சில நேரங்களில் வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயங்கள் நம்மருகே வந்திருப்பதே உணராமல் நாம் தினசரி கடமைகளை இயல்பாகச் செய்து கொண்டிருப்போம்!…
ஜனவரி 31 (1976) அன்றும்கூட என் வாழ்க்கையோட ஒரு மிகப்பெரிய பேரலை என்னை நோக்கி வர்றதே தெரியாம நான் பாட்டுக்கு அந்த டீன் ஏஜ் வயசுக்கே உரிய விளையாட்டுத் தனத்துடன் காந்தியக்காவுடன் சேர்ந்து நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல இருந்து ரவா தோசை வரவழைச்சு சாப்பிட்டு, ராத்திரி வெகு நேரம் விழிச்சிருந்து சேலையில் எம்பிராய்டரி போட்டு முடிச்சுட்டு நிம்மதியா படுத்துத் தூங்கினேன்.
மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போதே கோபாலபுரம் வீட்டின் நிலை மிக வித்தியாசமாக இருந்தது.
தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது என்று முந்தின நாளே தெரியும். நேற்று டான்பாஸ்கோ பள்ளிக்கு முதல்வராக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மாமா, அந்த நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முதல்வராக இல்லை. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது!
ஆட்சி கலைப்பு பற்றி எனக்கு முந்தைய நாளே தெரிந்திருந்தாலும்கூட, அது ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்றோ, அதைத் தொடர்ந்து பின் விளைவுகளாகப் பல்வேறு தொடர் பிரச்னைகளில் அவர்கள் நசுக்கப்படுவார்கள் என்றோ எனக்குக் கொஞ்சமும் தெரியாது!
அன்று காலையில் கோபாலபுரம் வீடு இருந்த இருப்பில் எனக்கு அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. குறிப்பாக, என்னை வீட்டில் அனைவரும் பார்த்த கண்ணீர்ப் பார்வையில் ஏதோ விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்று மெல்லப் புரிந்தது.
நேரம் செல்லச் செல்ல கோபாலபுரம் வீட்டின் வெளியேயும் உள்ளேயும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது! தி.மு.க.வின் முக்கியமானவர்களை எல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் பதற்றத்துடன் கூடியதாகப் பரவிக் கொண்டிருந்தது..
முதல் நாள் இரவிலிருந்தே எங்க வீட்டுக்காரங்களைக் கைது செய்ய போலீஸ் வந்து காத்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை எங்கிட்ட சொல்ல பயந்துட்டு வீட்ல எல்லோரும் தயங்கித் தயங்கி நிக்கிறது எனக்குத் தெரிந்தது.
“உங்க வீட்டுக்காரரை மட்டும் இல்லை..மாறன் அண்ணனையும் கைது செய்ய காத்துட்டிருக்காங்க..அரசியல் வாழ்க்கையில் கைதாகிறது ஒரு பெரிய விஷயமில்லை.சகஜம்தான். போலீஸ் பிடிச்சுட்டுப் போயி நாலஞ்சு நாள்லேயே விட்டுடுவாங்க”ன்னு எல்லோரும் மாத்தி மாத்தி சமாதானப்படுத்தினாங்க. சாதாரணமாவே நான் ஏதாவது ஒண்ணுன்னா பட்னு அழ ஆரம்பிச்சுடுவேன்.. சினிமா காட்சிகள்ல யாரையாவது கைது செய்றது, ஜெயிலுக்குப் போறதுன்னு வந்தாலே தாங்க முடியாம நான் அழுதுடுவேன்.
இப்பத்தான் கல்யாணமான நிலைமையில் எங்க வீட்டுக்காரங்களுக்கே அந்த நிலைமைன்னதும் எனக்கு அழுகை முட்டிட்டு வருது..
மாமா (கலைஞர்) என் பக்கத்தில் வந்து என் தோளைத் தட்டிக் கொடுத்துப் பேசினது நல்லா ஞாபகம் இருக்கு.
‘ஒண்ணும் கவலைப்படாதே.. நாலஞ்சு நாள்ல திரும்ப வந்துடுவாங்க.. ஊருக்கெல்லாம் போனா நாலஞ்சு நாள் பிரிஞ்சிருக்கிற மாதிரி இதையும் நினைச்சுக்கோ!..’ன்னார் மாமா! நான் தலையை ஆட்டினேன்.
என் கிட்டே மாமா அந்தளவு பேசினது அதுதான் முதல் முறை.
மதியம் மூணு மணிபோல இருக்கும். வெளியே பயங்கர ஆரவார சத்தம்..எங்க வீட்டுக்காரங்கதான் வெளியூர் நிகழ்ச்சி முடிச்சுட்டு வந்திட்டாங்கன்னு சொன்னாங்க!
இவங்க வண்டியை விட்டு இறங்கினதுமே கட்சிக்காரங்க எங்க வீட்டுக்காரங்களைச் சுத்தி கூட்டம் கூடிட்டாங்க!… ஒரே ஆரவாரம், அழுகை கலந்த உணர்வுகள்!
எங்க வீட்டுக்காரங்க வந்தவுடனே மாமா (கலைஞர்) ‘உன்னைத் தேடி காவல்காரங்க வந்திருக்காங்கப்பா! மிசாவில் உன்னை அரெஸ்ட் பண்ணணுமாம்!..’னு சொல்லியிருக்காங்க!
சொல்லிட்டு இருக்கும்போதே மாமாவுக்கும் கண் கலங்கறதைப் பார்க்க முடிகிறது. பொதுவா மாமா எதுக்குமே கலங்க மாட்டார். ஒவ்வொரு தரமும் எலக்ஷன் ரிசல்ட் சொல்றப்போ எல்லோரும் பெரிய ஹால்ல தவிப்போட ரிசல்ட் கேட்டுட்டு இருப்போம். ஒருவேளை அந்த முறை தி.மு.க.வுக்கு தோல்வின்னா, வீட்ல எல்லோருமே ரொம்ப அப்செட் ஆயிடுவோம்.. யாரும் யார் முகத்தையும் பார்க்காம சுணங்கிப் போய் உட்கார்ந்திடுவோம்.
ஆனா மாமா மட்டும் உடனே அந்த நிமிஷமே அந்தத் தோல்வியை சமாளிச்சிட்டு ‘சரி வாங்க, சாப்பிட என்ன இருக்கு?’ ன்னு சகஜமா கேட்டுட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவார்.
எப்படித்தான் இவர் இப்படி இவ்வளவு கஷ்டங்களை லைட்டா எடுத்துக்கிறாரோன்னு தோணும்.. அதே சமயம், அப்படி இவர் எடுத்துக்கிட்டதாலதான் இன்னிக்கு இத்தனை அனுபவமுள்ள ஒரு சீனியர் அரசியல்வாதியா இருக்க முடியுதோன்னும் தோணும்!
அப்படிப்பட்ட மாமாவே அன்னிக்கு கலங்கினார்ங்கிறப்போ, வீட்டுப் பெண்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமாகி அது எங்க துக்கத்தை இன்னும் அதிகப்படுத்திடுச்சு..சுலபத்தில் கலங்காத மாமாவே கலங்கினதால் இந்த தரம் நடக்கிற கைது, மற்ற சமயங்களில் போல இல்லாமல் அதிக விபரீதமாக இருக்கப் போவுதுன்னு அவர் ஓரளவுக்கு உணர்ந்திருந்தார்னு அப்ப எங்க யாருக்கும் தெரியாது.
மாமா அப்படி உணரும்படி முதல்நாளே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது மாலை 6 மணிவரை மாமா முதல்வராக இருந்தபோது எந்தக் காவல்துறை அதிகாரிகள் மாமாவின் கட்டளையை ஏற்று நடந்து கொண்டிருந்தார்களோ அவர்களே, தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டவுடன் மாலை ஏழு மணிக்கு வந்து மாமாவிடம் ‘எங்கே உங்க மகன் ஸ்டாலின்? மிசா சட்டத்தில் கைது பண்ண வந்திருக்கோம்!’னு சொல்லியிருக்காங்க.
மாமாவுக்கு அப்பவே அந்த விபரீதம் புரிஞ்சிருக்குது. ஆனாலும் பதற்றப்படாம ‘அவன் கட்சி பிரச்சாரக் கூட்டத்துக்காக வெளியூர் போயிருக்கிறான். வந்தவுடன் நானே உங்களுக்குச் சொல்கிறேன்…நீங்க வந்து கைது பண்ணிக்கங்க’ன்னு சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னபடியே எங்க வீட்டுக்காரங்க மறுநாள் மதியம் வெளியூர்ல இருந்து வந்ததுமே, மாமா அதே காவல்துறை அதிகாரிகளைக் கூப்பிட்டு ‘என் மகன் ஸ்டாலின் வந்து விட்டான். வந்து கைது பண்ணிக் கொள்ளுங்கள்’னு சொல்லியிருக்கிறார்.
உணர்வுபூர்வமான இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்தப்போ, கோபாலபுரத்தில் விஷயம் தெரிந்த வந்த கட்சிக்காரர்கள், பிரமுகர்கள்னு கடல் மாதிரி கூட்டம் கூடிப்போய் இருந்திருக்கிறது.
வெளில நின்ன எங்க வீட்டுக்காரங்க ‘நான் வீட்ல எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டு வந்துடறேன்’னு உள்ளே வந்து ஆத்தாவும், தாத்தாவும் இருக்கற படத்துகிட்டே விழுந்து கும்பிட்டாங்க. வெளியூர் போனாலே இப்படிக் கும்பிடறது பழக்கமாச்சே! கும்பிட்டு வந்து ஒவ்வொருத்தர் கிட்டேயும் போயிட்டு வர்றேன்னு சொல்றாங்க!
அத்தையும்கூட மாமா மாதிரிதான் எப்பவும் பெரிசா கலங்க மாட்டாங்க. ‘இப்பத்தான் கல்யாணம் பண்ணி வச்சோம். இப்படி கைதுங்கிறாங்களே’ன்னு அவங்களும் கண் கலங்கறாங்க. மாமாவின் இரண்டு அக்காள்தான் (அத்தியும், அக்கம்மாவும்) எல்லோரையும் தைரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
செல்வியண்ணியோ ரொம்ப உணர்வுபூர்வமானவங்க. அவங்க அழுது அழுது மயக்கமே போட்டு விழுந்துட்டாங்க.
எங்க வீட்டுக்காரங்க தன்னோட அண்ணன் (அழகிரி), அண்ணி காந்தியக்கா, தம்பி தமிழரசுன்னு ஒவ்வொருத்தர் கிட்டேயுமா போய் ‘நா போயிட்டு வர்றேன்’னு சொல்லிட்டே வந்தாங்க. என் முறை வந்தது.
என்னைப் பார்த்து வர்றப்போவே கண் கலங்கி மேற்கொண்டு பேசக் குரல் எழும்பாம இவங்க நிற்க, எனக்கோ கரை உடைஞ்ச மாதிரி அழுகையாயிடுச்சு! அப்பிடியே இவங்க கை ரெண்டையும் பிடிச்சுட்டு அழுகையோட நான் நின்னுட்டேன்.
கல்யாணமாகி இன்னும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் சரியா பார்த்துக்கூட பேசிக்கலை..முழுசா அஞ்சு மாசம்தான் முடிஞ்சிருக்கு.. இப்பத்தான் ஒரு நெருக்கம் முகிழ்ந்து வர்ற நேரம்.. அதுக்குள்ள வீட்டுக்காரங்களுக்கு ஜெயில்னா, என்னதான் இது அரசியல் குடும்பமா இருந்தாலும் எப்படிப் பதறாம இருக்க முடியும்?
நான் விம்மி அழறதைப் பார்த்ததுமே இவங்க ‘நீ அழக்கூடாது.. நான் ஊருக்கு எங்காவது போனா 10 நாள் பிரிஞ்சு இருக்க மாட்டியா? அதுபோல நெனச்சுக்கோ… அப்பா கல்லக்குடி போராட்டத்தப்போ கைதான சமயத்தில் அம்மா எத்தனை திடமா மன உறுதியோட நின்னு அனுப்பி வச்சாங்க தெரியுமா? நீயும் என்னை மன உறுதியோட அனுப்பி வை.. நான் சீக்கிரமே வந்துருவேன்..’ன்னு தன் கைகளை என் கைகள்ல இருந்து விடுவிச்சுக்கிட்டாங்க.. என் பக்கத்தில இருந்த காந்தியக்காவைப் பார்த்து, ‘அண்ணி.. துர்காவைப் பார்த்துக்கங்க. ரொம்ப அழுவுது. நான் சீக்கிரமே வந்துருவேன்னு சொல்லுங்க’ன்னு சொல்ல அவங்களுக்கும் ஒரே அழுகை! இவங்க மறுபடியும் வெளிவாசலுக்குக் கிளம்ப மறுபடியும் கூட்டத்தில் உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பு!
காவல்துறை கொண்டு வந்த ஜீப்ல இவங்க ஏறிக்கிட்டாங்க..
அத்தை, அண்ணி,அக்கான்னு எல்லோருமே வெளி ஹாலுக்குப் போயிட நான் மட்டும் ஹால்ல இருந்தேன். என் பக்கத்தில வந்து நின்ன சி.எஸ்.ஜெயராமனின் (இவரோட தங்கைதான் மாமாவின் (கலைஞர்) முதல்தாரம் பத்மாவதி) மனைவி மாம்பலத்தம்மா ‘அழுவாதேம்மா… சீக்கிரம் வந்துருவாங்க..!’ன்னு என் தோள் பிடிச்சு ஆறுதல் சொல்லிட்டேருந்தாங்க.. நான் அப்பிடியே அவங்க மடியில சாஞ்சுட்டேன்.. மறுநாள் அவங்க வீட்ல ஒரு கல்யாணம் நடக்க இருந்தது. அதுவும் மாமா தலைமையில் நடக்கிறதா இருந்தது. இப்போ திடீர்னு இந்த அதிர்ச்சியை அவங்க எதிர்பார்க்கலே!
“போலீஸ் ஜீப் கிளம்பிடுச்சு”ன்னு ஒரே சத்தம்! எனக்கோ அழுகை கட்டுக்கடங்காம விம்மி விம்மி வருது.
வேன் போகப் போக கூட்டம் எல்லாரும் ஜீப் பின்னாலேயே போயிருக்காங்க. வீட்ல யாருமே இல்லே.. இவங்க அண்னனும் (அழகிரி) இவங்க தம்பி தமிழரசுவும் போலீஸ் ஜீப்ல இருந்த எங்க வீட்டுக்காரங்க கையைப் பிடிச்சுக்கிட்டே பின்னாலேயே ஓடியிருக்காங்க. போலீஸ் வண்டி கோபாலபுரம் மாநகராட்சி மைதானம் போற வரைக்கும் இப்படியே ரெண்டு பேரும் இவங்க கையை விடாம பிடிச்சுட்டே ஓடியிருக்காங்க. அப்புறம் போலீஸ் வண்டி வேகம் எடுக்கவும்தான் இவங்க கைப்பிடி தளர்ந்து அப்படியே நின்னுட்டாங்களாம்! பார்த்துட்டு வந்திருந்த எல்லாருமே இந்தக் காட்சியைத்தான் விவரிச்சு உணர்வுபூர்வமாக சொல்லிட்டு இருந்தாங்க.
அந்த போலீஸ் வண்டி கமிஷனர் ஆபீஸ் போகுது..சென்ட்ரல் போகுது..அங்கே போகுது இங்கே போகுதுன்னு மாத்தி மாத்தி தகவல் வருதே ஒழிய எங்கேதான் இவங்களைக் கொண்டு போனாங்கன்னு யாருக்கும் எந்தத் தகவலும் இல்லை. இவங்களுக்கு முன்னே கட்சியோட தலைமைக் கழகச் செயலாளர்களான ஆற்காட்டார், நீலநாராயணன், சிட்டிபாபு, செ.கந்தப்பன், கோவை ராமநாதன்னு பல முக்கியமானவங்களைக் கைது செஞ்சிருக்காங்க.. இப்படித் தமிழகம் முழுக்க எத்தனை பேரைக் கைது செஞ்சுட்டிருக்காங்க.. யார் யாரைக் கைது பண்ணினாங்கன்னு சரியான தகவல் யாருக்கும் தெரியலே. எல்லாம் வாய்மொழி செய்தியாத்தான் வந்துட்டு இருந்தது.
எங்க வீட்டுக்காரங்களைக் கைது செஞ்சப்போ மாறன் அண்ணனையும் சேர்த்தே கைது செய்யத் திட்டமிட்டிருந்தாங்கன்னு சொன்னாங்க. அப்போ மாறன் அண்ணன் டெல்லியில் இருந்ததால், சென்னைக்கு 3ஆம் தேதி தான் வந்து அரெஸ்ட் ஆகியிருக்கார். அந்த சமயம் அவரது மனைவி மல்லிகா அண்ணி, நீண்ட நாட்களுக்கு அப்புறம் கர்ப்பமாகி இருந்த நேரம் வேறு!
மல்லிகா அண்ணிக்கு, தன் வீட்டுக்காரர் அரெஸ்ட் ஆனது குறிச்சு கஷ்டம் இருந்தாலும்கூட அவங்க இது மாதிரி அரெஸ்ட் சந்தர்ப்பங்களை இதற்கு முன்னே நிறையத்தரம் பார்த்தவர்ங்கிறதால பெரிசா அழலே. தவிர, மல்லிகா அண்ணி இயற்கையிலேயே தைரியமானவங்க வேற… அதனாலேயோ அல்லது நாமே கஷ்டப்பட்டால், பாவம் புதுசா கல்யாணமான பெண்ணான இது எத்தனை கஷ்டப்படும்னு என்னை நினைச்சோ என்னவோ, அவங்க இந்த அரெஸ்ட் விஷயம் பத்தி பெரிசா அழுது அரற்றலே.
கல்யாணமாகி முதல் அஞ்சு மாசம் விளையாட்டுத்தனமா ஜாலியா இருந்துட்டு அப்புறம் மிசா பீரியடில் நான் பட்ட இந்தக் கஷ்டம் இருக்கே… மொத்த என் வாழ்க்கைக்கும் இது போதுமானதா இருந்தது. (2001இல் பதவியேத்துட்ட ஜெயலலிதா அரசு, எங்க வீட்டுக்காரங்களையும், நள்ளிரவில் தன் வீட்டில் தூங்கிக்கிட்டிருந்த மாமாவையும் கைது செய்த அந்தக் கொடுமையான சம்பவமும் என் நினைவில் இப்போ வந்து போகுது. அது பத்தி உரிய நேரம் வர்றப்போ பேசுவோம்).
மிசாவுக்கு அப்புறம்கூட எங்க வீட்டுக்காரங்க நிறையத்தரம் ஜெயிலுக்குப் போயிருக்காங்க.
சொல்லப்போனா, செந்து என் வயித்துல உண்டான விஷயத்தையே இவங்க வேறொரு சமயம் ஒரு ஜெயில்ல இருந்தப்போதான் நான் போய் இவங்ககிட்டே சொன்னேன். அப்போவெல்லாம் ஜெயில் பத்தின ஒரு கஷ்டமோ, துக்கமோ இல்லை… சொல்லப்போனா ஜாலியா போய் ஜெயில்ல இவங்களை சந்திச்சுட்டு வருவேன்.
ஆனா, மிசா ஜெயில் அப்பிடி இல்லே. தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரைக்கும்னு பார்த்தா, அப்பத்தான் கல்யாணமாகி கணவனும், மனைவியும் நெருக்கமா பழக ஆரம்பிச்ச ஒரு நேரத்தில திடீர்னு வந்து பிரிவை ஏற்படுத்தின ஒரு விஷயமா இருந்தது இது… அதையெல்லாம் விட வீட்ல எல்லோரையும் கலங்க வச்சது தி.மு.க.ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் மிசா கைதியாக உள்ளே போகும் இவங்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தப் போறாங்களோ என்ற நிலைமைதான்!…
இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, கைதானவங்களை எங்கே வச்சிருக்காங்கன்னே தகவல் தெரியாத ஒரு கொடுமைதான். எங்க வீட்டுக்காரங்களைக் கைது பண்ணி கொண்டுட்டுப் போனதுதான் தெரியும். ஒரு வாரம்…பத்து நாள்… இருபது நாள்னு ஆச்சு… எங்கே கொண்டுபோய் வச்சிருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது.
