயாராக இல்லை. அதற்காக பணம் செலவழிக்கவும் தயாரில்லை. ஆனால் மோடிஜி இதை வைத்து தன்னுடைய பெயரை எப்படி மேம்படுத்ததலாம் என்று மட்டுமே யோசித்தார். அப்படி ஆரம்பித்தது தான் இந்த ஊரடங்கு உத்தரவும், அதை ஒட்டி அவர் வெளியிட்டது நெஞ்சுருக வைக்கும் காணொளிகள். எவ்வளவு ஆபத்தான, எதிர்மறையான சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் மோடிஜியின் இந்த திறமையை நாம் எவ்வளவு பாராட்டினாலும் மிகாது.
ஊரடங்கை மோடிஜி ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்றினார் – பால்கனியில் நின்று மக்கள் கைதட்டினார்கள், விளக்குகளைக் கொளுத்தினார்கள், சத்தமிட்டார்கள், பட்டாசு வெடித்தார்கள். கொரோனாவின் தாக்கம் எதிர்பாராதபடி குறைந்துள்ளதையும் அவர்கள் மோடிஜியின் நல்லாட்சியின் விளைவாகவே கண்டார்கள். இப்போது இதை உணர்ந்துள்ள அவர் ஊரடங்கை இன்னும் ஒரு மாதம் நீடித்தால் என்ன என யோசிக்கலாம். அவ்வப்போது ஊடகங்களில் தோன்றி மக்களின் நெஞ்சை நக்கும்படி பேசி அவர்களுக்கான ஒரே ஆபத்பாந்தன் தானே, தான் மட்டுமே என நிறுவிடவும் அவரால் முடியும்.
இதனால் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு செல்லப் போவதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். டிமானிடைசேஷனின் போதே அவர் கண்டுகொண்ட உண்மை இது – மக்களுக்கு தற்காலிகமான சிரமங்களைப் பற்றியோ எதிர்கால அழிவுகளைப் பற்றியோ கவலையில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு நம்பிக்கை; ஒரு கனவு; ஒரு லட்சியம். அதை மோடிஜி கொடுத்து விடுகிறார். அந்த நம்பிக்கையை செயலாக நிகழ்த்தும் போது அவர் மக்களையும் அதில் பங்கெடுக்க வைப்பார். அப்படிப் பங்கெடுப்பவர்கள் போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்க அடிமைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கு போதை மருந்து தரும் கனவுலகம் ஒரு empowerment (தன்மேம்பாடு).
டிமானிடைசேஷன் காலத்தில் மக்கள் பணத்துக்காக தெருத்தெருவாக அலைந்தார்கள். வரிசையில் நின்று களைத்து விழுந்தார்கள்; உயிர்விட்டார்கள். ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் தாம் ஒரு மகத்தான லட்சியத்துக்காக – கறுப்புப் பணத்தை ஒழிப்பது – செயலாற்றுவதாக உணர்ந்தார்கள். அவர்கள் மோடியும் தாமும் ‘ஒன்றே’ என உணர்ந்தார்கள். கறுப்புப் பணத்தைப் பதுக்கிய பணக்காரர்கள் இப்போது ஏமாளிகளாகி தவிப்பதை நினைத்து உவகை அடைந்தார்கள். அந்த சாதனையில் தமக்கும் பங்கிருப்பதை எண்ணி புளகாங்கிதம் கொண்டார்கள். டிமானிடைசேஷனால் இந்திய பொருளாதாரம் மீட்க முடியாதபடிக்கு குப்புற விழுந்தது. ஆனால் அதே வேளையில் தான் மோடியின் புகழும் பல மடங்கு உயர்ந்தது.
