தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 46 வாக்குசாவடியில் தவறு நடந்துள்ளதாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் மே 19ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது.
50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை கோவையிலிருந்து தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நில்லையில், சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று (மே 8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோயம்புத்தூரிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
“ஈரோடு, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது தவறு நடந்துள்ளது. எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதேசமயம் தவறு நடந்துள்ள 13 மாவட்டங்களில் தேனி, ஈரோட்டில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றாக்குறையில் உள்ளன. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி, ஈரோட்டிற்கு மாற்றப்பட்டன.” என்று தெரிவித்தார் சத்ய பிரதா சாஹூ.
மேலும் பேசிய அவர், “46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 46 இடங்களில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது எனத் தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு அளித்துள்ளார்.