சிறைக்குக் கொண்டு போன கட்சியின் மற்ற முக்கியத் தலைவர்களையும் எங்க வச்சிருக்காங்க… எந்தத் தகவலும் இல்லை!
‘ரொம்ப அடிச்சுத் துவைச்சுட்டாங்களாம். உசிரோடத்தான் வச்சிருக்காங்களா.. இல்லையா’ன்னே தெரியலே!’ன்னும் அப்பப்போ நிறைய தகவல்கள் வரும்.. ஒவ்வொரு தகவலும் நடுங்க வைக்கும்.
கணவர் இருக்காரா… எங்கே இருக்கார்… எப்பிடி இருக்கார்னு கூட தெரியாத ஒரு நிலையில் புதுசா கல்யாணம் பண்ணின ஒரு இளம் மனைவியின் மனநிலை எப்பிடி இருக்கும்? நான் அந்த நிலையில்தான் இருந்தேன்..உடலில் உசிர் மட்டும் ஓடிட்டு இருந்தது!
***
‘மி சாவில் அரெஸ்ட் பண்ணிட்டு போனவங்கள எல்லாம் ரொம்ப அடிச்சுத் துவைச்சுட்டாங்களாம்… உசிரோடதான் வச்சிருக்காங்களா.. இல்லையான்னே தெரியலே’ன்னு தினத்துக்கு ஒரு தகவல் வந்து குலை நடுங்க வச்ச அந்த நேரத்தில் கோபாலபுரம் வீடே ஏதோ துக்கம் நடந்த வீடு மாதிரிதான் இருந்தது. வீடு எப்பவும் திறந்தேதான் இருக்கும். தமிழ் நாடு முழுக்க இருந்து யார் வேணும்னாலும் வருவாங்க. துக்கம் விசாரிக்கிற மாதிரியே வந்து ‘ஐயோ! இப்படி ஆயிடுச்சே’ன்னு ஒரு மூச்சு அழுவாங்க. கட்சிக்காரங்க, மிசாவில் அரெஸ்ட் ஆனவங்களோட வீட்டுப் பெண்கள்னு எந்நேரமும் யாராவது வந்துட்டேதான் இருப்பாங்க! அவங்க அழ ஆரம்பிச்ச உடனேயே அத்தை “ஏன் அழறீங்க.. எங்க மருமகளைப் பாருங்க. இந்தச் சின்னப் பொண்னே எவ்வளவு தைரியமா இருக்குன்னு.. கல்யாணமாகி அஞ்சே மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள எங்க பையனை ஜெயிலுக்குக் கொண்டு போயிட்டாங்க. இந்தப் பொண்ணு அதைப் பொறுத்துட்டு இருக்கலியா? அரசியல் குடும்பங்கள்ல இப்படி கைதாகிறது சகஜம்! இதுக்கெல்லாம் அழக்கூடாது. ஏன் அழணும்டி?’னு அத்தை, அழுதுட்டு வர்றவங்களை உரிமையா திட்டி ஆறுதல்படுத்தி அனுப்பிச்சு வைப்பாங்க.
இதுபோதாதுன்னு, ‘மெட்ராஸைப் பார்க்க வந்தோம், அப்படியே இங்கேயும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம். நீதான் அந்த புது மருமகளா?’ன்னு கேட்டு சும்மா ஒரு ஆர்வத்தில அல்லது அக்கறையில பார்க்க வந்தவங்களும் நிறைய.. ஒரு துக்க வீடுபோல, ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் போல, அப்போ கோபாலபுரம் வீடும் திறந்தேதான் கிடக்கும்.
முக்கியமா அரெஸ்ட் ஆனவங்களை எங்கே வச்சிருக்காங்க, எப்படி வச்சிருக்காங்கன்னு தெரியாததால் கைதானவங்க வீட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ரொம்ப அதிகம்.
கைதான சிட்டிபாபு அண்ணன் வீட்டிலிருந்து அண்ணிகள் ராஜி, கங்கா ரெண்டு பேருமே அந்த சமயம் இங்கேயேதான் இருப்பாங்க. மனசு வருந்தி யார் அழுதாலும் சரி.. அத்தை, உடனே தன் அனுபவத்தைச் சொல்வாங்க.
‘இதுக்கே இப்படி கஷ்டப்படறீங்களே! நானெல்லாம் இதுமாதிரி எத்தனையோ ஜெயில் அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கேன்! எங்க வீட்டுக்காரங்க எத்தனையோ தரம் அரெஸ்ட் ஆகி இப்படிப் போயிருக்காங்க. கல்லக்குடி போராட்டத்தில் இவங்க (கலைஞர்) கைதானப்போ, ஆறு மாசமா பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்தாங்க. அப்போ ஸ்டாலின் கைக்குழந்தை வேற. குழந்தையை தூக்கிட்டே இவரைப் பார்க்கப் போவேன்..நான் ஆறு மாசம் இருக்கலியா?”ன்னு சொல்ல,
“ஆறு மாசமா?” அவ்வளவு நாளா மாமா ஜெயில்ல இருந்தாங்க. யப்பா.. எப்படித்தான் உங்களால அவ்வளவு பொறுமையா மாமாவை ஜெயில்ல பிரிஞ்சு இருக்க முடிஞ்சதோ”ன்னு நான் அசந்து போவேன்.
அத்தை இப்படித் தன் அனுபவங்களை சொல்லிச் சொல்லி என்னையும், கஷ்டத்தோடு அங்கே வரும் மற்றவர்களையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்தப் பார்ப்பார்.
எங்க வீட்டுக்காரங்க ‘இதோ நாலைஞ்சு நாள்ல திரும்ப வந்துடுவாங்க. பத்து நாள்ல வந்துருவாங்க’ன்னு எல்லோரும் சொன்ன நாள் கெடு எல்லாம் முடிஞ்சும்கூட இன்னும் எங்க இருக்காங்கன்னு ஒரு அடிப்படை தகவல்கூட தெரியாத ஒரு நிலையில் இருந்ததைத்தான் என்னால் தாங்கிக்க முடியலே! அரெஸ்ட் ஆனவங்க என்ன ஆனாங்களோன்னு நாங்க இப்படித் தவியா தவிச்சுட்டு இருந்த நேரத்தில், இவங்களை நினைச்சு நாங்க எப்பிடி என்ன ஆனோமோன்னு உள்ளே ஜெயில்ல இருந்த இவங்கல்லாம் எங்களைப் பத்தின தகவல் தெரியாம தவிச்சுட்டு இருந்திருக்காங்க.. இதெல்லாம் எங்க வீட்டுக்காரங்களை அப்புறம் நான் பார்க்க நேர்ந்தபோது அவங்க தெரிவிச்ச விஷயங்கள்!
நான் இவங்களைப் பத்தி யோசிச்சுட்டு உட்கார்ந்துட்டே இருப்பேன்.. அப்படியே ஸ்விட்ச் போட்டதுபோல கண்ணுல இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக்கிட்டே இருக்கும்!
அந்த 16 வயசில், நான் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கஷ்டப்பட்டது அதுதான் முதல் முறை… சின்ன வயசிலும்கூட நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன்தான். 9 வயதில் அம்மாவை இழந்தேன்… 13 வயதில் என் பிரியமுள்ள தாத்தா, அதற்கடுத்த வருஷம் என் பாட்டி பாக்கியம் (அப்பாவின் அத்தை), அதற்கடுத்த வருஷம் என் பெரியம்மான்னு வரிசையா நிறைய சோகங்கள் அனுபவித்தேன்தான். ஆனால் சின்ன வயசிலேயே அம்மா தவறிட்டதால் எல்லோரும் என்னை ரொம்ப செல்லமா பார்த்துக்கிட்டாங்க. தவிர எங்க வீட்டுக்கு மட்டுமில்லே…எங்க தாத்தா, பெரியம்மா, சின்னம்மா, அத்தை, மாமா, அப்பாவின் ரெண்டு அத்தைகள் (அப்பாவுக்கு நாலு அத்தைகள். இதில் இரண்டு பேர் (காந்திமதி, பாக்கியம்) சின்ன வயசிலேயே கணவரை இழந்துட்டதால் எங்கள் வீட்டிலேயே இருந்தாங்க) எல்லோர் குடும்பத்துக்குமே, நான் வீட்ல பிறந்த முதல் பொண்ணுங்கறதால் ரொம்ப செல்லம்!
அப்படி செல்லமாவும், வெளியுலகம் அதிகம் தெரியாத சின்ன வயசுப் பொண்ணாகவும் இருந்ததால் எங்க வீட்டுக்காரங்களைக் கைது பண்ண விஷயத்தில் நான் எப்படிப் பாதிக்கப்படுவேனோன்னு அப்பா என்னைப் பத்தி ரொம்பக் கவலைப்பட்டிருக்காங்க.
எங்க அப்பா ரொம்ப நாளா சாமி கும்பிடாமலேயே இருந்தார். தன் உயிருக்கு உயிரான அன்பு மனைவி திடீர்னு இறந்ததில் மனசு வெறுத்துப் போய் சாமி கும்பிடறதையே விட்டுட்டார். அப்படிப்பட்டவர், எங்க வீட்டுக்காரங்க மிசாவில் கைதாகி நிலைமை இப்படி விபரீதமா போனதில் அப்படியே மாறி ‘இறைவனே சரணம்’னு எந்நேரமும் பூஜை புனஸ்காரம்னு ஆயிட்டார்!
தன் மாப்பிள்ளைக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு தினம் தினம் அதிகாலையிலேயே குளித்து, ஈரத்துணியுடன் பூஜையை ஆரம்பிச்சுடுவாராம் அப்பா! சுலோகங்கள் எல்லாம் வரிசையா சொல்லி கரகரன்னு கண்ணீர் விட்டு அழுதுடுவாராம்!
என் தங்கை சாருமதி இப்பக்கூட சுலோகங்கள், பூஜைன்னு எல்லாம் ரொம்ப கரெக்டா பண்ணும்! ஒண்ணுகூட விடாது.
“எப்பிடி, நீ எங்கே கத்துகிட்டே இத்தனை சுலோகங்கள், பூஜைகள் எல்லாம்?”னு கேட்பேன் ஆச்சர்யமா!
‘எல்லாம் உங்க வீட்டுக்காரங்க மிசா ஜெயில்ல இருந்த அந்த ஒரு வருஷத்தில நான் கத்துக்கிட்டதுதான். அப்பா தினம் அதிகாலையில் பூஜை செய்றப்போ என்னையும் தன் பக்கத்தில உட்கார வச்சுட்டு ஒரு பூஜை விடாம பண்ண வச்சு, ஆதித்ய ஹிருதயம், விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம், அபிராமி அந்தாதின்னு ஒரு சுலோகம் விடாம எல்லாத்தையும் சொல்லச் சொல்வாரு! ‘அக்கா வாழ்க்கை நல்லாயிருக்கணும். அத்தான் நல்லபடியா சீக்கிரமா ஜெயில்ல இருந்து திரும்ப வந்திடணும்’னு வேண்டிக்கிட்டே தினமும் இவ்வளவு ஸ்லோகங்களும் நானும் அப்பாவும் தினம் தினம் சொல்வோம்’னு சொல்லுச்சு சாருமதி. எனக்குக் கேட்கக் கேட்க அப்படியே உருகிப் போச்சு மனசு!
அந்த சமயத்தில் ஊர்ல தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு வேற பலர், பேசிப் பேசியே அப்பாவை ரொம்ப டீஸ் பண்ணியிருக்காங்க.
“என்னவோ பெரிய இடம் அது இதுன்னு பெரிசாக் கொண்டு போயி பொண்ணைக் கொடுத்தாரு… ஒழுங்கா நாலஞ்சு மாசம்கூட வாழல அந்தப் பொண்ணு. சரியா விசாரிக்காம கூட பொண்ணு கொடுத்தாரு..இப்ப என்னாச்சு பார்த்தியா?’’னு அவங்க நேரிடையாகவும், மறைமுகமா குத்தலாவும் அப்பா காதில் விழும்படி பேசப் பேச அப்பாவுக்குப் பயங்கர கோபம் வந்துடுச்சு!
அப்படிப் பேசின பலர்கிட்டே அப்பா அப்புறம் பேச்சுவார்த்தையே கூட விட்டுட்டாரு!
“நீ மனப்பூர்வமா சாமி கும்பிடும்மா! ஒண்ணும் ஆகாது.. மாப்பிள்ளை நல்லபடியா சீக்கிரமே திரும்பி வந்துடுவாரு’’ன்னு எனக்கு ஆறுதல் சொல்வாரு! அப்போல்லாம் என்னைப் பார்க்க அடிக்கடி கோபாலபுரம் வந்துடுவாரு.
அந்தச் சமயம் எனக்கும் ஒரு வைராக்கியம் பாருங்க.. எங்க வீட்டுக்காரங்க இல்லாம நான் எங்க ஊருக்குப் போக மாட்டேன்னு அந்த ஒரு வருஷமும் நான் சொந்த ஊர்ப்பக்கமே போகலே.
என் உணர்வு புரிஞ்ச மாதிரியே எங்க வீட்டுக்காரங்க ஜெயில்ல அந்த அடி உதை தாங்கிட்டு இருந்த நேரத்திலும்கூட என்னைப் பத்தி அதிகம் கவலைப்பட்டிருக்காங்க.
‘நான் ஜெயில்ல இருந்த நேரத்தில் உன்னைப் பத்திதான் அதிகம் கவலைப்பட்டேன். என்னன்னா, நமக்கு இப்பத்தான் கல்யாணமாகி இருக்கு… நீ வந்த நேரம், உன்னோட ராசிதான் இப்பிடி உங்க வீட்டுக்காரங்களை ஜெயிலுக்கு அனுப்பிடுச்சுன்னு யாராவது ஏதாவது உணர்ச்சி வசப்பட்டு எசகு பிசகாகூட பேசலாம்.. அதுபோல சில சூழ்நிலைகளையும் நீ தாண்டித்தான் இருக்க வேண்டியிருக்கும்.. நீ அதிகக் கஷ்டங்கள் இல்லாம வளர்ந்த பொண்ணு..ஏற்கனவே பிரிவுக் கஷ்டத்தில் நீ இருக்கப்போ, இது மாதிரி வேற கஷ்டங்கள் வந்தா நீ என்ன ஆவியோ, எப்படி இருக்கியோ, உணர்ச்சி வசப்பட்டு வேற மாதிரி விபரீதமா ஏதும் பண்ணிக்காம இருக்கணுமேன்னு நெனைச்சு ரொம்ப தவிச்சுப் போனேன்!’அப்டீன்னு சொன்னாங்க இவங்க..!
உண்மையில் எங்க வீட்டுக்காரங்க கவலைப்பட்ட மாதிரி எனக்கு எந்த மோசமான சூழ்நிலையும் ஏற்படலை.. காரணம் எங்க அத்தை, காந்தியக்கா, மல்லிகா அண்ணி, செல்வியண்ணி மாதிரி பலர் என் கூட எப்பவுமே தூண் மாதிரி பாதுகாப்பா இருந்ததுதான்! மல்லிகா அண்ணியையும்கூட மாறன் அண்ணன் இப்படித்தான் சில விஷயங்கள் பாதிக்காதபடி தயார்படுத்தி வச்சுட்டு ஜெயிலுக்குப் போயிருக்கார். அந்த சமயம்தான் மல்லிகா அண்ணி கர்ப்பம் ஆயிருந்தார் அப்டீங்கறதால யாராவது, இந்தக் குழந்தை உருவான நேரம்தான் இவங்கப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிச்சுடுச்சுன்னு யாரும் எதுவும் ஏடாகூடமா சொன்னாலும்கூட நீ அவங்க பேச்சைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது. குழந்தையைக் கட்டாயம் பெத்துக்கணும்னு மாறன் அண்ணன் உறுதியா மல்லிகா அண்ணிகிட்டே சொல்லிட்டுத்தான் போயிருக்கார்.
இந்த மிசா கைதுகள் அப்போ, திடீர் திடீர்னு யாரைப் பிடிச்சு உள்ள போடுவாங்க, எங்கே போடுவாங்க, எப்பிடி அடிச்சுத் துவைப்பாங்கன்னு எது வேணும்னாலும் நடக்கக் கூடும்கிற சூழல் இருந்த நேரம்!
அந்த நேரம் பாருங்க, கோபாலபுரத்தில் பல வருஷங்களா இருந்த தாயம்மாங்கிற சமையல்காரம்மாகூட மிசா ஏற்படுத்தின பயத்தில் வேலையை விட்டுட்டுக் கிளம்பிட்டாங்க.
அத்தை, ‘உன்னை யாரு என்ன செய்யப் போறா? ஏன் கிளம்பற? வீட்ல வேற எல்லோரும் அழுதுட்டு கிடக்கிறாங்க. பெரிய மருமக மாசமா இருக்கிற நேரம் வேற.. இவ்வளவு வருஷம் இருந்துட்டு இந்த மாதிரி சமயத்தில் கிளம்பறேன்னு சொல்றியே..இரு!’ன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்கூட அந்த சமையல்காரம்மா கேட்க மாட்டேன்னுட்டாங்க!
‘இல்லம்மா… எம் பையனுக்கு உடம்பு சரியில்லை. வரச் சொல்றான்’னு என்னென்னவோ சாக்குப் போக்கு சொல்லிட்டுக் கிளம்பிப் போயே போயிட்டாங்க.
அந்தம்மாவைக் குறை சொல்லியும் பிரயோஜனமில்லை. அந்த சமயத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு வரவே பலர் பயந்தாங்க. நிறையப் பேர் வராமலேயே இருந்தாங்க. கோபாலபுரம் வீட்டுக்கு வந்தாலே எங்கே தங்களையும் உள்ள தள்ளிடுவாங்களோன்னு பயந்தாங்க. நிலைமையும் அப்போ அப்படித்தான் இருந்தது!
‘மிசா வந்ததும்கூட ஒரு வகையில் நல்லதுதான். நம்ம பேர்ல உண்மையான அன்பு கொண்டவங்க யார் யார்னு தெரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பா இருக்குல்லியா?’னு அத்தை அதையும் ரொம்ப பாசிடிவாவே எடுத்துட்டாங்க!
வீட்ல சமையல்கார தாயம்மா போன அந்த நேரம், காந்தியக்கா இரண்டாவது குழந்தை சுமந்துட்டு இருந்த நேரம்.. அவங்களுக்கோ மசக்கையில வாந்தியா வரும். அவங்க கைக்குழந்தை வெண்ணியை வேற பார்த்துக்கணும். எனக்கும் நேரா ஸ்கூல் முடிச்சதும் கல்யாணமாயிட்டதால சமையல் எதுவும் தெரியாது. அதனால அந்த சமயம் இந்த சமையல் விஷயத்திலும் ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிட்டோம்!
அப்புறம் அத்தைகிட்டே கொஞ்சம் கொஞ்சமா சமையல் கத்துக்கிட்டு நானும் காந்தியக்காவுமே செய்ய ஆரம்பிச்சோம். காந்தியக்கா ரொம்ப வேகமா காய்கறி நறுக்குவாங்க. இரண்டு பாத்திரம் கழுவிட்டு வர்றதுக்குள்ளே முழுசா அத்தனை முட்டைக் கோஸையும் நறுக்கி முடிச்சுடுவாங்க. நானும் சமையல் கத்துக்கிட்டது அந்த சமயம்தான்!
