திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று இன்று (மார்ச் 11) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு
2019 மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், தற்போது 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தபடுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது எனவும், தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நேரத்தில் முன்னால் முதல்வரும், அதிமுகவின் பொதுசெயலாளருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிடம் அதிமுக சார்பில் போட்டியிடபோவதாக வேட்புமனுவில் கையொப்பம் வாங்கிய ஏ.கே.போஸ், தேர்தல் ஆணையத்திடம் அளித்தார். திமுக சார்பில் மருத்துவர் சரவணன் ஏ.கே.போஸ்ஸை எதிர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார்.
வெற்றி செல்லாது
ஜெயலலிதா வேட்புமனுவில் கையெழுத்திடாமல், கையெப்பம் வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக, சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிவந்ததாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸீன் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி மருத்துவர் சரவணன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். இவர் அரசு ஒப்பந்ததார்ர் என்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்.சுந்தர்ராஜ், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைதொடர்ந்து, கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முகாந்திரம் இல்லை என தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் சுந்தராஜ் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் தொகுதி
கடந்த 2016ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட்து. பிறகு மீண்டும் அதே ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். இடைத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இதனால் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரியும், சுயேட்சையாக போட்டியிட்ட கீதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.
விரைவில் தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார் மருத்துவர் சரவணன். உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு திமுக கட்சியின் சரவணன் சார்பில் வழக்கறிஞர் அருண் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளுடன் மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. இருதொகுதி தேர்தல் தொடர்பான வேறு வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கபடவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும்.” என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
”தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட கூடாது. தமிழகத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த நீதிமன்றமும் கூறவில்லை
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால், வேட்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அந்த தொகுதியில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தக்கூடாது என எந்த நீதிமன்றம் இதுவரை உத்தரவிடவில்லை. ஆனால், தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தலை நடத்த ஏன் தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அந்த தொகுதிகளில் மட்டும் தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது. இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை கூறிவரும் நிலையில், திமுகவின் வெற்றியை தாங்கிகொள்ள முடியாமல்தான் ஆளும் கட்சி இவ்வாறு செயல்படுவதாகும் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.