கொரோனா லாக்டவுனின் போது இதுவே தான் நடக்கிறது – மக்கள் துன்புறுகிறார்கள்; கூட்டங்கூட்டமாய் நடந்து ஊருக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு நடந்து போகிற வழியில் சாகிறார்கள். பலர் வேலையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு ஊதியம் குறைக்கப்படலாம். வாங்கிய கடனைக் கட்ட முடியாது. வாடகையை கொடுப்பது எப்படி எனத் தெரியாது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் இதே சமயத்தில் தான் மக்கள் தாம் ஒரு மகத்தான இலக்குக்காக போராடுவதாக நினைத்து மகிழ்கிறார்கள். அவர்கள் சிரித்தபடி அழுகிறார்கள்; அழுதபடி சிரிக்கிறார்கள். மோடிஜி எனும் கொரோனா கொண்டானை எண்ணி கையெடுத்து வணங்குகிறார்கள். அவருக்காக விளக்குகளைக் கொளுத்தி வைத்து வாழ்த்துகிறார்கள். மோடிஜியின் புகழ் நூறு மடங்கு அதிகரிக்கிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர அவர் வேறொன்றும் பண்ணவில்லையே என நீங்கள் கேட்கலாம். இல்லை, அவர் இந்த சூழலில் மக்கள் தம்மை முக்கியமானவர்களாக நினைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். தமது துன்பங்களை தியாகம் என நம்புவதற்கு வழிவகை செய்தார். நாட்டின் அரசியல் நிர்வாகத்தில் தமக்கும் பங்குண்டு, தாமின்றி மோடிஜியால் ஒரு அங்குலமும் நகர முடியாது என பெருமிதம் கொள்ள வைத்தார். எப்படியான துன்பங்களையும் மக்களுக்குக் கொடுக்கும் போது கூடவே ஒரு நியாயத்தை, நம்பிக்கையை அதனோடு கொடுத்தால், அதைக்கொண்டு இந்த அவஸ்தைகளை மகத்தானவவையாய் நினைக்க வைத்தால் மக்கள் துன்பங்களை கொண்டாடுவார்கள் எனும் உளவியலை மோடிஜி அளவுக்கு புரிந்து கொண்டவர் வேறில்லை என நான் சொல்ல மாட்டேன். எப்படி?
ஏற்கனவே ஹிட்லர் உலகப்போரின் கொடுமைகளை, பீதியை உன்னதமான வாழ்நிலைகளாக ஜனங்களை நம்ப வைத்திருக்கிறார். மோடிஜி அன்றாட வாழ்க்கையையே ஒரு ‘உலகப்போராக்கி’ மக்களை உணர்வெழுச்சி கொள்ள வைப்பதில் வல்லவர் என்பது தான் வித்தியாசம். உலகப்போரை நீடிக்க முடியாது, அது அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதாலே ஹிட்லர் வீழ்ந்தார். ஆனால் அன்றாடங்களில் உலகப்போரைக் காணும் ஒரு தலைவனுக்கு வீழ்ச்சியே இல்லை. (மோடிஜி வாழ்க வாழ்க)
இந்த ஊரடங்கு நிச்சயம் ஒருநாள் முடிவுக்கு வரும்; அன்று மோடிஜி ஒரு மிகப்பெரும் விழா எடுப்பார். அதில் பல பிரபலங்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். அது டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகும். அன்று அற்புதமான குர்தாவும் அதற்கு பொருத்தமாக தலைப்பாவும் அணிந்து பளிசென்று தோன்றுவார் நமது மோடிஜி. மைக்கின் முன்பு ஸ்டைலாக வந்து நின்று உணர்வு கொப்புளிக்கும் உரையொன்றை நிகழ்த்துவார். அன்று ஒவ்வொரு குடிமகனும் பெருமிதத்தில் கண்ணில் நீர் வழிய கைதட்டுவான்.
கொரோனா எனும் இந்த படம் பாகுபலியை விட மிகப்பெரிய வெற்றி என, வைர விழா கொண்டாட்டத்தில் பாரத மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மோடிஜி கைகூப்பி கண்கள் ஈரமாய் மின்ன சொல்லி முத்தாய்ப்பாக முடிப்பார்.
எங்கே, ஒருமுறை ஜோரா கைதட்டுங்கள்!