நான் எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி யோசிச்சா எங்கே அழ ஆரம்பிச்சுடுவேனோன்னு வீட்ல எப்பவும் யாரவது என் கூட பேசிட்டே இருப்பாங்க.. நானும் ஏதாவது வேலை எடுத்துப் போட்டு செஞ்சுட்டே இருப்பேன். ரூம்ல தனியா நான் அழுதிட்டே இருக்கிறதைப் பார்த்துட்டு, மாமா அங்கே வந்தவர், நான் விபரீதமா ஏதாவது பண்ணிக்கப் போறேன்னு நினைச்சோ என்னவோ அந்த ரூம்ல இருந்த மாத்திரைகளை எல்லாம் எடுத்து அப்புறப்படுத்தச் சொல்லிட்டார். அந்த சமயம் என் தனிமையைப் போக்கினதில் முக்கிய உறுதுணையா இருந்தது குழந்தை வெண்ணிதான். அது நைட் எல்லாம் அழும்! சாமான்யத்தில் தூங்காது. அப்போ காந்தியக்காவும் 2வது முறை கர்ப்பமாகி மசக்கையில் கஷ்டப்பட்டதால், வெண்ணியை நான் தூங்க வைக்கிறேன்னு சொல்லி வாங்கி தொட்டில்ல போட்டு ஆட்டிட்டே இருப்பேன். குழந்தையோட சிரிப்பில், அழுகையில் அதைக் கொஞ்சுறதில் மனசு ஈடுபட்டுட்டு இருக்கிறதால் என் மனசு கஷ்டங்களை மறந்து கொஞ்ச நேரம் இருக்கும்.
மல்லிகா அண்ணி வீட்ல நான் போய் படுக்க ஆரம்பிச்சதும் அப்போதான். அண்ணி தான் கர்ப்பமா இருக்கிற நேரத்தில் கணவர் ஜெயில்ல இருக்காரேன்னு அவங்களும் அப்பப்போ கவலையில் உட்கார்ந்துடுவாங்க. ஆனா அதைப் பார்த்தா நான் இன்னும் நம்பிக்கை இழந்துடுவேன்னு அதை மறைச்சுப்பாங்க.
நான் என்னுடைய மனசை எப்படியெப்படியோ திசை திருப்பினாலும்கூட, கடைசியில் இவங்க என்ன நிலைமையில் இருக்காங்களோ, சாப்பிட்டாங்களோ, தூங்கினாங்களோன்னு இந்த சிந்தனையில் வந்து நிற்கும்.
என்னை ரொம்ப தொந்தரவு பண்ணினது, கன்னபின்னான்னு மிருக அடி அடிச்சுட்டாங்க அப்பிடின்னு கேள்விப்பட்டதுதான்! ஏற்கனவே சில மாசங்கள் முன்னேதான் இருந்து தேறின நிலைமையில் இவங்க எப்பிடி இதைத் தாங்கினாங்க. எப்பிடி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கவும் வழியில்லாம நாட்கள் போயிட்டிருந்த அந்த நிலைமை, நிஜமாவே நரகம் மாதிரிதான் இருந்தது.
எப்பிடியும் ஜெயிலுக்குத்தானே கொண்டு போயிருப்பாங்கன்னு என் கொழுந்தனார் காலைல எழுந்தவுடனே தன் ஃப்ரெண்ட்ஸை துணைக்குக் கூட்டிக்கிட்டு தினமும் சென்ட்ரல் ஜெயில் வாசல்ல போயி நின்னுட்டு ஏதாவது தகவல் தெரியாதா..யாரையாவது பார்த்து விசாரிக்க முடியாதான்னு அலைஞ்சுட்டு இருப்பாங்க.
இவங்க நல்லபடியா இருக்கணும்னு வேண்டிகிட்டு நான் ஒரு பெரிய நோட்டு முழுக்க ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பிச்சேன்..கைதான தினத்தில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் கழிச்சு இவங்க வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் தினமும் விடாம நோட்டு முழுக்க ஸ்ரீ ராமஜெயம் எழுதி முடிச்சேன்.
அதேபோல காலைல எழுந்ததுமே கோபாலபுரம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கிருஷ்ணன் கோவிலுக்குப் போயிடுவேன். எனக்கு மனசுக்கு ரொம்ப அமைதி தர்ற இடம் அது. அங்கே போய் கை கூப்பிட்டு கண்ணை மூடிட்டா அப்பிடியே என் கண்ணுல இருந்து அருவியா கொட்டும்.
செல்வி அண்ணி ‘வா, நாம கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்’னு என்னை மயிலாப்பூர் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அந்த ஒரு வருஷமும் தினமும் சாயங்காலம் ஆனாப் போதும், நாங்க ரெண்டு பேரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் வருவோம்!
யாராவது எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி ஏதாவது ஒரு சின்ன தகவல் சொல்ல மாட்டாங்களா…அவங்க எங்க இருக்காங்கன்னு ஏதாவது சேதி வராதான்னு நான் அலைபாய்ஞ்சுட்டு இருந்த அந்த நாட்கள்ல இவங்க கைதான இருபத்தி நாலு நாள் கழிச்சு ஒரு போஸ்டல் கார்டு வந்துச்சு. “நாங்க சென்னை மத்திய சிறையில்தான் இருக்கோம்.. எங்களைப் பத்தி கவலைப்பட வேண்டாம்”னு ரெண்டே வரியில் இவங்க கையெழுத்தோட ஒரு கார்டு… அவ்வளவுதான்! எனக்கு அப்படியே எங்க வீட்டுக்காரங்களையே நேர்ல பார்த்த மாதிரி ஒரு பரவசம் வந்துச்சு அந்தக் கடிதத்தைப் பார்த்ததுமே! அதே நாள்ல கொஞ்ச நேரம் கழிச்சு கோபாலபுரம் வீட்டு அட்ரஸுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தும் ஒரு போஸ்ட் கார்டு வந்தது! எங்க வீட்டுக்காரங்க பெயரைக் குறிப்பிட்டு அவங்க மனைவி நேர்ல வரவும்னு அதில இருந்தது.
***
எங்க வீட்டுக்காரங்க பத்தி ஏதாவது சேதி கிடைக்காதான்னு நான் அலைபாஞ்சுட்டு இருந்த அந்த நேரத்தில் ‘நான் சென்னை மத்திய சிறையிலதான் இருக்கேன்’னு இவங்க கையால எழுதின ஒரு போஸ்ட் கார்டு எங்க வீட்டுக்கு வந்தது மாதிரியே மத்திய சிறையில் இருந்து மாறன் அண்ணன் மனைவி மல்லிகா அண்ணிக்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது. இதே போலவே மாறன் அண்ணன் பேரைக் குறிப்பிட்டு ‘அவங்க மனைவி நேரில் வரவும்’னு அந்த லெட்டர்ல இருந்தது.
நானும் மல்லிகா அண்ணியும் எங்க ஒருத்தர் லெட்டர் பத்தி இன்னொருத்தர்கிட்டே காட்டறப்போவே எங்களுக்கு பயங்கர பரவசமாயிருச்சு! பின்னே, அவங்கவங்க கணவரை இத்தனை கஷ்டங்களுக்கு அப்புறம், இத்தனை பெரிய இடைவெளிக்கு அப்புறம் நேர்ல பார்க்கப் போறமே!
எங்க வீட்ல எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம்! ஒரு வழியா இவங்க எங்கே இருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுபோனது ஒரு பக்கம்- நாளைக்கு எல்லாருமே போய் நேர்ல பார்க்கப் போறோம்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம்..
நான், நீன்னு அன்னிக்கு வீட்ல எல்லோருமே ஜெயில்ல இருந்த இவங்களைப் பார்க்க ரெடியாயிட்டாங்க. வீட்டுக் குழந்தைகள்கூட கிளம்பி ரெடியாயிட்டாங்க. ஜெயில்ல இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட பழங்கள் ஏதும் தரலாமேன்னு கொஞ்சம் பழங்களும் கொஞ்சம் துணிமணியும் பையில போட்டு எடுத்துட்டோம்!
எல்லோரும் இரண்டு கார் நிறைய அடைஞ்சுட்டு கிளம்பிப் போனோம்!
சென்னை மத்திய சிறைச்சாலை!
சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த மரத்தடியில் எல்லாரும் இறங்கிட்டு என்னையும், மல்லிகா அண்ணியையும் மட்டும் உள்ளே அனுப்பி வச்சாங்க. ‘லெட்டர்ல அவங்கவங்க மனைவி பேர்தான் போட்டு வந்தது..அதனால நீங்க முதல்ல போய் பார்த்துட்டு வாங்க..அப்புறம் நாங்க பார்க்கிறோம்!’னாங்க. மணி மாலை மூணரை அல்லது நாலு இருக்கும்! அன்னிக்குத் தேதி பிப்ரவரி 25.
பிப்ரவரி 1ஆம் தேதி இவங்களை மிசாவில் கைது பண்ணதுக்கு அப்புறம் இவங்களை இத்தனை நாள் கழிச்சுப் பார்க்கப் போற சந்தோஷம், த்ரில் ஒரு பக்கம். ஆனா சிறைச்சாலையோட அந்தப் பெரிய கேட்டும், பெயர்ப்பலகையும், பார்த்தவுடனே பயத்தில் எனக்குக் கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடுச்சு! ஹார்ட் எல்லாம் பயங்கரமா அடிக்குது. அந்த வெயில் நேரத்திலேயும் கையெல்லாம் சில்லிட்டுப் போச்சு!
பக்கத்தில் இருந்த மல்லிகா அண்ணி கையை இறுக்கிப் பிடிச்சுட்டேன்.
சிறைச்சாலையோட அந்த பிரம்மாண்ட கதவுல ஒட்டி வச்ச மாதிரி ஒரு சின்னக் கதவு இருந்தது. அதைத் திறந்துதான் எங்களை உள்ளே விட்டாங்க.
அந்த சின்னக் கதவு வழியா நுழைஞ்சதும் நேரா இடது கைப்பக்கம் மாடி ரூமுக்குப் போகச் சொன்னாங்க. அதுதான் ஜெயில் சூப்பரின்டென்டெண்ட் வித்யாசாகரோட ரூம்! நாங்க அந்த மாடி ஏறினோம்.
மாடிப்படிகள்ல ஏர்றப்போவே கீழே பக்கவாட்ல ஜெயில் மைதானம் பெரிசாத் தெரியுது. அதில வெள்ளைக் கலர்ல அரைக்கால் சட்டை போட்டுட்டு நிறையக் கைதிகள் தெரியறாங்க. ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. நானும் மல்லிகா அண்ணியும் அந்தக் காட்சிகளைப் பார்த்ததுமே, ஒரே மாதிரி உணர்வுக்கு ஆட்பட்டோம். எங்க கண்கள் சொல்லி வச்ச மாதிரி அவங்கவங்க கணவர் இதில எங்காவது தென்பட மாட்டாரான்னு அவங்கள்ல ஒவ்வொரு முகமா தேட ஆரம்பிச்சிருச்சு!..ம்ஹும்!
அதுக்குள்ளே ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் வித்யாசாகரோட ரூம் வந்துடுச்சு!
உள்ளே வரச் சொன்னார் அவர். ‘நாந்தான் உங்களை வரச் சொன்னேன். உட்காருங்க’ன்னு அவர் சொல்ல, நாங்களும் அவருக்கு எதிர்த்தாப்ல இருந்த சேர்கள்ல உட்கார்ந்துட்டோம்!
சினிமால எல்லாம் காட்டுவாங்களே.. ஜெயில்ல இருக்கறவங்களை சந்திக்கப் போகும்போது கம்பி வலைக்குப் பின்னால அந்தப் பக்கம் அவங்க நிற்க, இந்தப் பக்கம் அவங்களைப் பார்க்க வேண்டியவங்க வந்து நின்னு பேசிப்பாங்க. நாமளும் அதுமாதிரிதான் போய் இவங்களை சந்திக்கப் போறோம்னு நெனைச்சுட்டு இருந்தேன். ஆனா இங்கே அதுபோல கம்பிவலை எதுவும் இல்லே.
ஒருவேளை இதோ நம்மகிட்டே பேசிக்கிட்டு இருக்காரே இந்த ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட், இவர் ரூம்லேயே இவங்களைக் கூட்டி வந்து உட்கார்த்தி வச்சு நம்மைப் பேச வைக்கப் போறாங்களோன்னு எனக்குப் பயங்கர சஸ்பென்ஸா இருந்தது.
அவர்கிட்டே இதுபத்திக் கேட்கலாம்னா ஒரே பயமா இருந்தது. எதிர்ல அவர் உட்கார்ந்திருந்ததால் மல்லிகா அண்ணிகிட்டேயும் கேட்க முடியலே!
அந்த ஜெயில் சூப்பரின்டெண்டெண்டே பேச ஆரம்பிச்சார்.
‘உங்க கணவரும் சரி, இவங்க கணவரும் சரி, மிசாவில் கைதான மத்தவங்களும் சரி, எல்லோரும் இங்கே நல்லாயிருக்காங்க. உள்ளே அவங்களை அடிக்கிறாங்க, கொடுமைப்படுத்தறாங்கன்னு எல்லாம் வெளில பேசிக்கிறாங்க. ஆனா அந்த விஷயமெல்லாம் பொய்! அதையெல்லாம் நீங்க நம்பாதீங்க! மிசாவில் கைதான எல்லோரையுமே நாங்க இங்கே நல்லா வச்சிருக்கோம்!’னு அவர் பேசிட்டே இருந்தார்.
எனக்கு எதுவுமே புரியல! எதுக்கு இந்த மனுஷர் இவ்வளவு நேரம் இப்போ நம்மகிட்டே பேசிட்டு இருக்கார்? போய் நம்ம வீட்டுக்காரங்களைக் கூட்டிட்டு வந்தா நாம பார்த்துப் பேசிட்டாவது இருக்கலாமே..எப்போ அவங்களை இவர் கூட்டிட்டு வரப்போறார்னு நான் ரொம்பக் கஷ்டத்தோடவே அவர் பேச்சைக் கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருந்தேன்.
ஆனா அந்த மனுஷர் தன் பேச்சை நிறுத்தற மாதிரியே இல்லை.
‘மிசாவில் கைதானவங்க எல்லாம் அரசியல் கைதிகள். அவங்களை நாங்க மரியாதையோடதான் நடத்தணும். அப்படித்தான் நாங்களும் நடத்திட்டு இருக்கோம். கைதானவங்களுக்கு மாத்துத்துணி எல்லாம் தந்திருக்கோம்.’
இப்படியே தொடர்ந்து அவர் பதினைஞ்சு நிமிஷம் போல மாத்தி மாத்தி இதையே பேசிட்டு இருந்தார். எனக்கும் மல்லிகா அண்ணிக்குமோ, இவர் எப்போ பேசி முடிச்சிட்டு இவங்க ரெண்டு பேரையும் உள்ளே கூட்டிட்டு வருவார்னு இருந்தது. இருந்தாலும் மல்லிகா அண்ணி அவர் பேசப் பேச, அவர் பேச்சுக்குப் பதில் கேள்விகளும் கேட்டுட்டே இருந்தாங்க.
‘நீங்களோ இவங்களை நல்லா வச்சிருக்கிறதா சொல்றீங்க..ஆனா கைதான இவங்களை எல்லாம் பயங்கரமா நீங்க அடிச்சதா வெளில சொல்றாங்களே?’ன்னு அவர்கிட்டே கேட்டாங்க. மல்லிகா அண்ணிதான் ரொம்ப தைரியமானவங்களாச்சே!
‘அதெல்லாம்தான் பொய்னு சொல்றேன்..இங்கே எல்லோருமே ரொம்ப நல்லா இருக்காங்க’ன்னு திரும்பவும் சொன்னார் அவர்.
‘சரி, அவங்களை நாங்க பார்க்கலாமா?’ன்னு உடனே அண்ணி கேட்டாங்க.
‘இல்லே… இப்போ நீங்க யாரையும் பார்க்க முடியாது! அதுக்கு முறைப்படி கவர்னர்கிட்டே இருந்து ஆர்டர் வரணும். அவர் ஆர்டர் தந்ததும், வந்து சந்தியுங்கன்னு லெட்டர் உங்க வீட்டுக்கு வரும்’னார் அவர்.
அவ்வளவுதான்.. இந்த அதிர்ச்சியை நாங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்கலே! கைது பண்ணி இவ்வளவு நாள் கழிச்சு லெட்டர் போட்டு, இவ்வளவு தூரம் வரவழைச்சுட்டு இப்போ பார்க்க முடியாதுன்னு இப்பிடி பட்னு சொல்றாரேன்னு கோபம், எரிச்சல், அழுகை, சோகம் எல்லாம் சேர்ந்து வந்தது.
‘நாங்க எங்க வீட்டு ஆண்களைப் பார்க்க முடியாதுன்னா, அப்புறம் ஏன் எங்களை மெனக்கெட்டு வரவழைச்சீங்க?’ன்னு பட்னு கோபத்தோட அண்ணி கேள்வி கேட்டாங்க.
‘இல்லே! எல்லோரும் இங்கே நல்லா இருக்காங்க. வெளில உலவுற பேச்சுக்கள் எல்லாம் பொய்… அவங்களை நல்லா வச்சிருக்கோம்னு சொல்லத்தான் உங்களை இங்கே வரவழைச்சோம்’னார் அந்த மனுஷர்.
எரிச்சலும் கஷ்டமுமா வெளில வந்தா, அங்கே ஆவலோட காத்திட்டு இருந்த எங்க குடும்பத்தினர் எல்லோரும், ‘என்ன ரெண்டு பேரையும் பார்த்தீங்களா? நல்லாயிருக்காங்களா? என்ன சொன்னாங்க?’ன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு முன்னால வர்றாங்க!
எங்களுக்கோ என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே! ரொம்ப சோகமா ‘அவங்களைப் பார்க்க முடியலே’ன்னு சொன்னோம். சிறையில் அந்த சூப்பரின்டெண்டெண்ட் சொன்னதையும் சொன்னோம். எல்லோருக்குமே பயங்கர ஏமாற்றமாயிடுச்சு.
இந்த ஏமாற்றம் தந்த ஒரு மன இறுக்கத்தில் எங்க கோபாலபுரம் வீடு இருந்தது அந்த நேரம். நல்லவேளையா அடுத்த இரண்டாவது நாளே அதாவது பிப்ரவரி 27 அன்னிக்கு அதே சென்னை மத்திய சிறையில் இருந்து லெட்டர் வந்தது. ‘குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் வந்து இவங்களைப் பார்க்கலாம்’னு அந்த லெட்டரில் எழுதியிருந்தது.
அன்னிக்கே, அதாவது லெட்டர் கிடைச்ச அதே 27ஆம் தேதியேதான் நாங்க இவங்களைப் போய்ப் பார்க்க வேண்டிய நாள்.
வீட்ல எல்லோருக்கும் ஒரே சந்தோஷம், இப்பவாவது நேர்ல பார்க்க முடியுதேன்னு.
அதனால அத்தனை பேரும் உடனே கிளம்பத் தயாராயிட்டோம்.
மாமா மட்டும் எங்களோட அன்னிக்கு இவங்களைப் பார்க்க சிறைக்கு வரமாட்டேன்னுட்டார்.
‘இல்லே… நான் இப்போ வரலே! மிசாவில் கைதான மத்தவங்களை எல்லாம் அவங்கவங்க வீட்ல இருந்து போய் சந்திச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் நான் போய் ஸ்டாலினையும் மாறனையும் பார்க்கிறேன்’ அப்டீன்னு நாங்க கூப்பிட்டப்போ பதில் சொன்னார்.
ஒரு கட்சித் தலைவரா மாமா அப்படி செய்ய நினைச்சது எனக்கு உண்மையிலேயே ரொம்பப் பிடிச்சிருந்தது. பெருமையாவும்இருந்தது.
அப்புறம் மாமாவை விட்டுட்டு நாங்களேதான் கிளம்பினோம்.
