மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் சற்று விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது. தற்போது அமமுக கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதல் தொடர்பான சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை, அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சித்து பேசிய ஆடியோ ஒன்று வெளியானதுதான் பெரும் பரபரப்புக்குக் காரணம்.
அதிமுக, அமமுக பிளவு
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டு கட்சிகளாகப் பிரிந்தன. அவை, அதிமுக மற்றும் அமமுக என்று செயல்பட்டுவருகிறது. அதிமுக கட்சியின் பெயருக்கும், சின்னத்திற்கும் இரு தரப்பினரும் உரிமை கொண்டாடிவந்த நிலையில், ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்புக்குச் சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுவருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும், அமமுகவில் டிடிவி தினகரன், சசிகலாவும் தலைமை ஏற்றுச் செயல்பட்டுவருகின்றனர்.
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவிற்கு சென்றதால் தனது ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவந்தார். அமமுக கட்சி தொடங்கியது முதல் அக்கட்சிக்கும் டிடிவி தினகரனுக்கு முழு நம்பிக்கைக்குரிய ஒருவராக இருப்பவர் தங்க தமிழ்ச்செலவன்.
தேர்தலில் தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன்
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு எதிராக அமுமுக கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால், ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாமல் தோல்வியைத் தழுவியது. சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால், அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.
இதைதொடர்ந்து, அமமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், அமமுகவின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட மகேந்திரன் ஆகியோர் உட்பட அமமுகவினர் சிலர், தங்க தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், விரைவில் தேனிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகின.
விமர்சனத்துக்குள்ளான ஆடியோ
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்செல்வன் நேற்று (ஜூன் 24) ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமல் தனியாகக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதற்கிடையில், டிடிவி தினகரனின் உதவியாளருடன், தங்க தமிழ்ச்செல்வன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்க அழிஞ்சிபோயிடுவீங்க.” என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசியதும், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்ததும் அந்த ஆடியோ மூலம் தகவல் வெளியானது.
என்ன கட்சியிலிருந்து நீக்க வேண்டியதுதானே?
இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த ஆடியோ சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், “கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிசெய்ய வேண்டும் என்று கூறினேன். அதை கண்டிக்காமல் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்புவது மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது. எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் கட்சிப் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் என்னை நீக்க வேண்டியதுதானே? ஏன் என்னைப் பற்றி அவதூறு பேசவேண்டும்? இதற்குமேல் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை.” என்று தெரிவித்திருந்தார்.
அமமுகவின் மூத்த நிர்வாகியான புகழேந்தி, “தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது. இவரை அதிமுகவில் யாரும் ஏற்கமாட்டார்கள். ஒரு கட்சியைப் பாதிப்படையச் செய்பவர்களை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.” என்று கூறினார்.
பொட்டி பாம்பாக அடங்குவார் தமிழ்ச்செல்வன்
இதற்கிடையில், தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார் டிடிவி தினகரன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “யாரையும் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. தங்க தமிழ்செல்வனை ஊடகங்களில் சரியாகப் பேசும்படி கூறினேன். சரியாகப் பேசாவிட்டால் பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும் எனக் கூறினேன்.” என்று தெரிவித்தார்.
தங்க தமிழ்ச்செல்வனுக்கும் உங்களுக்கும் என்ன மனஸ்தாபம்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எங்களுக்குள் மனஸ்தாபம் இல்லை. அவர் மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவர் என்னிடம் வராமல் எடப்பாடி பழனிசாமியுடனே இருந்திருக்கலாம்” என்று பதிலளித்தார்.
மேலும் “தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம்லாம் எடுக்க முடியாது. என்னைப் பார்த்தால் அவர் பெட்டிப் பாம்பாக அடங்குவார். இனி தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க முடியாது. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்று கூறினார் டிடிவி தினகரன்.
மேலும் பேசிய அவர், “எனக்கு அறிவுரை சொல்ல தங்க தமிழ்செல்வன் யார்? எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்க தமிழ்செல்வனுக்கு வாடிக்கை. என்னிடம் நேரடியாக எதுவும் கூறாமல் பேட்டி கொடுப்பார். பின்னர் வந்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். தேனியில் தங்க தமிழ்செல்வன் ஜெயிக்க முடியாது என எனக்கு தெரியும். மதுரை அல்லது திண்டுக்கல்லில் அவரை நிற்கச் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்து அவரின் பதவியை காலி செய்துவிட்டன.” எனத் தெரிவித்தார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “18 எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும்? திமுக கொண்டுவந்துள்ள சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்.” எனத் தெரிவித்தார்.