தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற வாகன சோதனையில் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், பாதுகாப்பு பணிகளைத் தீவிரபடுத்தியுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 702 பறக்கும் படைகள், 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
வாகன தண்ணிக்கை தீவிரம்
கடந்த 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுவினர் சோதனை நடத்தியதில், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, பறக்கும் படையினர் மற்றும் காண்காணிப்பு நிலைக்குழுவினர் மூலம் இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 9 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாகன தண்ணிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
டாஸ்மார்க் கடைகளிலும் கண்காணிப்பு
டாஸ்மாக் மூலமாக வாக்காளர்களுக்கு மது வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவை, சந்தித்து ஆலோசனை நடத்தினார் மது விலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார். அப்போது, தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறித்த தகவலைத் தெரிவிக்கவும், முந்தைய மாத சராசரியைவிட 30% அதிக விற்பனை இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநில ஆயத்தீர்வைத் துறைகளுக்கு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும், கொள்முதல் மற்றும் விற்பனை அளவு குறித்த தகவலை அளிப்பதோடு, மொத்தமாக மது வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12க்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும்
வழக்கமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் முடிவடையும். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்கவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.