கிளம்பறப்போ இவங்களுக்கு அங்கே போடறதுக்கு வேற டிரெஸ் ஏதும் தந்தாங்களோ இல்லையோங்கிற கவலையில் இவங்க கட்டிக்க லுங்கி, உள்ளாடை, சாப்பிட பழங்கள் எல்லாம் கையோட எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டோம்!
இந்தத் தரம் ஜெயிலுக்குள்ள 6 பேர் உள்ளே போய் அவங்களைப் பார்க்க பெர்மிஷன் தந்தாங்க. அன்னிக்கு மாதிரியே நாலு மணிக்கெல்லாம் அங்கே போயிட்டோம்.
இன்னிக்கும் அதே ரூம்தான். ஆனா கண்டிப்பா இவங்களை நேர்ல பார்த்துடுவோம்னு தெரிஞ்சதால் உற்சாகமா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.
இவங்க வந்தா கிட்டே போய் பேசக் கூடாதுன்னு முன்கூட்டியே எங்களுக்குச் சொல்லிட்டாங்க.
அங்கே உட்கார்ற இவங்களுக்கும், எங்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி கட்டாயம் இருக்கணுமாம்!
அதுவே ஒரு சின்ன ரூம்.. பத்துக்கு பன்னிரெண்டு அடிபோல இருக்கும். அதில் ஒரு ஓரத்தில் டேபிள் சேர் போட்டு அந்த ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் உட்கார்ந்திருந்தார். கொஞ்சம் தள்ளி ஒரு சேர் இவங்களுக்காகப் போட்டிருந்தாங்க. அந்த சேர்ல இருந்து 6 அடி தூரத்தில் ஒரு நீளமான பெஞ்ச் போட்டு அத்தை, நான், மல்லிகா அண்ணி, இவங்க அண்ணன், செல்வி அண்ணி, செல்வம் அண்ணன், அமிர்தம் அண்ணன், மாமாவோட அக்காக்கள், அத்தி, அக்கம்மா, குழந்தைகள் புகழ், அன்பு, எழில்,கைக்குழந்தை வெண்ணி குட்டின்னு உட்கார்ந்திருந்தோம்.
சில நிமிஷங்கள்லேயே இவங்க வந்தாங்க!
ஃப்ரஷ்ஷா அப்பத்தான் குளிச்ச மாதிரி இருந்தது முகம். ஆனா உடம்பு மட்டும் கொஞ்சம் இளைச்சு இருந்தது. லுங்கி கட்டிட்டு, ஃபுல் ஹேண்ட் ஷர்ட் போட்டுட்டு வந்தாங்க.
எனக்கு சந்தோஷத்தில் நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது.
“நல்லாயிருக்கியாப்பா?”ன்னு அத்தை, மல்லிகா அண்ணி உட்பட வீட்டுப் பெரியவர்கள் கேட்க,
இவங்களும் ‘நல்லாயிருக்கேன்’னு பதில் சொல்றாங்க.
அடுத்த ரெண்டு மூணு அடி தூரத்தில் ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் உட்கார்ந்திருந்ததால் யாரும் ஜெயில்ல அடிச்சாங்களான்னோ, கொடுமை ஏதும் பண்ணினாங்களான்னோ எதுவும் பேசலை!
எனக்கு இவங்களைப் பார்க்கிறப்போவே கண்ல நீர் திரையிடுது. பளிச்னு நேருக்கு நேரா பார்க்கவும் முடியலே! நிறையப் பேசணும்னு மனசு துடிச்சாலும் எதுவுமே பேச வர மாட்டேங்குது.
இவங்களும் சரி, என் பக்கமே திரும்பாம வீட்ல மத்த எல்லோருடைய ஆர்வமான கேள்விகளுக்கும் பதில் சொன்னபடியே இருந்தாங்க.
‘எப்படியிருக்கீங்க?’ன்னு நானும் அன்னிக்கு கடைசிவரை கேட்கலே.
‘நீ எப்பிடி இருக்கே?’ன்னு அவங்களும் என்கிட்டே ஒரு வார்த்தை விசாரிக்கலே.
பிற்பாடு சில வருஷங்கள் கழிச்சு எனக்கும் இவங்களுக்கும் இடையே பேசிப் பழகறதில் இருந்த கூச்சங்கள் விலகினதுக்கு அப்புறம்,
‘நீங்க அன்னிக்கு ஜெயில்ல முதன்முதல்ல நான் பார்க்க வந்தப்போ எப்பிடியிருக்கேன்னு ஒரு வார்த்தைகூட என்கிட்டே கேக்கலியே’ன்னு நான் ஒரு நாள் கேட்டேன்.
‘கைது பண்ணி இவ்வளவு நாளாச்சே..எப்படியிருக்கீங்க?’ன்னு நீ கூடத்தான் என்னை விசாரிக்கலே.. நீ முதல்லே கேப்பேன்னு நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்னாங்க இவங்க. ‘நீங்க என்னை விசாரிப்பீங்கன்னு நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்’ன்னு சொன்னேன் நான்.
ஆனா, அன்னிக்கு எங்களோட அந்த முதல் ஜெயில் சந்திப்பில நான் ரொம்ப கேட்கணும்னு ஆசைப்பட்டாலும் என்னால் கூச்சத்தில் எதுவும் பேச முடியாமப் போனதே நிஜம். கோயில்ல சாமி சன்னதியில சாமி பக்கத்தில நின்னு கும்பிடறப்போ சாமியை நல்லா கண் திறந்து பார்க்காம, கண்ணை மூடிட்டு மனசுக்குள்ளே சாமி உருவத்தைப் பார்ப்போமே… அதுமாதிரி என் பக்கத்தில் இருந்த இவங்களை நேருக்கு நேர் பார்க்க முடியாம என் மனக்கண்ணுல இவங்க உருவத்தைப் பார்த்துட்டு இருந்தேன்.
திடீர்னு மல்லிகா அண்ணியோட பேச்சு அங்கே சத்தமா கேட்டது.
“ஏய்யா… (தம்பியான இவங்களை மல்லிகா அண்ணி இப்படித்தான் ஐயா போட்டுக் கூப்பிடுவாங்க) நீ முழுக்கை சட்டைதான் போடுவே..கரெக்ட்தான்! ஆனா எப்பவுமே சட்டையோட கையை மேலே தூக்கி விட்டுப்பியே. இன்னிக்கு ஏன் சட்டைக் கையை முழுசா போட்டு கைக்கு பட்டன் வேற போட்டிருக்கே?” என்று அண்ணி கேட்டபடியே திடீர்னு தோணின ஏதோ சந்தேகத்தில் இவங்க போட்டிருந்த சட்டையோட கைப்பாகத்தை வெடுக்னு மேலே இழுத்து விட்டாங்க. எங்க வீட்டுக்காரங்களோ, அக்கா, தன் சட்டையோட கையை மேலே இழுத்துடாம இருக்கணுமேன்னு ‘விடுங்கக்கா..விடுங்கக்கா.’ன்னு கீழே இழுத்து இழுத்து விடறாங்க.
சட்டை நீக்கின கைப்பகுதியில் நாங்க பார்த்த காட்சி எங்க எல்லோரையும் அதிர வச்சது-
அந்தக் கொடுமையான மிசா பீரியட், எப்படிப்பட்ட விளைவுகளை ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துச்சுன்னு முதன் முதல்ல நேரடியா வெளியுலகுக்குத் தெரிய வச்சது இந்த விஷயம்!
***
எங்க வீட்டுக்காரங்ககிட்டே மல்லிகா அண்ணி திடீர்னு தோணின ஒரு சந்தேகத்தில் “ஏய்யா! வழக்கமா சட்டைக் கையை மடிச்சுத்தானே விடுவே!.. ஏன் இப்போ முழுக்கையும் மூடும்படியா சட்டை போட்டிருக்கே?”ன்னு கேட்டு இவங்களோட சட்டைக் கையைத் தூக்கி விட்டுவிட, இவங்க பதறிப் போய் ‘விடுங்கக்கா..விடுங்கக்கா’ன்னு சட்டைக் கையை இழுத்து விடப் போராடிட்டு இருந்தாங்களே.. அப்போ அந்த நேரத்தில் சட்டைக்கையைத் தூக்கிவிட்டப்போ தெரிஞ்ச காட்சி அண்ணியை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கிடுச்சு! எங்க வீட்டுக்காரங்களோட வலது கையில் முழங்கை பக்கத்தில் அப்பத்தான் ஆறிட்டிருக்கிற பல காயங்களோட தழும்புகள் தெரிஞ்சது. ஆறடி தூரத்தில இருந்த எங்களுக்கே அந்தத் தழும்புகள் பளிச்சுனு கண்ணுல பட்டது!
‘ஐயோ…எவ்வளவு காயம்’னு எங்களை அறியாம கத்திட்டோம் நாங்க..
“ஐயோ பாவிகளா!..அடிக்கவே அடிக்கலேன்னாங்களே…இப்பிடி முரட்டுத்தனமா விளாசி வச்சிருக்காங்களே! இன்னும் வேற எங்கெங்கே காயம்பட்டிருக்கு?”ன்னு அண்ணி தன்னையுமறியாமல் கதறிவிட, அத்தனை பேருமே அந்தக் காயங்களைப் பார்த்து ஷாக்காயிட்டோம்!
தழும்புகளைப் பார்த்தவுடனே புரிஞ்சுக்க முடிஞ்சது இவங்களை எந்த மாதிரி மிருகத்தனமா அடிச்சிருப்பாங்கன்னு!
எனக்கோ மளுக்குனு கண்ணுல இருந்து தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு! இவங்களோ ‘அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா. வேறெங்கேயும் காயம் இல்லை!’ன்னு, சட்டையை இழுத்து விடறதிலேயே இருக்காங்க..
உடனேதான் நிலைமை புரிஞ்சது… அந்த அடிகள் பத்தியோ, காயம் பத்தியோ இப்போ இங்கே பேசினா ஜெயிலுக்குள்ள இருக்கிற இவங்களுக்குத்தான் பிரச்னை அதிகமாகும். இன்னும் அதிகமா அடிச்சிடப் போறாங்களோன்னு பயந்துட்டோம்.
யாரும் இதுபத்தி இனி இங்கே பேசாதீங்கன்னு சொல்லி ஜாடை காமிக்கிறாங்க வீட்டுப் பெரியவங்க எல்லோரும்.
எங்களுக்குப் பக்கத்தில் நாங்க என்ன பேசறோம்னு ஒவ்வொண்ணையும் கவனிச்சுட்டே இருந்தார் அந்த ஜெயில் சூபரின்ரென்ட்டெண்ட்!
அதனால அதுக்கப்புறம் இவங்ககிட்டே நாங்க யாரும் அடிகள் பத்தியோ, காயம் பத்தியோ பேசலை!
சரியா 20 நிமிஷங்கள்ல மறுபடி இவங்களை உள்ளே கூட்டிட்டுப் போயிட்டாங்க. இவங்களும் எல்லாருக்கும் வரோன்னு சொல்லிட்டு ரொம்ப இயல்பா கிளம்பி உள்ளே போறாங்க! எனக்கா கண்ணு கலங்குது. ஆனா மறுபடி அடுத்த வாரமே பார்க்க முடியும்னு எல்லோரும் சொன்னதால அந்தக் கஷ்டத்தை அப்போதைக்குத் தாங்கிக்க முடிஞ்சது!
நாங்க அன்னிக்கு மாறன் அண்ணனை ஜெயில்ல பார்க்க முடியலே. காரணம், அவருக்கு முதுகுவலிங்கிறதால் அன்னிக்கு ஜி.ஹெச்.ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. அதனால நாங்க அப்பிடியே ஜெயில்ல இருந்து கிளம்பி எதிர்த்தாப்ல இருக்கற ஜி.ஹெச்.சுக்குப் போய் மாறன் அண்ணனையும் பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்தோம்.
ஜெயில்லே இவங்களையும் சரி, அண்ணனையும் சரி ஒருத்தரையொருத்தர் பார்க்கவிடாம தனித்தனியாதான் வச்சிருந்திருக்காங்க!
இவங்களையும் இன்னும் 8 பேரையும் (மொத்தம் 9 பேர் அந்தச் சின்ன ரூம்ல இருந்திருக்காங்க) அடைச்சு வச்சிருந்த செல்லுக்கு நேர் மேலே மாறன் அண்ணன் இருந்திருக்கார். குளிக்க விடறப்போ அல்லது டாய்லெட் விடறப்போதான் அவசர அவசரமா பார்த்துக்க முடியுமாம்.
கடும்பசியில ‘சாப்பிடலாம்’னு கூழ் வாங்கினா அந்தக் கூழ்ல மண் அள்ளிப் போட்டுத் தருவாங்களாம்! ஐயையோ!.. கடும் பசிக்கு சாப்பிட விடாம ஏகப்பட்ட கொடுமையெல்லாம் பண்ணியிருக்காங்க!
மிசா நேரத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்கன்னு பிற்பாடு எங்க வீட்டுக்காரங்க அந்த விஷயங்களைச் சொல்லச் சொல்ல எனக்கு அப்படியே நெஞ்சே உருகிப் போயிடும்! இத்தனைக்கும் நான் மனசு கஷ்டப்படுவேன்னு மிசாவின் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் என்கிட்டே இவங்க சொல்லியிருக்காங்க.
அதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்த ஜெயில் சீன்களை வச்சு நான் கற்பனை பண்ணிப் பார்ப்பேன்.
ஏழெட்டுப் பேர்கூட தாராளமா நிக்க முடியாத அந்தச் சின்ன இடத்தில் ஒன்பது பேர், அதுவும் வளர்ந்த பெரியவங்க எப்பிடி மாசக்கணக்கில் இருந்திருப்பாங்க, படுத்துத் தூங்கியிருப்பாங்கன்னு நெனச்சு நெனச்சு பார்ப்பேன்! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
இவங்க ஒரு வருஷம் அடைக்கப்பட்டிருந்த அந்த இடமெல்லாம் எப்படி இருக்கும்னு பார்க்கணும்னு ரொம்பத் தோணும்!
அதுக்கப்புறம் 78இல் ஒருமுறை குற்றாலம் போனப்போ அப்படியே பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் போய் மாமா அங்க அடைக்கப்பட்டிருந்த இடத்தையெல்லாம் நேர்ல பார்த்துட்டு வந்தோம். ஜெயில் உள்ளே எப்பிடியிருக்கும்னு முதன் முதலா நான் பார்த்தது அப்பத்தான். அதுக்கப்புறம் 89இல் கட்சி நிகழ்ச்சி ஒண்ணுக்காக இவங்க அந்தமான் போனப்போ அப்போவும் அங்கே போய் அந்த ஜெயிலை நேர்ல பார்த்துட்டு வந்தோம் (அந்த அனுபவம் பற்றி பின்னர் விரிவா சொல்றேன்).
சமீபத்தில் நம்ம சென்ட்ரல் ஜெயிலை இடிக்கணும்னு பொதுமக்களுக்காகத் திறந்து விட்டப்போ நான் உடனே எங்க வீட்டுக்காரங்ககிட்டே கேட்டுக்கிட்டேன்.
“மிசா ஜெயில்ல நீங்க இருந்த அந்த இடத்தையெல்லாம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன். நேர்ல அது எப்பிடியிருக்கும்னு பார்க்க எனக்கு ரொம்ப விருப்பமா இருக்கு. போயி பார்த்துட்டு வரலாங்க”ன்னு நான் சொன்னேன். எங்க பையன், பொண்ணு, மருமகன், மருமகள்னு எல்லோருமே இதே விஷயத்தைச் சொல்லி ரொம்ப கேட்டுக்கிட்டதால நாங்க அப்போ சென்ட்ரல் ஜெயிலுக்குள்ள போயி எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துட்டு வந்தோம். எங்களோட மல்லிகா அண்ணியும் எழிலும் அருள்நிதியும் கூட வந்தாங்க. நானும் வர்றேன் மாமான்னு அன்புவும், அதோட பிள்ளைகளும்கூட அப்போ எங்களோட வந்தாங்க.
எங்க வீட்டுக்காரங்க உட்பட ஒன்பது பேரையும் அடைச்சு வச்சிருந்த அந்தக் கொட்டடியைத்தான் முதல்ல பார்க்கப் போனோம். அந்த சின்னக் கொட்டடியைப் பார்த்ததும் எனக்கு அப்பிடியே உடம்பே சிலிர்த்துப் போச்சு! “ஐயையோ! நாம அஞ்சாறு பேர் இங்க கொஞ்ச நேரம் இப்பிடி நிக்கிறப்போவே மூச்சு முட்டுதே.. எப்படி மாமா நீங்க ஒன்பது பேர் இதில மாசக்கணக்கில ராத்திரியும் பகலுமா இருந்தீங்க? ஐயோ சான்ஸே இல்லே”ன்னு எங்க மருமக கிருத்திகா நம்பவே முடியாம மறுபடி மறுபடி சொல்லிட்டே இருந்துச்சு..
“ஏன் தாத்தா உங்களை அடிச்சாங்க?”ன்னு அப்பப்போ பேரன் இன்பா இவங்களோட மடியில உட்கார்ந்து இவங்க முழங்கை தழும்பைத் தொட்டுப் பார்த்துட்டு இன்னமும்கூட கேட்டுட்டு இருக்கும்! இன்னமும் அந்தத் தழும்பு மிசாவோட நிரந்தர வடுவா இவங்க முழங்கையில அப்படியேதான் இருக்கு..
மாமா (கலைஞர்) முன்னெல்லாம் மீட்டிங்கில் பேசறப்போ எங்க வீட்டுக்காரங்க பத்தி பேச நேர்ந்தா அடிக்கடி குறிப்பிடற விஷயம் ஒண்ணு இருக்கு..
“மிசா மட்டும் இல்லாம இருந்திருந்தா இவ்வளவு தீவிரமா ஸ்டாலின் அரசியல்ல இறங்கியிருக்க மாட்டான். கட்சி பிரச்சாரக் கூட்டம், மீட்டிங், பிரச்சார நாடகங்கள்ன்னுதான் இருந்திருப்பான்.. அவனைத் தீவிர அரசியலுக்குக் கொண்டு வந்தது மிசாதான்!” அப்டீம்பார்.
உண்மைதான்.. மிசாவில இவங்க ஜெயில்ல இருந்த பீரியடும் அங்கே பட்ட வதைகளும் இவங்களுக்குள்ள ஒரு பெரிய பக்குவத்தையும், உறுதியான மனசையும், கட்சிப் பெரியவங்க மேல ஒரு மரியாதை கலந்த அபிமானத்தையும் குறிப்பா, கட்சிப் பணிகள்ல ஒரு தீவிரத்தையும் இன்னும் அதிகமா ஏற்படுத்தி விட்டிருக்கு!
***
நாங்க ஜெயிலுக்குப் போயி இவங்களைப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தும்கூட இவங்களுக்கு ஆறியும் ஆறாமலும் இருந்த அந்த முழங்கை காயத்தைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம்.
‘இவ்வளவு பெரிய தழும்பு வர்ற அளவுக்கு அப்போ எப்படி அடிச்சிருப்பாங்க?’அப்டீன்னுதான் பேசிக்கிட்டோம்.
‘நீயேன் சட்டைக் கையைத் தூக்கிவிட்டு காயத்தைப் பார்த்தே? இதை வச்சு அவங்க இன்னமும் அவனை அதிகமா அடிச்சுடப் போறாங்க’ன்னு அத்தையும் மத்த பெரியவங்களும் மல்லிகா அண்ணிகிட்டே தங்களோட பயத்தை வெளியிட்டாங்க. எனக்கும்கூட அதை நினைச்சு பயமாதான் இருந்துச்சு..
‘ஏன் அடிச்சாங்க? இனி யாரை எப்போ அடிப்பாங்க’ன்னு அந்த சமயத்தில் யாருக்கும் எதுவும் தெரியாததால், எல்லோருக்கும் அந்த பயம் இருந்தது.
