அதிமுக அமைச்சர்களின் அடாவடிகள் என்பது அன்றாட அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது மட்டுமல்ல, பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய அடிப்படை நாகரிகங்கள் மனிதப்பண்புகளையும் கூட மீறிவருகின்றனர்.
முதுமலை யானை முகாமுக்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’இங்க வாடா’ என்று ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொல்லியது சர்ச்சை ஆகி உள்ளது. வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வட நாட்டில் ஏற்கனவே நடந்துள்ளன. ஊடகங்களில் அது சர்ச்சையும் ஆகி உள்ளது. ’ ஒரு சின்ன உதவிதானே.. இதில் என்ன இருக்கிறது?’’ என்று வாதிடக்கூடியவர்களும் இங்கு இருப்பார்கள்.அமைச்சரின் குற்றம் எங்கிருந்து தொடங்குகிறது?
முதலாவதாக அமைச்சரின் தோரணை. ஒரு வேலைக்கார சிறுவனை அழைப்பதுபோல அவர் யாரோ ஒரு சிறுவனை அழைக்கிறார். தன் செருப்பைக் கழற்றிவிடும்படி அவனுக்கு உத்தரவிடுகிறார். அவரது குரலும் உடல் மொழியும் காலகாலமாக உயர்சாதிப் பண்ணையார்கள் தலித்துகளை நடத்தும் அதே பாணியிலானது. அந்த மனோபாவம்தான் அவரது செயலில் வெளிப்படுகிறது. இதுவே ஒரு உயர்சாதி அடையாளங்களுடன் உள்ள ஒரு மாணவனாக இருந்தால் அமைச்சர் இந்த தொனியில் உத்தரவிடுவாரா?
இரண்டாவதாக ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொது இடங்களில் இழிவாக நடத்துவதற்கு எதிராகவும் இழிசொற்களை உபயோகிப்பதற்கு எதிராகவும் கடுமையான விழிப்புணர்ச்சி நிலவும் காலம் இது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இன்றும் எவ்வளவோ கொடுமைகள் நிலவியபோதும் அதற்கு எதிரான கண்டனங்களும் சட்ட நடவடிக்கைகளும் வலுவடைந்து வருகின்றன. ஆனால் இதெல்லாம் அமைச்சரின் உணர்வையோ அறிவையோ எட்டியிருப்பதாக தெரியவில்லை. அவர் வேறொரு உலகத்தில் வாழ்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது
மூன்றாவதாக ஒரு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் பொது வாழ்வில் அனைத்து தரப்பினரின் கண்ணியத்தையும் அனுசரிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர். அவர் தரக்குறைவான வார்தைகளைப் பயன்படுத்துவதோ அல்லது கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபடுவதோ அந்தப் பதவிக்கான அனைத்து மதிப்பையும் மீறுகிற செயல்.
நான்காவதாக, செருப்பு என்பது இந்திய மரபில் ஒருவரை அவமதிக்கும் ஒரு குறியீடு. செருப்பால் அடிப்பதோ செருப்பை எடுத்துக்காட்டுவதோ செருப்பை தொடச் சொல்வதோ ஒருவரது மனித மாண்பை இழிவுபடுத்தும் வழிமுறையாக இங்கே கையாளப்படுகிறது. அமைச்சர் செயல் அந்த வகையிலும் குற்றத் தன்மை உடையதாகிறது
ஐந்தாவதாக அமைச்சர் தன் செருப்பை தானே கழற்ற முடியாத அளவு உடல் நலக்குறைவுடன் இல்லை. அவர் தானே குனிந்து அதை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறார். எனவே ஒரு சிறுவனை அழைத்து அந்த வேலயை செய்யச் சொல்வது ஒரு மமதைமிக்க அதிகார செயல்பாடு.
திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களின் ட்ராக் ரிகார்ட் என்னவென்று பார்த்தால் இதுபோன்ற மோசமான செயல்களின் சாதனைகளின் மணிமகுடத்தில் இன்னொரு வைரம் என்றே சொல்லவேண்டும்.