‘அங்காளம்மா!இவங்க பட்ட கஷ்டம் போதும்.. உள்ளே இனி எந்தக் கஷ்டமும் இல்லாமப் பார்த்துக்கம்மா தாயே!’ன்னு நான் எங்க குல தெய்வத்தைதான் உருக்கமா வேண்டிக்கிட்டேன்.
ஆனா நாங்க பயந்த மாதிரி எதுவும் ஆகலே! மிசாவில் கைதானவங்களை முதல் இரண்டு நாட்களும்தான் அதுமாதிரி முரட்டுத்தனமா காட்டடி அடிச்சிருக்காங்க. நல்ல வேளையா அதுக்கு அப்புறம் அடிகள் எதுவும் இல்லே!
‘அதுவும்கூட சென்னையில் கைதான மிசா கைதிகளைத்தான் அடிச்சிருக்காங்க. மற்ற வெளியூர்கள்ல மிசா கைதிகளை இந்த மாதிரி எதுவும் மோசமா நடத்தலே’ன்னு அப்புறம் கேள்விப்பட்டோம்.
மிசாவில் கைதான அத்தனைபேரின் குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் அப்போ இந்த பயங்கள், குழப்பங்கள்னு நிறைய இருந்தது. எல்லோருக்குமே தங்கள் குடும்பத் தலைவரை ஜெயில்ல சந்திச்சுப் பேசினப்புறம்தான், அதுவும் ஒண்ணுக்கு நாலுமுறை சந்திச்சுப் பேசின அப்புறம்தான் ஒரு சில மாசங்கள் கழிச்சு அந்த பயங்களும் குழப்பங்களும் தீர்ந்துச்சு!
முதல் இரண்டு நாளுக்கு அப்புறம் யாரையும் அடிக்கலேன்னாலும்கூட சென்னையில் கைதான மிசா கைதிகளுக்கு ஜெயிலுக்கு உள்ளே மத்த கொடுமைகள் தொடர்ந்து நடந்திருக்கு! ஆனா, அந்தக் கொடுமைகள் பத்தியும்கூட எங்க வீட்டுக்காரங்க என்கிட்ட அதிகம் சொன்னதில்லே. சிட்டிபாபுவின் சிறை டைரியைப் படிச்சும், மத்தவங்க சொல்லக் கேள்விப்பட்டும் நானே தெரிஞ்சுக்கிட்டதுதான் நிறைய…
***
எங்க கோபாலபுரம் வீட்ல பெண்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சமைக்கிறப்போவோ அல்லது வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒண்ணா உட்கார்ந்து பேசறப்போவோ எங்க வீட்டுக்காரங்க பத்தி அவங்க அம்மா, அதாவது எங்க அத்தை எப்பவுமே ஒரு அபிப்ராயம் சொல்வாங்க…
“ஸ்டாலின் பொறுமைன்னா அவ்வளவு பொறுமையா இருக்கும்… சின்ன வயசுல இருந்தே அது குணம் அப்படி!…”ன்னு சொல்வாங்க…
“ஆமாமா… சின்னப் பிள்ளைங்களா இருந்தப்போ வெளீல விளையாட அனுப்புறப்போகூட உங்க வீட்டுக்காரருக்கு வெள்ளை சட்டை போட்டு விட்டா விளையாடி முடிச்சப்புறம்கூட அந்தச் சட்டை அப்படியே வெள்ளை மாறாம, அழுக்குப் படியாம இருக்கும்!… அதிர்ந்து எதுவும் பண்ணாது!”ன்னு மல்லிகா அண்ணிகூட அடிக்கடி சொல்வாங்க…
ஒரு மனைவியா எங்களோட இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் எங்க வீட்டுக்காரங்களைப் பத்தி அபிப்ராயம் சொல்றதா இருந்தாலும் இவங்களைப் பொறுமைசாலின்னுதான் சொல்வேன்.
அதுக்காக எங்களுக்குள்ள சண்டை சச்சரவு வராதுன்னு எல்லாம் நினைச்சுடாதீங்க. நிறைய வரும்.. பசங்களைக் கண்டிச்சு வளர்க்கணும்பேன் நான்.. சில விஷயங்கள்ல பசங்களைத் திட்டிடுவேன். நல்லா அடிக்கக்கூட அடிச்சிடுவேன்…
ஆனா பசங்களை ஃப்ரீயா சிந்திக்க விடும்பாங்க இவங்க. பசங்களுக்குத் தேவைப்படற உதவியைத் தன் தூக்கத்தைக்கூட தொலைச்சுட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து செஞ்சு தருவாங்க.. என்னால அதெல்லாம் முடியாது…
பசங்களை வளர்க்கிற இந்த விஷயத்தில் ஆரம்பிச்சு நாங்க சேர்ந்து வெளியில போறதுன்னு பல விஷயங்கள்ல நாங்க ரெண்டு பேரும் அப்பப்போ முட்டிக்கிட்டு சண்டைக்கு நிப்போம்…
ஆனா அதில பார்த்தீங்கன்னா, நிலைமை சீரியஸாகாம பொறுமையா அதை ஹேண்டில் பண்றது கடைசியில் எங்க வீட்டுக்காரங்களாத்தான் இருக்கும். விட்டும் தருவாங்க.. பெரும்பாலான சமயங்களில் பொறுமையாப் பேசி எனக்குப் புரியவும் வச்சிடுவாங்க.
இவங்களோட இந்தப் பொறுமையும், சகிப்புத் தன்மையும்தான் மிசா சமயங்கள்லகூட அந்தக் கஷ்டங்களை இவங்க சுலபமாக தாங்கிக்க வச்சதுன்னு நெனைக்கிறேன்…
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அத்தனை கஷ்டங்கள் பட்டுட்டு இருந்த அந்த நேரத்தில்கூட முதன்முதலா இவங்களை நாங்க சந்திக்கப் போனப்போ இளைத்து சோர்ந்துபோன அந்த நிலையிலும் இவங்க அதே இனிமையான சிரிச்ச முகத்தோட எங்களைப் பார்க்க வந்ததை நான் அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன்.
இவங்க பொறுமை பத்தி சொல்றப்போ எங்க அத்தை இவங்களோட சின்ன வயசுல நடந்த ஒரு விஷயம் பத்தியும் சொல்வாங்க.
எங்க வீட்டுக்காரங்க நாலஞ்சு வயசா இருந்தப்போ இவங்க விளையாட்டுத்தனமா ஊக்கை வாயில் போட்டு விளையாடிக்கிட்டே இருந்தப்போ அப்படியே அதைத் தெரியாம விழுங்கிட்டாங்களாம்… அதிலே என்ன பெரிய விஷயம்னா, ஊக்கு திறந்திருந்த நிலையில் விழுங்கியிருக்காங்க. அதோட கூர்ப்பான பாகம் குழந்தையோட குடலைக் கிழிச்சுட்டா என்றதுன்னு வீட்டுல எல்லோரும் டென்ஷனாயிட்டாங்க. அப்போ எங்க வீட்டுக்காரங்களோட ஆத்தா அதாவது மாமாவோட அம்மா உயிரோட இருந்த சமயம்… அவங்கதான் குழந்தையான இவங்களைக் கவனிச்சுப் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடியிருக்காங்க… உள்ளே ஊக்கோட கூர்ப்பான பாகம் நீட்டிட்டு இருக்கிறது ஆபத்தான விஷயம்தான். இருந்தாலும் இப்போ எதுவும் பண்ண வேண்டாம்… தொடர்ந்து வாழைப்பழம் தந்துகிட்டே இருங்கன்னு சொல்லியிருக்காங்க. அதே போல வாழைப்பழம் தந்ததில் 2 நாள்ல அந்த ஊக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாம மலம் வழியா வெளீல வந்திடுச்சாம்.
சமீபத்தில் கோடம்பாக்கம் பாலம் திறந்து வச்சப்போகூட மாமாவுக்கு அந்த பாலத்தைப் பார்த்ததும் இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது போல.
“என் குழந்தை ஊக்கை விழுங்கின அந்த ஆபத்தான நிலையில் நாங்க அவனைத் தூக்கிட்டு மருத்துவமனைக்காக இதே ஏரியாவில ஓடினப்போ, கோடம்பாக்கம் ரெயில்வே கேட் போட்டுட்டாங்க.. பாலம் இல்லாத அப்பல்லாம் அப்படித்தான் காத்திருந்து போக வேண்டி இருந்தது. இப்போ அதே சிறுவன் வளர்ந்து இந்தத் துறைக்கு அமைச்சரா இருக்கிற இந்த நிலையில இதைத் திறந்து வைக்கிறேன்”ன்னு தன் ஞாபகங்களைச் சொன்னாரு மாமா!
“அத்தனை நேரத்துக்கும் வேறொரு பிள்ளையா இருந்தா அழுதே கெடுத்திருப்பாங்க..ஸ்டாலின் பொறுமையா இருந்ததாலதான் பெரிய ஆபத்து ஏதுமில்லாம அது வெளீல வந்தது!”ன்னு அன்னிக்கு சம்பவம் பத்தி வீட்ல எல்லோரும் சொல்வாங்க!..
பிற்காலத்தில் பேச்சாளர் வெற்றிகொண்டான் ஒரு தடவை எங்க வீட்டுக்காரங்களோட சுறுசுறுப்பு பத்தி குறிப்பிட வர்றப்போ இதே ஊக்கு விஷயத்தைக் குறிப்பிட்டு,
‘ஊக்கை விழுங்கியவன் இல்லையா?
அதனால்தான் ஊக்கமாக இருக்கிறான்’னு ரொம்ப ரிதமாடிக்கா எழுதியிருந்ததை நான் ரொம்ப ரசிச்சேன்.
இவங்களோட பொறுமை பத்திப் பேசறப்போ, எனக்கும்கூட பொறுமை இருக்குன்னு எங்க வீட்ல ஒருத்தர் என்னை நம்பிப் பேர் வச்ச விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருது..
அந்த ஒருத்தர் வேற யாருமில்லே… எங்க மாமாதான். மிசா சமயத்தில்தான் அதுவும் நடந்தது.
“கல்யாணமாகி நாலஞ்சு மாசத்திலேயே கணவர் இப்படி ஜெயிலுக்குப் போயாச்சு..வயசில சின்னப் பொண்ணா இருந்தாலும் பொறுமையா இதைத் தாங்கிட்டு இருக்கிறே… ‘சாந்தமான உனக்கு ‘சாந்தா’ன்னு பேர் வைக்கிறேன்’ன்னு மாமா எனக்குப் பேர் வச்சார். என் ஒரிஜினல் பேரான ‘துர்கா’ அப்டீங்கறது சாமி பேருங்கறதால் தங்களோட திராவிடக் குடும்பத்திற்கு ஏத்தபடி அந்தப் பேரை மாத்தறதா நெனைச்சு எனக்கு மாமா புதுப்பேர் வச்சார். புதுசா வைக்க அந்தக் குறிப்பிட்ட பேரை எதுக்காகத் தேர்வு செஞ்சார்ன்னு அவர் சொல்றப்போதான் என்னோட சாந்தமான குணத்துக்காக வச்சதா குறிப்பிட்டார்.
மாமா வச்ச சாந்தாங்கிற பேரைத்தான் அப்புறம் புகுந்த வீட்ல எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஆனா எங்க வீட்டுக்காரங்க மட்டும் அதே துர்காங்கிற பேரைத்தான் சொல்லிக் கூப்பிடுவாங்க. இப்பவும் புகுந்த வீட்ல அத்தை, மாமா, மச்சினர், நாத்தனார்னு மத்த எல்லோருக்கும் நான் சாந்தாதான்.
எனக்கு துர்கானு சாமி பேர் வச்சது எங்க தாத்தா சாரங்கபாணிதான். எங்கம்மாவுக்கு பிரசவ வலி எடுத்தப்போ, வெள்ளிக்கிழமை அதுவுமா தலைச்சன் குழந்தை, பெண் குழந்தையா பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு எங்க தாத்தா சாமி பேரையே எனக்கு துர்கான்னு வச்சாங்க.
எனக்கு 2 பெயர்கள்னு ஆகி இத்தனை வருஷம் ஆனாலும்கூட என் பெயர் பத்தின கன்ஃப்யூஷன்ஸ் இன்னமும்கூட நிறையப் பேருக்கு இருக்கு. ஒரு சிலர் பேட்டியெடுக்க வர்றப்போகூட நான் துர்கான்னு சொன்னா, ‘நாங்க சாந்தா மேடம்கிட்டே இண்டர்வியூ பண்ணனும்னு சொல்வாங்க!’
இதுக்கெல்லாம் உச்சமா, ‘ஸ்டாலினுக்கு துர்கா, சாந்தான்னு ரெண்டு மனைவிகள் இருக்காங்க!’ன்னு ஏதோ ஒரு பத்திரிகையில கூட சில வருஷங்கள் முன்னால வந்துச்சு..
சாந்தாங்கிற பேருக்கு மாமா சொன்ன இந்தக் காரணத்தை எப்பவாவது நான் ஞாபகப்படுத்திப் பேசினாலே எங்க வீட்ல என் பிள்ளைகள்லாம் என்னைப் பயங்கரமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.
“சாந்தமா? ஐயோ அம்மா.. உன்னைப் பத்தி தாத்தா பாவம் எவ்வளவு தப்பா கணிச்சு வச்சிருக்காரு? சாந்தாவுக்குப் பதிலா ‘டென்ஷன்’னுதான் வச்சிருக்கணும்!.. மாத்தி வந்திருச்சு”ன்னு கலாய்ச்சி எடுத்துருவாங்க.
ஒரு வகையில நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படற ஆளுதான். டக்குன்னா கண்ணுல கண்ணீர் முட்டிக்கும். அம்மா இல்லாத பிள்ளைன்னு பெரிய கஷ்டங்கள் ஏதும் படவிடாதபடி செல்லமா வளர்த்துட்டாங்க.. ஆனா என்னதான் செல்லம்னாலும் சின்ன வயசில இருந்தே கட்டுதிட்டங்களோட எங்க பாட்டி ஒவ்வொண்ணையும் சொல்லி வளர்த்திருந்தாங்க.. அதே கட்டுதிட்டங்களை என் பசங்ககிட்டேயும் எதிர்பார்த்துதான் சத்தம்போடுவேன்.
ஆனா என் அழுகையும் சரி, கோபமும் சரி, எங்க வீட்டுக்காரங்க, என் பிள்ளைங்க தவிர எங்க குடும்பத்தில வேற யாருக்கும் தெரியாது! எங்க ரூம் தாண்டி எந்தச் சத்தமும் வெளீல போகாது. காரணம், வீட்டுப் பெரியவங்கன்னா எப்பவும் பயமும் மரியாதையும் வச்சு நடந்துக்கணும்னு பாட்டி சொல்லி வளர்த்ததை நான் எப்படி மறக்க முடியும்?
***
மிசா கைதியா ஜெயில்ல இருந்த எங்க வீட்டுக்காரங்களை முதன் முதலா நாங்க போய்ப் பார்த்தப்போதான் ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்புறம் சுலபமாயிடுச்சு! கைதிகளை அவங்க குடும்பத்தினர் போய் ஜெயில்ல சந்திக்கிறதை ‘இண்டர்வியூ’ன்னு சொல்றாங்க.. எங்களுக்கு இந்த இண்டர்வியூ நேரம் அப்புறம் ஓரளவுக்கு நார்மலா வாரத்துக்கு ஒருமுறைன்னு வர ஆரம்பிச்சுடுச்சு.
வாரா வாரம் புதன்கிழமை மதியம் 12மணின்னு எங்களுக்கு இவங்களைப் போய் சந்திக்க நேரம் தந்தாங்க.. வீட்ல இருந்து 6 பேர் வரலாம்னு சொன்னாங்க. ஒவ்வொரு தடவையும் 20 நிமிஷம் பேச முடியும். இதேபோல மாறன் அண்ணனை சந்திக்க வியாழக்கிழமை நேரம் ஒதுக்கினாங்க.
ஜெயிலுக்குப் பெரியண்ணி, செல்வியண்ணி, அத்தை, அத்தி, அக்கம்மா, எங்க மச்சினர், கொழுந்தனார், குழந்தை எழில்னு ஒவ்வொரு தரமும் மாத்தி மாத்திப் போவோம்.
2ஆவது முறையா நாங்க எங்க வீட்டுக்காரங்களை சந்திக்கப் போறப்போ, மாமா (கலைஞர்) வும் எங்களோட வந்தார். ‘மத்த மிசா கைதிகளை அவங்கவங்க குடும்பத்தினர் போய் சந்திச்சுட்ட அப்புறம் நான் வந்து என் மகன் ஸ்டாலினை ஜெயில்ல பார்க்கிறேன்னு மாமா ஏற்கனவே சொல்லியிருந்தார் இல்லையா? அந்த சமயத்தில் அநேகமாக அத்தனை மிசா கைதிகளையுமே அவங்க குடும்பத்தினர் நேர்ல சந்திச்சு நலமெல்லாம் விசாரிச்சு முடிச்சிருந்தாங்க. அதனால நாங்க இரண்டாவது முறையா இவங்களைப் பார்க்க ஜெயிலுக்குக் கிளம்பினப்போ மாமாவும் வந்தார்.
அப்போல்லாம் இண்டர்வியூ நேரம் மதியம் 12 மணி என்பதால் நல்ல வெயிலில் நாங்க எல்லோரும் வீட்ல இருந்து போவோம். ஜெயிலுக்கு முன்னாலே வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடம் இருக்காது..நாங்க விண்ணப்பப் படிவம் எல்லாம் எழுதிக் கொடுத்து ஃபார்மாலிடீஸ் முடிச்சு எங்களைக் கூப்பிடறதுக்குள்ளே வெயில்ல வாடி வதங்கிப் போயிடுவோம்! தொடர்ந்து இப்படியே கடும் வெயில்ல மணிக்கணக்கில் காத்திருக்க நேரிட்டதில் குழந்தை எழிலுக்குத்தான் கடுமையா காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லாமப் போச்சு! தொடர்ந்து உடம்பு குணமாகலே. அதனால அதுக்கப்புறம் வந்த நாட்கள் இண்டர்வியூக்கு மதிய நேரம் வேண்டாம்னு சாயங்காலம் 4 மணி போல நேரம் வாங்கி வியாழக்கிழமை போயிட்டு வந்தோம்.
முதன்முதல்ல எங்க வீட்டுக்காரங்க, தான் சென்னை சென்ட்ரல்ல ஜெயில்லதான் இருக்கிறதா வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதினாங்கன்னு சொன்னேன் இல்லியா? அதுபோல நாங்க எல்லோரும் வீட்ல இருந்து இவங்களுக்கு பதில் லெட்டர் எழுதுவோம். லெட்டர்னா, வீட்ல எல்லோரும் ஆளுக்கொரு லெட்டர்ல எழுத முடியாது..அத்தை ஒரேயொரு இன்லேண்டு லெட்டர்தான் வாங்கித் தருவாங்க.
அதுல அவங்களே முதல்ல ஒரு நாலஞ்சு வரி கடிதம் எழுதுவாங்க.. ‘அன்பு மகன் ஸ்டாலினுக்கு’ன்னு ஆரம்பிச்சு ‘நீ நல்லாயிருக்கியா? நாங்க இங்க நல்லாயிருக்கோம்’னு அவங்க சொல்லச் சொல்ல செல்வியண்ணிதான் எழுதுவாங்க.. ‘இப்படிக்கு உன் அம்மா’ன்னு அந்த அஞ்சாறு வரிகளுக்கு அப்புறம் முடிச்சுட்டு, அடுத்த பாராவில செல்வியண்ணியே தன் பங்குக்குக்கு ‘அன்புள்ள அண்ணனுக்கு’ன்னு எழுத ஆரம்பிப்பாங்க.. அவங்க கையெழுத்துப் போட்டு முடிச்சப்புறம் அந்த லெட்டர்ல ‘அன்புத் தம்பிக்குன்னு’ மல்லிகா அண்ணி ஆரம்பிச்சு அவங்க ஒரு பாரா அளவுக்கு எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவாங்க.. அவங்களுக்கு அப்புறம் நான் எழுத எனக்கு ஒரு பாரா அளவுக்கு இடம் கிடைக்கும்! ‘அன்புள்ள அத்தானுக்கு..’ன்னு ஆரம்பிப்பேன். உடனே கண்ணுல இவங்க முகம் வந்து சிரிக்கும். எத்தனை நாளாச்சு அவங்க முகத்தைப் பார்த்து? எத்தனை நாளாச்சு இவங்க பேசக் கேட்டு.. எத்தனை நாளாச்சு அந்த மனசைக் கொள்ளை கொள்ற சிரிப்பைப் பார்த்துன்னு தோணுறப்போவே மனசு நெகிழ்ந்து போய் எனக்கு கண்ணுல தண்ணியா கொட்டும். ரொம்பக் கட்டுப்படுத்திட்டுதான் எழுதுவேன். அதிலேயும் சிறையில் சிறை அதிகாரிகள் எல்லாம் படிச்சுப் பார்த்துவிட்டுத்தான் கடிதத்தைத் தருவாங்க அப்படிங்கிறதால் என் உணர்வுகள் எதையும் கடிதத்தில் கொட்ட முடியாது! ‘நீங்க நல்லாயிருக்கீங்களா? நா இங்கே நல்லா இருக்கேன்’னு நலம் விசாரிச்சுட்டு விட்டுடுவேன். தவிர அந்த ஒரு பாராவில் வேற என்ன எழுத முடியும்?
இப்படி எங்க வீட்ல யார் யார் இவங்களுக்கு லெட்டர் எழுத ஆசைப்படறாங்களோ, எல்லோரும் அந்த இன்லேண்டு லெட்டரில் ஆளுக்கொரு பாரா எழுதி அனுப்பி வைப்போம். பதிலுக்கு எங்க வீட்டுக்காரங்களும் உடனே லெட்டர் போடுவாங்க. அவங்களும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, என் பேர்னு ஒருத்தர் விடாம குறிப்பிட்டு எழுதி நலம் விசாரிப்பாரு.
என்னதான் வாரம் ஒரு தடவை ஜெயிலுக்குப் போய் நேர்ல பார்த்துட்டு வந்தாலும்கூட இவங்க கடிதம் பார்க்கிறப்போ கிடைக்கிற பரவச உணர்வே தனிதான். நேர்ல பார்க்கிறப்போகூட பக்கத்தில் மற்றவங்க இருக்காங்க அப்டீங்கிறதால் முகம் பார்த்துப் பேசமாட்டோம். ஏன், கூச்சத்தில் பேசக்கூட மாட்டோம். ஆனா, அதுவே இவங்க கடிதம் அப்டீங்கிறப்போ, அதை அப்பிடியே எடுத்துட்டு என் அறைக்குப் போயிட்டேன்னா, ஏதோ அந்தக் கடிதத்தோட எழுத்துக்களே இவங்களா மாறி என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஆயிடும் எனக்கு! அந்த எழுத்துக்களையே அப்பிடியே பார்த்துட்டுக் கலங்கிட்டு இருப்பேன்..
நான் அப்பப்போ கலங்கிட்டு நிற்கிறதைப் பார்த்துட்டோ என்னவோ என் கொழுந்தனார் தமிழரசு “அண்ணி.. நீங்க உங்க மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டி அண்ணனுக்கு லெட்டர் எழுதிக் கொடுங்க.. அண்ணன் உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.சுக்கு வர்றப்போ எப்பிடியாவது அவர் கையிலேயே அதை நேரா சேர்ப்பிச்சுடறேன்..கவலைப்படாதீங்க.. நான் படிக்க மாட்டேன்.. ஜெயிலர் கைக்கும் போகாது..நல்லா மனசு விட்டு எழுதுங்க”ன்னார் ஒருநாள். ‘நிஜமாவா’ன்னேன் நான் மலர்ச்சியோடு. “பின்னென்ன? பொய்யா சொல்றேன். போங்க எழுதிட்டு வாங்க” என்றார் தமிழரசு. என்னால என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒருத்தர் எங்க கொழுந்தனார். உண்மையில் எங்கள் உணர்வறிந்து, நேரமறிந்து அவர் எங்களுக்கு செய்த இந்த உதவி எப்பவும் மறக்க முடியாதது.
இரவு விடிய விடிய என் அறையில் உட்கார்ந்து ஒரு பேப்பரில் எழுத ஆரம்பிச்சேன். இதுதான் எங்க வீட்டுக்காரங்களுக்கு தனிப்பட்டு நான் மட்டுமே எழுதற முதன்முதல் கடிதம்.. எல்லாத்தையுமே எழுதிடணும் போல இருக்கு..ஆனா என்ன எழுதணும்னு தெரியலே.. எவ்வளவு நேரம் இப்பிடியே விழிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன்னும் தெரியலே.. எழுதிக் கிழிச்சு, மறுபடி எழுதிக் கிழிச்சு இப்பிடியே எழுது எழுதுன்னு எழுதித் தீர்த்தேன். என்ன எழுதினாலும் என் உணர்வுகளை முழுக்கச் சொன்னது மாதிரியே இல்லே!
ஒரு வழியா நான் எழுதி முடிக்கிறப்போ விடிஞ்சுருச்சுன்னுதான் சொல்லணும்.
சரியா விடிகாலையில் தினமுமே என் கொழுந்தனார் ஜெயில் பக்கம் கிளம்பிடுவார். “எழுதிட்டீங்களா அண்ணி.. குடுங்க”ன்னு அவர் கிளம்பி நின்னு கேட்டதும் ஓடிப்போய் நான் ரெடி பண்ணி வச்சிருந்த கவரைக் கொண்டு வந்து கொடுத்தேன்.
அதைப் பார்த்தவுடனே என் கொழுந்தனாருக்கு சிரிப்பு வந்திடுச்சு! எழுதின பேப்பரை கவர்ல போட்டு, அதை வேறொரு கவர்ல போட்டு ஒட்டி, மறுபடி அதை இன்னொரு கவர் தேடி போட்டுத் தந்தேன்.
“பயப்படாதீங்க அண்ணி.. நான் போறப்போ ஏதும் படிக்க மாட்டேன்”ன்னு கிண்டலடித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போனார். அவர் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்ததற்கு அடுத்த நாளே எங்க வீட்டுக்காரங்க கிட்டேயிருந்து கடிதம் வாங்கிட்டு வந்து தந்தார்.
அப்போ சிறையில யாராவது ஒருத்தர் உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.க்கு வருவாங்க. அவங்ககிட்டே எங்க வீட்டுக்காரங்க லெட்டர் தந்தனுப்புவாங்க. அவங்ககிட்டே இருந்து என் கொழுந்தனார் வாங்கி வந்து எனக்குத் தருவார்!
இப்படியே நான் எழுதற கடிதம் எங்க வீட்டுக்காரங்களுக்கும், அவங்க எழுதற கடிதம் எனக்கும் வந்து சேரும்! யாருக்கும் தெரியாம அதை வாங்கிட்டு என் ரூமுக்குப் போய் கதவை மூடிட்டுப் படிப்பேன்..ஐ.யோ!.. அந்த நிமிஷங்கள் நெகிழ்ச்சியும், அழுகையும் பரவசமும், காதலும் பொங்கி வழியும் ஆனந்த நிமிஷங்களா இருக்கும்!
பகல்ல என் ரூம் கதவைத் தாழ் போட்டுட்டுப் படிச்சா சரியா வராதுன்னு ராத்திரியில்தான் நிதானமா படிப்பேன்.. படிச்ச அதே பரவசத்தில் உடனே திரும்ப அவங்களுக்கு அடுத்த லெட்டர் எழுத உட்கார்ந்திடுவேன்.. அதே போல எழுதிக் கிழிச்சு, மறுபடியும் எழுதி கவர் மேல் கவர் போட்டு ரெடியா வச்சிடுவேன்.கொழுந்தனார் போறப்போ மறக்காம வாங்கிட்டுப் போயிடுவாங்க.
பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ மாத்தி மாத்தி ஒருத்தருக்கொருத்தர் லெட்டர்லாம் எழுதி லவ் பண்ணிட்டுத்தான் அப்புறம் கல்யாணம்னு பண்ணிப்பாங்க. ஆனா, எங்க வாழ்க்கையில் நாங்க கல்யானம் ஆனப்புறம் காதலர்களா மாறிட்டோம்.. மாத்தி மாத்திக் கடிதங்கள் எழுதி, அடுத்த கடிதம் எப்போ வரும்..அடுத்து எப்போ இனி இவங்களை சந்திக்கிறதுன்னு காதல் வாழ்க்கைக்குரிய அந்த த்ரில்லை அந்தப் பிரிவு நேரத்தில் அனுபவிச்சோம்.
அப்போ நான் இவங்களுக்கு எழுதின கடிதங்களையும் சரி, இவங்க எனக்கு எழுதின கடிதங்களையும் சரி அப்படியே பத்திரமா இப்போ சமீப காலம் வரைக்கும் வச்சிருந்தேன். அப்பப்போ எடுத்து படிச்சுப் பார்த்துட்டு இருப்பேன். வேளச்சேரி வீட்ல இருந்து ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு மாறினப்போதான் ‘பிள்ளைங்க எல்லாம் வேற பெரிசாயிடுச்சே! அரசியல் குடும்பத்திலே வீட்டுக்கு வர்ற வேற யார் கண்ணுலயும் நம்ம பர்சனல் கடிதம் பட வேண்டாமே’ன்னு மனசே இல்லாம கிழிச்சுப் போட்டேன்! மற்ற கடிதங்கள் எல்லாம் இன்னும் இருக்கு!
அந்த சமயம் இவங்க எழுதின பெரும்பாலான லெட்டர்கள்ல எல்லாம் ‘நீ சந்தோஷமா இரு’..அப்டீங்கறதைத்தான் மாத்தி மாத்தி எழுதியிருப்பாங்க.
சின்னப் பொண்ணாச்சே!…ஏற்கனவே வேற பொசுக்குன்னா அழுகை முட்டிட்டு வரும். எப்பிடியிருக்கோன்னு நினைச்சு கவலைப்பட்டு என்னை சந்தோஷமா இருன்னு சொல்லுவாங்க போல!
பர்சனல் லெட்டரா இருந்தாலும்கூட ஒவ்வொரு லெட்டர்லேயும் ‘எங்கம்மாவுக்கு துணையா இரு..எங்க அண்ணி பாவம்.. குழந்தை உண்டாயிருக்காங்க.. அவங்களுக்கு உதவி பண்ணு..’ அப்டீங்கிற வாசகங்கள் எப்பவும் இருக்கும்.
மாதிரிக்கு எனக்கு இவங்க எழுதின ஒரு கடிதம் இதோ…
“அன்புள்ள துர்க்காவிற்கு,
நான் நலம். அதுபோல் உன் நலத்தையும், வீட்டிலுள்ள அனைவர்களின் நலத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன். நான் உனக்குக் கடிதமே போடவில்லையென்று வருத்தப்பட்டதாக அறிந்தேன். எழில்மொட்டைக்கு நான் எழுதியிருக்கிற கடிதத்தைப் படித்துப் பார். அவை அனைத்தும் உனக்குப் பொருந்தும்.
உன் அத்தைக்கு நல்ல ஓய்வு கொடுக்கிறாயா? உன் அருமை அக்காவுக்கும், பெரிய அண்ணிக்கும் நல்ல துணையாக இருப்பாய் என்று கருதுகிறேன்.
உன் சின்ன அண்ணிகள் (வசந்தா, செல்வி) இருவரையும் மிகவும் கேட்டதாகச் சொல்லவும். மற்றும் புகழ், அன்பு, கலை, எழில்மொட்டை, வெண்ணிமொட்டை முதலியோர்க்கு என் அன்பு முத்தகங்களை இந்த மடலின் மூலம் அனுப்புகிறேன். இந்த மடலின் மூலம் உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் உன் துயரத்தை வெளிப்படுத்தி உன் அருமை மாமாவிற்கு இருக்கிற துன்பத்தை மேலும் அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டியது உன் கடமையாகக் கருதி செயல்படுவதுதான் உன் கணவனுக்கு செய்கின்ற தலையாய கடமை என்பதை உணர்வாய் என்று நான் திடமாக நம்புகிறேன்.
மற்றவை உன் மடல் கண்டு
இப்படிக்கு
மு.க.ஸ்டாலின்
குறிப்பு : அண்ணன் சிட்டி (பாபு) வீட்டிலுள்ள அண்ணிகளை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.
***
அப்போ சென்னைக்கு டி.வி. ரொம்பப் புதுசுங்கிறதால யாரோ ஒரு சிலர் வீட்லதான் டி.வி.இருந்தது. மாமா(கலைஞர்) முதல்வரா இருந்ததால் அப்போ எங்க வீட்ல ஒரு டி.வி.யை கொண்டுவந்து வச்சிருந்தாங்கன்னு சொல்லியிருந்தேன் இல்லையா?
மிசா சமயத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு மாமா முதல்வர் பதவியை இழக்க, எங்க வீட்டுக்காரங்களும் அரெஸ்ட் ஆக, அந்த நிலையில் அடுத்த நாளே கவர்ன்மெண்ட் ஆட்கள் அந்த டி.வி.பெட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. போன், டி.வி. எல்லாம் ஒரே நாள்ல நின்ன நிலைமையில் வந்து தூக்கிட்டாங்க.
அதிரடியா இவங்களும் மத்த கட்சிக்காரங்களும் கைதான அந்த சூழ்நிலையில், சிறையில் வன்முறை வெறியாட்டங்கள் வேற நடந்திட்டிருந்த அந்த நிலைமையில், குறிப்பா, எங்கே எது நடக்குதுன்னே தெரியாம குழப்பமா இருந்த அந்த நேரத்தில் டி.வி.யையும் இவங்க தூக்கிட்டுப் போக எங்களுக்கு நியூஸ் எதுவும் பார்க்க முடியாம ரொம்பவும் அவஸ்தையாயிடுச்சு. தவிர, வீட்ல இருந்த அந்த பயங்கர நிசப்தத்தைப் போக்கி, (வீட்ல எங்க அத்தனைபேர் குடும்பத்துக்கும் அந்த ஒரே டி.வி.தான்) ஒரே பொழுதுபோக்காகவும் இருந்தது அப்போ டி.வி.ஒண்ணுதான்!
அதனால பிள்ளைகளும், நாங்களும் (வேற யார்?… நானும் காந்தியக்காவும்) நைசா மல்லிகா அண்ணிகிட்டே போய் நம்ம வீட்டுக்கு டி.வி.ஒண்ணு அவசியம் வேணும்னு பேசினோம்!
மல்லிகா அண்ணிகிட்டே இதுமாதிரி விஷயங்களைப் பத்தி நாங்க கேட்கிறதுக்கு காரணம் இருந்தது. என்ன காரணம்னா, நாங்க சொன்ன இந்த விஷயம் பத்தி மல்லிகா அண்ணி உடனே அவங்க வீட்டுக்காரங்களான மாறன் அண்ணன் கிட்டே பக்குவமா எடுத்துச் சொல்வாங்க. மாறன் அண்ணன் நல்ல படிப்பாளி. நாலெட்ஜ் அதிகமுள்ளவர், நல்ல சிந்தனையாளர் அப்டீங்கிறதால, நாலு விஷயம் தெரிஞ்ச அவர் வீட்ல எதையும் ஓ.கே.ன்னு சொன்னால்தான் மாமா எடுத்துப்பார். அதனால் மாமாகிட்டே ஒரு விஷயத்தை சரியா சேர்ப்பிக்கணும்னா, நாங்க எல்லோரும் அப்போ இப்பிடித்தான் குறுக்கு வழியில் மல்லிகா அண்ணியைப் பிடிச்சுப்போம்!
அந்த சமயமும் அது ஒர்க் அவுட் ஆச்சு. சரி, வீட்ல மனக் கஷ்டங்கள் இருக்கற நிலையில் நியூஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சின்னு ஏதோ ஒரு வகையில் தந்து அந்தக் கஷ்டங்களை டி.வி.போக்குமேன்னு சரின்னுட்டாங்க. வீட்டுக்கு டி.வி.வந்து உட்கார்ந்துடுச்சு-மறுபடி அதே இடத்தில்!
அப்போ எல்லாம் வீட்ல ஒரு பழக்கம் உண்டு. தினமும் ராத்திரி சாப்பாடு ஆனவுடனே வீட்டோட பெரிய ஹால்ல குடும்பத்தில் எல்லோருடனும் உட்கார்ந்து மாமா ஒருமணி நேரம் ரெண்டு மணி நேரம் படு ஜாலியா பேசிட்டிருப்பார்.
அத்தை, பெரியண்ணி, செல்வியண்ணி, மாமாவோட சகோதரிகள்னு எல்லோரோடும் உட்கார்ந்து பேசறதுன்னா மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
மாமா வெளியூர் போகாம ஊர்ல இருக்கும் நாட்கள்ல இதுமாதிரி நிச்சயம் இருக்கும். சும்மா அன்னன்னைக்கு நாங்க என்ன பண்ணினோம், ஏது பண்ணினோம்னுதான் பேச்சு போகும். மத்தபடி பெரிசா வேறொண்ணும் இருக்காது. மாமாவுக்கு குடும்பத்துக்கான கெட்-டு-கெதர் நேரம் அது.
எங்க பொண்ணு செந்து, கொழுந்தனார் பொண்ணு பூங்கி, அருள்னு எல்லாம் பிறந்த அப்புறம் இந்த மாதிரி நேரத்தில் குழந்தைகளை விட்டுப் பாடச் சொல்லிக்கூட கேட்பாரு மாமா!
நாங்க வேளச்சேரி வீடு வாங்கிட்டு வர்ற வரைக்கும்கூட கோபாலபுரம் வீட்டில் இந்தப் பழக்கம் இருந்தது. இப்பவும்கூட நாங்க எல்லோரும் அங்கே சந்திக்கிற நாட்களில் இது தொடரும்!
எங்க வீட்டுக்காரங்க, அவங்க அண்ணன், தம்பி தவிர செல்வம் அண்ணன், அமிர்தம் அண்ணன் எல்லோரும் இப்படி எங்களோட அந்த நேரங்கள்ல உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க.
‘அப்போல்லாம் நாம ராத்திரியில் எப்பிடியெல்லாம் பேசிட்டு இருப்போம்’னு செல்வியண்ணி இப்பவும்கூட அடிக்கடி ஆசையா குறிப்பிடுவாங்க. அன்னிக்கு எங்க வீட்டுக்காரங்களை பிரிஞ்சிருந்த அந்த நிலையில் எனக்கு ஒரு பெரிய மன ஆறுதலா இந்த நிகழ்வுகள் இருக்கும்.
படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, அந்த சமயங்கள்ல எங்க கொழுந்தனார் தமிழரசு மட்டும் காலங்கார்த்தால பல்லு தேய்ச்சுட்டு சென்ட்ரல் சிறைச்சாலை இருக்கும் பக்கமா கிளம்பிடுவார். அன்னிக்கு யார் அங்கிருந்து உடம்பு சரியில்லேன்னு ஜி.ஹெச்.வர்றாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவங்க மூலம் ஜெயில்ல நடக்கிற சேதிகளை எல்லாம் தெரிஞ்சுட்டு வருவாங்க.
கைதான கட்சிக்காரங்களுக்கோ, அவங்க குடும்பத்துக்கோ என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேட்டு ஓடி ஓடிப் போய் செய்வாங்க.
மிசாவில் கைதாகி உள்ளே போய் சிலர் கஷ்டப்பட்டாங்கன்னா, எங்க கொழுந்தனார் தமிழரசு வெளியே இருந்து கஷ்டப்பட்டாருன்னு சொல்லலாம்.
இவங்க ஜெயில்ல இருந்த சமயம் மனசு அமைதிக்காக கோவில்களுக்குத் தினமும் போவேன்னு சொல்லியிருந்தேன் இல்லையா? கருமாரி அம்மன் கோவில், மாங்காடுன்னு யார் கூப்பிட்டாலும் போவேன். பெரும்பாலும் நானும் செல்வியண்ணியும் போவோம்.
வேலைக்கு ஆள் இருந்தாலும், எனக்கு அந்த ஒரு வருஷமும் வீட்லேயும் எனக்குத் துணிமடிக்கிறது, காய் நறுக்கிறதுன்னு வேலை சரியா இருக்கும். கைக்குழந்தை வெண்ணியோடயும் நேரம் சரியா இருக்கும்.
பொதுவாகவே அத்தை ரொம்ப சிக்கனவாதி. வீட்ல எதையும் சின்னப் பொருள்கூட வேஸ்ட் பண்ண விடமாட்டாங்க. கொஞ்சூண்டு ஒரு கை சாதம் அளவுக்கு மிச்சம் இருந்தாலும் அதில தண்ணி ஊத்தி வச்சு மறுநாள் சாப்பிட்டுடுவாங்க.
வீட்ல வேலைக்காரம்மா ஒருநாள் வரலேன்னா, சரி அவங்கதான் வரலியே..துணி துவைக்கிற வேலையை நாளைக்குப் பார்ப்பமேன்னு விடமாட்டாங்க. நேரா போய் தானே எல்லா துணிகளையும் சோப்புத் தூள் போட்டு ஊற வச்சிடுவாங்க. ஊற வச்சா நாங்களும் போய் துவைச்சுத்தானே ஆகணும். எனக்கும் காந்தியக்காவுக்கும் ஐயோ.. இவங்க துணிகளை வேற ஊற வச்சுட்டாங்களேன்னு கோபம் கோபமா வரும். அப்புறம், ஒரு நிதானத்துக்கு வந்தப்புறம், சரி அத்தை நம்ம நல்லதுக்குத்தானே பண்றாங்க.. ஒரு நாள் துணி தேங்கிவிட்டாலும் எத்தனை கஷ்டம்னு தோணும்.
அத்தைக்கு நடு ராத்திரி கிச்சன் பக்கம் போனாலும், கிச்சன் க்ளீனா இருகணும். அத்தனை சுத்தம். இதில என்ன விசேஷம்னா, அவங்களே அதை சுத்தப்படுத்த ஆரம்பிச்சுடுவாங்க. கொஞ்ச நேரம் கிடைச்சா போதும், வீட்ல இருக்கற பொதுவான டாய்லெட்டைக் கழுவிட்டு இருப்பாங்க. இப்படி அவங்க செய்ய ஆரம்பிச்ச அப்புறம் உட்கார முடியாம நாங்களும் போய் அதைச் செய்வோம். எங்க பாட்டிக்கும் (அப்பாவோட அம்மா) இப்படித்தான் வீடு சுத்தமா இருக்கணும். ராத்திரியே அடுப்பை சாணத்தில் அழகா மெழுகி கோலம் போட்டுப் பாத்திரங்கள் எல்லாம் தேச்சுக் கழுவி வச்சிடுவாங்க. எனக்கு அத்தையைப் பார்த்தா அவங்க ஞாபகம்தான் வரும்!
அத்தை வெளீல விறகு அடுப்பு கூட வச்சுப்பாங்க. வீட்டோட பின்பக்கம் இருக்கும்.
எல்லா சமையலும் உள்ளேயே செஞ்சா கேஸ் நிறையப் பிடிக்கும்னு அவங்க எண்ணம்.
நான் கல்யாணமாகி வந்தப்போ கோபாலபுரம் வீட்ல இருந்த பல பாத்திரங்களை இன்னும்கூட அப்பிடியே மாத்தாம கிச்சன்ல வச்சு உபயோகிச்சுட்டு இருக்காங்க. மாடியில் மாமாவுக்குத் தண்ணி கொண்டு போற ஜக், பால் கொண்டு போற டம்ளர்னு பல பாத்திரங்களை நொங்கு விழுந்த நிலையிலும் இன்னும் வச்சு புழங்கிட்டு இருக்காங்க. சமையலுக்கு காய்கறி, அரிசி கூட கரெக்டாதான் எடுத்துத் தருவாங்க. எதையும் வேஸ்ட் பண்ணக் கூடாது.
அத்தை ரொம்ப சிக்கனவாதியா இருந்ததாலதான் வீட்ல அத்தனை குழந்தைகளையும் நல்லபடியா வளர்க்க முடிஞ்சதுன்னு நாங்க பேசிப்போம்.
அதிலேயும் அப்போ மாமாவோட அக்காக்கள், அவங்க பசங்க மாறன் அண்ணன், செல்வம் அண்ணன், அமிர்தம் அண்ணன், அவங்க மனைவிகள், மல்லிகா அண்ணி, செல்வி அண்ணி, வசந்தா அண்ணின்னு எல்லோருமே ஒரே குடும்பமா ஒண்ணாத்தான் இருந்திருக்காங்க. புகழ், அன்புன்னு குழந்தைகள் எல்லாம் பிறந்த பின்னாலதான் மல்லிகா அண்ணியும், செல்வியண்ணியும் பின்னால் இருக்கற வீட்டுக்குத் தனிக்குடித்தனம் போயிருக்காங்க.
அதுவரைக்கும் வீட்ல ஆளுக்கொரு வேலை எடுத்துச் செய்வாங்களாம். இதில மாமாவோட பெரிய அக்கா பெரியநாயகி அம்மா அக்கம்மா மட்டும் ரொம்ப வேலை பண்ண மாட்டாங்களாம். ஏன்னா அவங்க நல்லா பரிமாறணும்னு 10 பேருக்கு வர வேண்டிய காய்கறியையோ சாப்பாட்டையோ 6 பேருக்கு போட்டு முதல்லியே முடிச்சிடுவாங்களாம். பெரிய கை..சரியா எல்லோருக்கும் பகிர்ந்து வைக்கத் தெரியாதுங்கிறதால் ‘சரி நீ உட்காரு. நாங்க பார்த்துக்கிறோம்னு அவங்க தங்கச்சி அதாவது மாறன் அண்ணனோட அம்மா (அத்தி) சொல்லிட்டு பரிமாற ஆரம்பிப்பாங்களாம்.
‘நாம முதலமைச்சர் சம்சாரம். நாம வெளீல எங்கேயயும் போகக்கூடாது’ ன்று எல்லாம் அத்தை என்னிக்குமே நினைக்க மாட்டாங்க.
தினமும் மாமா மீன் விரும்பிச் சாப்பிடுவார் அப்டீங்கிறதால தினமும் மீன் வாங்கி சமைப்போம். எங்க வீட்டுக்காரங்க ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல்ல நின்னப்போ, மதிய சாப்பாட்டுக்காக இவங்களோட வர்ற கட்சிக்காரங்க எல்லோருக்குமான சாப்பாட்டை அத்தையும் நானும்தான் சமைப்போம். திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட்டுக்குப் போய் சுதும்பு மீனும், வஞ்சிரமும் வாங்கிட்டு வருவோம்! அத்தை ரோட்ல அவங்க பாட்டுக்கு கிடுகிடுன்னு நடந்து போவாங்க. சொல்லப்போனா அங்கே பல மீன் கடைக்காரங்களுக்கு அத்தை நல்லாவே பழக்கம்!
மீன்னு சொன்னதுமே எங்க வீட்டுக்காரங்க சிறையில இருந்தப்போ வீட்ல நாங்க அதைச் சாப்பிடக் கஷ்டப்பட்டது ஞாபகத்துக்கு வருது..
வீட்ல மீன்-கறின்னு நாங்க எது சாப்பிட்டாலும், எனக்கு அவங்க அங்கே ஜெயில்ல என்ன சாப்பிட்டாங்களோ..சாப்பிட என்ன கிடைச்சதோன்கிற நினைப்பில ஒரு பிடி சாப்பாடுகூட உள்ளே போகாது. டக்குனு கண்ணுல தண்ணி வந்துரும்.
ஒருதடவை திடீர்னு இவங்க, தன்னோட அழுக்குத் துணியைப் பையில் போட்டுத் திரும்ப வீட்டுக்கு கொடுத்தனுப்புறப்போ பார்த்தா பையில் எங்களுக்கு ஒரு அயிட்டம் வந்தது. இலையில் எதையோ வச்சு மடிச்சு அதை பேப்பர்ல சுத்தி அழுக்குத் துணிகளுக்கு மத்தியில் வச்சிருந்தாங்க. இலையைத் திறந்து பார்த்தா உள்ளே குலோப் ஜாமூன்! தலைவர் (மாமா) பிறந்த நாளை சிறையில் கொண்டாடறப்போ இவங்க எல்லோரும் குலோப்ஜாமூன் செஞ்சு கொண்டாடியிருக்காங்க. அதில நாலஞ்சு துண்டுகளைத்தான் ஆசையா எங்க வீட்டுக்கு அத்தனை பாதுகாப்பா தந்தனுப்பியிருக்காங்க. துணிகளுக்கு நடுவே இருந்தாலும் அந்த ஸ்வீட்டோட ருசி இன்னும் வேற எந்த ஸ்வீட்லேயும் கிடைக்கலே எனக்கு!
***
எங்க வீட்டுக்காரங்களுக்கு எப்பவுமே சைனஸ் பிரச்னை பாடாப்படுத்தும். கல்யாணத்துக்கு முன்னே இருந்தே இந்தப் பிரச்னைக்காக ஈ.என்.டி. டாக்டர் காமேஸ்வரன்கிட்டே பார்த்துட்டு இருந்தார். எங்க வீட்டுக்காரங்க மிசா ஜெயில்ல இருந்த பீரியட்ல, காற்றோட்டம் அதிகம் இல்லாத ஜெயில் ரூம்ல இருந்ததால் இவங்க சைனஸ் பிரச்னை ரொம்ப அதிகமாயிடுச்சு! மூக்கு முகமெல்லாம் நீர் கோர்த்துகிட்டு மூச்சு விடவே சிரமப்பட்டிருக்காங்க.. சின்னச் சின்ன உடம்பு பிரச்னைன்னா பெரும்பாலும் ஜெயில்லேயே உள்ளே இருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போயிடுவாங்க போல.. சைனஸ் பிரச்னை பெரிசாயிட்டா குறிப்பா சைனஸுக்காக மூக்குல பங்சர் ஏதும் பண்ணணும்னா ஜெயில்ல இருந்து ஜி.ஹெச்.சுக்கு வருவாங்க.
அப்படி ஜி.ஹெச்.க்கு வர்றப்போவும் கூட இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர்னு போலீஸ்காரங்களும் கூடவே வருவாங்க.. இவங்களை வெளியே யார் கூடவும் பேச விடமாட்டாங்க.. வெளியே எதையும் சாப்பிடவும் விடமாட்டாங்க.. அப்படியும்கூட இவங்களை நேரில் பார்த்தா போதும்னு இவங்க ஜி.ஹெச்.க்கு டிரீட்மெண்ட் வர்ற நாளைத் தெரிஞ்சுட்டு அத்தையும் நானும் வீட்டுல இருந்து கிளம்பி ஓடி வருவோம்.. சமயங்களில் மல்லிகா அண்ணி, செல்வியண்ணி, வீட்டுக் குழந்தைகள் இவங்க அண்ணன், அத்தி, அக்கம்மான்னு எல்லோரும் கிளம்பி ஒரு பெரிய குரூப்பாவும் வருவோம்.
எதிரெதிர் கட்டிடங்கள்தானே சென்ட்ரல் ஜெயிலும் ஜி.ஹெச்.சும்? அதனால நானும் அத்தையும் வந்து, ஜி.ஹெச். வாசல்ல அந்த ரோடு மேல நின்னுட்டு இவங்க எப்போ போலீஸ்காரங்க புடைசூழ உள்ளே நுழைவாங்களோன்னு காத்திட்டு நிப்போம்.
பெரும்பாலும் காலை 11 மணி சுமாருக்குத்தான் இவங்க அங்கே வருவாங்க அப்படிங்கிறதால அந்த நல்ல வெயில் நேரத்தில்தான் அங்கே கர்த்திருப்போம். எங்க கொழுந்தனார் தமிழரசு எப்பவும் ஜி.ஹெச்.சுக்கும் ஜெயிலுக்குமாத்தான் அலைஞ்சிட்டு அங்கேயே இருப்பாங்க.. ஜி.ஹெச்.சோட ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு சுவரும் எனக்கு அப்போது அத்துப்படி.. பின்னே? மணிக்கணக்குல இல்ல காத்திட்டு இருப்போம்..
இருந்திருந்து ஒரு நாள் இவங்க ஜி.ஹெச்.க்கு வர்றப்போ “எனக்கு குடிக்க சூப் கொண்டு வர்றீங்களா?”ன்னு முதல் நாளே சொல்லியனுப்பிச்சார்.. அத்தைதான் அப்போ சமையலறைக்குத் தானே போய் காய்கறி வெட்டி சூப் வச்சு அதை ஒரு பிளாஸ்க்ல எடுத்துக்கிட்டாங்க.. அந்த சமயங்கள்ல இவங்க உடம்பு தேறாம ரொம்ப ஒல்லியா இருந்ததாலேயும், அதிலேயும் சில மாசங்கள் முன்னே உடம்பு சுகமில்லாம இருந்து தேறினதாலேயும், இவங்களுக்கு வீட்ல தினமும் அத்தை சூப் வச்சுக் கொடுப்பாங்க.. ஜெயிலுக்குப் போன நாள்ல இருந்து இவங்களுக்கு பசிக்கு நல்ல சாப்பாடு கூட கிடைக்காத நிலைமையாயிடுச்சே! அதனால இவங்க திடீர்னு “நாளைக்கு சூப் கொண்டு வர்றீங்களா?..”ன்னு கேட்டதுமே அத்தை ரொம்ப நெகிழ்ந்து போயி ஆசையா சூப் செஞ்சு பிளாஸ்க்ல எடுத்துக்கிட்டாங்க.
நானும் அத்தையும் ஜி.ஹெச்.க்கு சூப்போட போய் காத்துட்டு நின்னோம். இவங்களும் போலீஸ்காரங்க புடைசூழ வந்தாங்க.. எங்களை அடையாளம் கண்டுகிட்டதுமே மனசைக் கொள்ளை கொள்ளும் அதே சிரிப்பு.. ஆனா போலீஸ்காரங்க அவரை நிக்கவோ பேசவோ விடலே.. நேரா உள்ளே கூட்டிகிட்டுப் போயிட்டாங்க.
அத்தையும் நானும் சூப்பை எடுத்துட்டுப் பின்னாடியே ஓடினோம்.
“தம்பீ.. நில்லுப்பா.. உடம்பு சரியில்லாத என் பையனுக்காக சூப் செஞ்சு கொண்டு வந்திருக்கோம். அவனை சூப் குடிக்க விடுங்க..!” அப்படீன்னு அத்தை சொல்ல,
அந்த போலீஸ்காரர் வேகமா மறுத்தார்.
“எதையும் இப்ப நீங்க தர முடியாது.. தள்ளுங்க.. தள்ளிப் போங்க”ன்னு விரட்ட ஆரம்பிச்சுட்டாங்க..
அத்தைக்கோ குரல் எல்லாம் ரொம்ப குழைஞ்சு போயிடுச்சு.. இத்தனை ஆசையா பையன் கேட்டு, தான் செஞ்சுகிட்டு வந்தும்கூட, தர முடியாம போயிடுச்சே அப்படீன்னதுமே மனசு கஷ்டமாயிடுச்சு போல..
இதைப் பார்த்துட்டு இருத பிரபல ஈ.என்.டி. டாக்டர் காமேஸ்வரன் மனசு கஷ்டமாகி, அத்தைகிட்ட, “அழாதீங்கம்மா.. நீங்க அழக்கூடாது.. உங்க உணர்வு எனக்குப் புரியுது..”ன்னு அத்தையை சமாதானப்படுத்திட்டு, “சரி, அந்த சூப் இருக்க பிளாஸ்க்கை என் கையில கொடுங்க”ன்னு வாங்கிட்டுப் போயிட்டாரு.
கொஞ்ச நேரத்திலேயே உடம்பு செக் பண்றதுக்காக போலீஸ்காரங்க ‘இவங்களை’க் கூட்டிட்டு வந்தாங்க..
‘நீங்க கொஞ்சம் வெளீல இருங்க.. நான் பேஷண்டை செக் பண்ணனும்னு சொன்ன டாக்டர் காமேஸ்வரன், போலீஸ்காரங்களை நைஸா வெளீல நிறுத்தி வச்சுட்டு எங்க வீட்டுக்காரங்களுக்கு அவங்க அம்மா கொடுத்த சூப்பை எடுத்துக் குடிக்கத் தந்திருக்கார்.. அந்த சமயத்தில் ஒரு அம்மாவோட கண்ணீருக்கு அந்த டாக்டர் காட்டின சலுகை அது!
ஜி.ஹெச்.சுக்கு இவங்க வர்றப்போ ஒவ்வொரு தடவையும் இவங்களோட பேச முடியும்னு சொல்ல முடியாது.. சில நேரம் சமயம், சந்தர்ப்பம், சூழல் அல்லது இது போல ஒரு சில டாக்டர்களோட மனிதாபிமான செயல்கள்னு சில விஷயங்கள் இவங்களை நாங்க பார்த்துப் பேச உதவலாம்.. அப்படித்தான் அப்போ போயிட்டிருந்தது வாழ்க்கை..
இவங்க ஜெயில்ல இருந்த அந்த சமயம்தான் நான் ரொம்ப கேட்டுக்கிட்டதன் பேரில் தன்னோட பி.ஏ. (ஹிஸ்டரி) படிப்பில் அரியர்ஸ் வச்சிருந்த ஒரு சப்ஜெக்டை இவங்க பிரசிடென்சி காலேஜில் போய் எழுதிட்டு வந்தாங்க.
அந்த சமயங்கள்ல நான் வீட்ல வீட்டு வேலை தவிரவும் நிறைய புத்தகங்கள் வாசிச்சுட்டு இருந்தேன்.. பெரும்பாலும் சரித்திர நாவல்கள் எனக்குப் பிடிக்கும்.. இப்பன்னு இல்லே.. ஊர்ல ஒன்பதாங் கிளாஸ், பத்தாங்கிளாஸ் படிக்கிறப்போவே நான் சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு, கடல்புறா, யவனராணி, ராஜமுத்திரை, மாமா (கலைஞர்)வோட ரோமாபுரி பாண்டியன், கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி சுவாரஸ்ய சரித்திர நாவல்களை ராத்திரியெல்லாம் முழிச்சு முழிச்சு ஏதோ பரீட்சைக்குப் படிக்கிறவ மாதிரி படிப்பேன்..
எங்கப்பாவும் ஸ்கூல் வாத்தியார் அப்டீங்கிறதால், அவர் தன்னோட ஸ்கூல் லைப்ரரியில் இருந்து அப்போ எனக்கு நாவல்கள், ராணி முத்துன்னு நிறையப் புத்தகங்கள் எடுத்துத் தருவார்.
அவர் புத்தகம் எடுத்துட்டு வந்தா போதும்.. அப்படியே ஒரு பொக்கிஷத்தை தூக்கிட்டுப் போற மாதிரி அந்தப் புத்தகத்தோட எங்க வீட்டு கொல்லைப்புறத்துக்குப் போய் துணி துவைக்கிற கல்லு மேல உட்கார்ந்துப்பேன். அப்புறம் இடி இடிச்சாலும்கூட தெரியாது.. அந்தளவுக்குப் புத்தகத்தோட ஒன்றிப் போயிடுவேன்!
என்மேல ரொம்ப உசிரா இருக்கிற எங்கப்பா, என் வாழ்க்கையில் என்னை இரண்டு முறைதான் அடிச்சிருக்கார்..
முதல்முறை நான் ரொம்ப குட்டிப் பெண்ணா இருந்தப்போ.. அப்போ அம்மாவும் கூட உசிரோட இருந்தாங்க.. ஸ்கூல் போகமாட்டேன்னு நான் அடம்பிடிச்சப்போ அப்பா படால்னு ஒரு அடி போட்டு அனுப்பி வச்சார்.
அம்மா தவறிட்டதுக்கு அப்பறம், அம்மா இல்லாத பிள்ளைகள்னு எங்க மேல ஒரு எக்ஸ்ட்ரா பரிவு வேற வந்துட்டதால் யாரையும் அப்பா அடிச்சதில்ல. அப்படியும் நான் டென்த்தோ லெவன்த்தோ படிக்கிறப்போ ஒருமுறை நல்லா பளார்னு அப்பாகிட்டே அடி வாங்கினேன். காரணம், இந்த மாதிரி கதைப் புத்தகங்கள் படிக்கிற பழக்கம்தான்.
அன்னிக்கும் நான் வழக்கம்போல ஒரு பெரிய சரித்திர தொடர்கதையை (பைண்ட் செஞ்சது) தூக்கிட்டு கொல்லையில் துணி துவைக்கிற கல்லில் உட்கார்ந்து யார் தொந்தரவும் இல்லாம படிச்சுட்டு இருந்தேன். அப்பாதான் அந்த தொடர்கதையையும் அவர் ஸ்கூல் லைப்ரரியில் இருநது எனக்கு எடுத்துத் தந்திருந்தார். அப்படித் தர்றப்போ, அன்னிக்கு அவருக்கு சம்பள நாள் அப்படிங்கிறதால் அவருக்குத் தரப்பட்ட சம்பள செக்கையும் என் கையில தந்து, பத்திரமா பீரோவில் கொண்டு போய் வைம்மான்னு நாலஞ்சு தரம் பத்திரம் சொல்லிக் கொடுத்தனுப்பி இருந்தார்.
நான் சரி சரின்னு தலையாட்டிட்டே, அவ்வளவு பெரிய சரித்திர தொடர்கதை எனக்கு படிக்கக் கிடைச்ச பரவசத்தில் நேரா போயி கொல்லைப்புறத்தில உட்கார்ந்துட்டேன்.
மணிக்கணக்கில் சுவாரஸ்யமா போயிட்டே இருந்தது தொடர்கதை. அந்த சுவாரஸ்யத்தில் கையில வச்சிருந்த செக் ஞாபகமே இல்லாம, அதை வேஸ்ட் பேப்பர்னு நினைச்சு கிழிச்சு அப்படியே கீழே போட்டிருக்கேன்..
எனக்கு சுத்தமா ஞாபகமே இல்ல..
இருட்டினதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ள வந்து என்னை சம்பள செக் எங்க வச்சேன்னு கேட்க ஓ.. என்கிட்டேயாப்பா செக் இருக்குன்னு தேட ஆரம்பிச்சுட்டேன்.
அப்பாவுக்கு ஷாக். மாசம் முழுக்க உழைச்ச சம்பளப் பணம்மா.. எங்க வச்சே?ன்னு கேட்க, நான் பதற்றத்தோட செல்ப் பீரோன்னு வீடு முழுக்க எல்லாத்தையும் தேடிப் பார்த்தா எங்கேயும் செக் இல்லே..
ஏதோ பொறி தட்டி கொல்லைப்புறம் துணி துவைக்கிற கல்லு பக்கத்தில ஓடிப்போயி தேடினதும்தான் தெரிஞ்சது, கவரோட பீஸ் பீஸா அதைக் கிழிச்சுப் போட்ட விஷயமே!
அவ்வளவுதான்.. அப்பாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியலே.. பளார்னு என் கன்னத்தில் அறை விட்டார்.
அப்படியென்ன சுதாரிப்பு இல்லாத்தனம்?
எத்தனை முறை பத்திரம்னு சொல்லி உள்ளே வைக்கச் சொன்னேன்னு அவர் சொல்ல, நான் என் தப்பு புரிஞ்சு அழ ஆரம்பிச்சுட்டேன்.
அப்புறம் பாட்டி வந்து பொம்பளைப் பிள்ளையை எப்படி அடிக்கலாம்னு அப்பாவோட சண்டை போட்டதும், பிறகு அப்பாவே, ‘ஐயோ இப்படி குழந்தையைப் போட்டு அடிச்சுட்டமே’ன்னு ஃபீல் பண்ணி என்னை சமாதானப்படுத்தியதும் வேற கதை..
எனக்குப் பாடப்புத்தகங்கள் படிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம். மத்தபடி இப்படி கதைப்புத்தகங்கள் படிக்கிறது, கைவேலை செய்றது, பொம்மை தயாரிக்கிறது, எம்பிராய்டரி பண்றது எல்லாத்திலேயும் ரொம்ப ரொம்ப ஆர்வம். அப்போ ரொம்ப ஃபேமஸா இருந்த ஸ்டஃப்ட் பொம்மை தயாரிப்பு பத்தியும் எம்பிராய்டரி பத்தியும் அப்பவே நான் கிளாஸுக்குப் போயி கத்துக்கிட்டேன். தவிர மிஷின்ல தைக்கவும் தெரியும். எந்நேரமும் எதையாவது ஒண்ணைப் பண்ணிட்டே இருப்பேன். குனிஞ்சு குனிஞ்சு கைவேலை பண்ணினதால முகுது வலி வந்தப்புறம்தர்ன அதையெல்லாம் கொஞ்சம் விட்டேன்.
ஆனா மிசா சமயத்தில் இவங்களை நான் பிரிஞ்சிருந்த நேரத்தில் என் கைவேலைகள்தான் எனக்கு என் தனிமையைப் போக்க ரொம்ப கை கொடுத்துச்சு. எங்க வீட்டுத் தலையணை உறை, குழந்தைகள் பிறந்தப்புறம் குழந்தைங்க டிரஸ், நிலைப்படிகளில் வரவேற்பு தோரணம், தலையணை உறை, சேலையில் எம்பிராய்டரி பூக்கள்னு எங்க வீட்ல என் கைவண்ணம் ஏதாவது ஒண்ணுல இருந்துட்டே இருக்கும்..
***
எங்க வீட்டுக்காரங்களுக்கு சைனஸ் ரொம்ப பிரச்னை கொடுக்கும்னு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லியா? மிசா சிறையில் இருந்தப்போ, இவங்க அடிக்கடி இதுக்கான ட்ரீட்மெண்டுக்காக ஜெயில்ல இருந்து ஜி.ஹெச்.சுக்கு வருவாங்க… அங்கே ஈ.என்.டி. மருத்துவர் மோகன் காமேஸ்வரன் இவங்களைப் பார்ப்பாங்க. இந்தப் பிரச்னை ரொம்ப ஓவராகி இவங்க மூக்கில் பங்சர் பண்ணுவாங்க!
அன்னிக்கு இவங்க ஜி.ஹெச்.சுக்கு வரப்போறாங்கன்னு தகவல் கிடைச்சதும் வழக்கம்போல இவங்க சைனஸ் பிரச்னைக்காகத்தான் வர்றாங்கன்னு நெனச்சுட்டு நாங்களும் இவங்களை நேர்ல பார்த்துடலாம்னு ஜி.ஹெச்.சுக்கு வந்து காத்திருந்தோம்.
இவங்க வந்தப்புறம்தான் தெரிஞ்சது அன்னிக்கு சைனஸ் பிரச்னை ஏதும் இல்லைன்னு…
‘ராத்திரியெல்லாம் பயங்கர வாமிட்டிங்… வயிற்று வலி வேற… கொஞ்சம் கூட தூங்கவே முடியலே…’ன்னு டாக்டர்கிட்ட சொல்லியிருக்காங்க. அதுக்குத்தான் ஜி.ஹெச்.சுக்கு செக்கப்புக்கு வந்திருந்தாங்க.
ராத்திரி சாப்பிட்ட மருந்தால் ஹாஸ்பிட்டல் வந்த நேரம், இவங்களுக்கு வாமிட், வயிற்றுவலி பாதிப்பு குறைஞ்சு போயிட்டதால இவங்களும் ‘சரி, நமக்கு உடம்பு சரியாயிடுச்சு!’ன்னு நெனைச்சுட்டு ஜாலியா இருந்திருக்காங்க.
ஆனா இவங்களை செக்கப் செய்த டாக்டர் மதனகோபால் ரங்கபாஷ்யம் உள்பட சில டாக்டர்கள் உடனே பதட்டமாயிட்டாங்க… பரபரன்னு ஏதேதோ பேசிக்கிட்டாங்க… எங்களுக்கோ ஒண்ணும் புரியலே!
“ஒரு மணி நேரத்துக்குள்ள உடனே ஆபரேஷன் பண்ணணும்!… இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும். உடனே அட்மிட் பண்ணுங்க!…” அப்டீன்னுட்டாங்க!
“அப்பண்டிசைட்டிஸ் பிரச்னை… குடல்வால் வளர்ந்திருக்குன்னு சொன்னாங்க. அப்போ, அந்த பீரியட்ல அப்பண்டிசைட்டிஸ் பிரச்னை பற்றி யாருக்கும் ரொம்பத் தெரியாது…
‘ஐயையோ… உடனே ஆபரேஷன் பண்ணலேன்னா உசிருக்கே ஆபத்து வந்துருமாமே’ங்கிற பதட்ட அளவுலதான் அந்த நோய் பத்தி தெரியும்… அதுவும் இப்பத்தான் கேள்விப்பட்டோம்… அதனால ரொம்ப பயமாயிடுச்சு!…
இப்பல்லாம் அப்பண்டிசைட்டிஸ் ஒரு பெரிய பிரச்னையே இல்லேங்கிற அளவுக்கு ரொம்ப சின்ன பிராப்ளம் ஆயிடுச்சு! சமீபத்தில் எங்க கொழுந்தனார் தமிழரசுவோட மனைவி மோகனாவுக்கு அப்பண்டிசைட்டிஸ் ஆபரேஷன் பண்ணினப்போ, வயித்தைக் கிழிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை! வெறுமனே சின்னதா மூணு துளை மட்டும் போட்டு லேப்ரோஸ்கோபி முறையில் சில மணி நேரத்தில் விஷயம் முடிஞ்சு வீட்டுக்கே வந்துடுச்சு! அந்தளவுக்கு இன்னிக்கு மருத்துவம் ரொம்ப நவீனமாயிடுச்சு!.
ஆனா 35 வருஷம் முன்னால இந்தப் புது நோய் அவ்வளவு பயப்படுத்திடுச்சு அத்தனை பேரையும்! அத்தை உட்பட வீட்ல எல்லோரும் இவங்களுக்கு ஏதோ பெரிசா வந்துடுச்சுன்னு பயந்து போயிட்டோம். செல்வியண்ணியோ பெருங்குரல் எடுத்து ‘ஓ’ன்னு அழவே ஆரம்பிச்சுட்டாங்க! அதைப் பார்த்து நான் ரொம்பவும் அழ ஆரம்பிச்சுட்டேன்.
அப்போ ஜி.ஹெச்.ல எங்க பக்கத்தில் பேராசிரியரோட (அன்பழகன்) பொண்ணு டாக்டர் மனமல்லி இருந்தாங்க… பேராசிரியர் மருமகன் டாக்டர் சிவராமனும் இருந்தாங்க… அவங்கதான் செல்வியண்ணியை சமாதானப்படுத்தினாங்க.
அதுக்குள்ளே சிறையில் இருந்து இவங்களைக் கூட்டிட்டு வந்த போலீஸ்காரங்களோ,
‘அதெல்லாம் இவரை இப்ப திடீர்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண முடியாது… ஜெயில் அதிகாரிகள்கிட்டே முறைப்படி பர்மிஷன் வாங்கிட்டு வந்து நாளைக்குப் பண்ணலாம்!…’னு எங்க வீட்டுக்காரங்களை அட்மிட் ஆக விடமாட்டேனுட்டாங்க!
டாக்டர்களோ இதைக் கேட்டதும் டென்ஷனாயிட்டாங்க! “ஒரு மணி நேரத்தில் அவசரமா இந்த ஆபரேஷன் பண்ணியாகணும். இல்லேன்னா, குடல்வால் வெடிச்சு சிதறி, உயிர்கூட போயிடலாம்! ரொம்ப ஆபத்தான விஷயம் இது! நீங்க அப்புறம் பர்மிஷன் வாங்கிக்கங்க!” அப்டீனுட்டாங்க…
உடனே இவங்களுக்கு ஆபரேஷன் நடந்தது…
ஆபரேஷன் முடிஞ்சதுமே அப்படியே அந்த மயக்கம்கூட தெளியாத நிலையில இவங்களை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து ஜெனரல் வார்டில் போட்டுட்டாங்க! ஐ.சி.யூ.ல கூட வச்சிருக்கலே!… நான், அத்தை, செல்வியண்ணின்னு சிலர், இவங்க எப்போ கண் திறந்து பார்க்கப் போறாங்களோன்னு பார்த்தபடியே அந்த வார்டில் இவங்க பக்கத்தில இருந்தோம்! இவங்களோட நாங்க யாரும் பக்கத்தில இருக்கக்கூடாதுன்னு அதுக்கு வேற போலீஸ்காரங்க கெடுபிடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!
அத்தைக்கோ ரொம்ப டென்ஷனாயிடுச்சு! “எம் பிள்ளைக்கு ஆபரேஷன் பண்ணிப் போட்டு மயக்கம்கூட தெளியலே… எப்படி விட்டுட்டு நாங்க வெளீல போறது?”ன்னு பயங்கர எமோஷனலா சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க அத்தை!
பொதுவாகவே எனக்கு சின்ன வயசில இருந்தே ஆஸ்பத்திரி, ஊசி, மருந்துன்னாலே ரொம்பப் பயம்!… ஊசியே போட்டுக்க மாட்டேன்னு அழுவேன். இதனாலேயே எங்க திருவெண்காடு டாக்டர் (எங்க குடும்ப டாக்டர்) சாரங்கபாணி, எனக்கு காய்ச்சல்னாலே ஊசி போடாம சிரப்பும், மாத்திரையும் மட்டும் எழுதித் தருவாரு!…
அப்படிப்பட்ட ஹாஸ்பிடல் பயந்தாங்கொள்ளியான நான், ஜி.ஹெச்.சோட ஜெனரல் வார்டில் வரிசையா ஏகப்பட்ட கட்டில்கள்ல படுத்திருந்த பேஷண்டுகளுக்கு நடுவிலே அவங்க வலி வேதனைகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
எங்களை அந்த ஜெனரல் வார்டுல உள்ள ஸ்டாஃப் ரூம் பக்கத்தில உட்காரச் சொன்னாங்க. காரணம், எங்க வீட்டுக்காரங்களுக்கு அடுத்தடுத்துப் பக்கத்தில படுத்திருக்கவங்க எல்லாம் இப்பவோ அப்பவோன்னு பயங்கர சீரியஸ் நிலைமையில இருந்தாங்க…
நாங்க அங்கே உட்கார்ந்திட்டிருந்த நேரத்திலேயே அந்த ஜெனரல் வார்டில் எங்களுக்கு பக்கத்துக் கட்டில்களில் இருந்த ரெண்டு பேர் அடுத்தடுத்து வரிசையா இறந்து போக, அவங்க முகத்தை வெள்ளைத் துணியால மூடி வெளீல எடுத்துட்டுப் போயிட்டு இருந்தாங்க!…
அதையெல்லாம் பார்த்துட்டு, அந்த அழுகுரலையெல்லாம் கேட்டு எனக்கு அப்படியே உடம்பே ஒரு மாதிரி பண்ணுது… வயிறெல்லாம் ஏதோ அமிலம் சுரக்கிற மாதிரி உணர்வு… அந்த ஹாஸ்பிடல் சூழலே ஒரு பயங்கரத்தையும் பயத்தையும் ஏற்படுத்த, இறுக்கமா அத்தை கையைப் பிடிச்சுட்டேன்.
எங்க வீட்டுக்காரங்க மயக்கம் தெளிஞ்சு கண் முழிக்கறப்போவே அவங்களுக்கு வாமிட்டா வருது… துடைச்சு எடுக்க எடுக்க திரும்பத் திரும்ப வாமிட் எடுக்கறாங்க. எங்களோட அங்கே நின்னுட்டிருந்த கட்சிக்காரரான ஆயிரம்விளக்கு உசேன்தான் அத்தைக்கும் எனக்கும் தைரியம் சொல்லி அந்த சமயத்தில் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தார்.
உசேனையும் மிசாவில் கைது பண்ணி, ஆறு மாசத்தில் விடுதலை பண்ணியிருந்தாங்க…
உசேனுக்கு இவங்கன்னா ஒரு தனிப்பிரியம்!…
“தம்பியை நான் பார்த்துக்கிறேம்மா!… இந்த சூழல்ல பெண்கள் நீங்க இங்கே தனியா இருக்க வேணாம்… நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க!…”ன்னு அவர் அத்தைகிட்டே வற்புறுத்திகிட்டே இருந்தார்.
ஆனா, இந்தச் சமயத்தில் எப்படி இவங்களை நாங்க இங்கே விட்டுட்டுப் போறது? அதனால நானும் அத்தையும் பிடிவாதமா அங்கேயே தங்கிட்டோம்.
அந்தப் பொது வார்டில் டாக்டர்கள் ரூம் ஒண்ணு சின்னதா இருந்தது. அதில் போய் அப்பப்போ கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துட்டு வந்து மயக்கம் தெளியாம படுத்திருக்கிற இவங்க பக்கத்துல வந்து நின்னுப்போம். அந்த சமயம் ஜி.ஹெச்.சில் வேலை பார்த்த பிரபல டாக்டர்களான காமேஸ்வரன், ரங்கபாஷ்யம், மதனகோபால், பி.ராமமூர்த்தி மாதிரியான டாக்டர்கள் எங்களுக்கு பெரிய ஆறுதலா இருந்தாங்க. சமீபத்தில் எங்க வீட்டுக்காரங்க துணை முதல்வரா, நம்ம ஜி.ஹெச்.சில கலந்துகிட்ட நிகழ்ச்சியில் இதைப்பற்றி குறிப்பிட்டுப் பேசியிருக்காங்க!
அன்னிக்கு பகல் முழுக்க, ராத்திரி முழுக்க நாங்க அங்கேயேதான் இருந்தோம். உட்காரவே இடம் இல்லாதப்போ… படுக்க ஏது இடம்? தவிர மனசு முழுக்க பயம் நிறைஞ்சிருந்த அந்த இடத்தில் தூக்கம்தான் எப்படி வரும்?
இவங்க அப்போ இருந்த நிலையில் பக்கத்தில் நின்றிருந்த எனக்கு எமோஷனலாகி கண்ணுல தண்ணியா கொட்டுது! நா அழுதுட்டே நின்னுட்டு இருந்ததைப் பார்த்ததுமே பக்கத்தில் இருந்த யாரோ ஒரு அம்மா, “கவலைப்படாதேம்மா…, திருப்பதி ஏழுமலையானை வேண்டிக்கோ, உன் வீட்டுக்காரருக்கு ஒண்ணும் ஆகாது…!”ன்னு சொல்லிட்டுப் போனாங்க.
எனக்கும் உடனே அதுதான் சரின்னு மனசுல பட்டது.
“ஏழுமலையானே… எங்க வீட்டுக்காரங்க நல்லபடியா குணமாகி வந்துடணும். நான் நடந்தே மலையேறி வந்து என் கையில போட்டிருக்க இந்த ரெண்டு தங்க வளையல்களையும் உண்டியல்ல போட்டுர்றேன்”னு உடனே வேண்டிக்கிட்டேன்!
இவங்க வாமிட் எடுக்கிறாங்க. அப்டீன்னதுமே டாக்டர்ஸ் இவங்களுக்கு வாமிட்டைக் குறைக்க மாத்திரை எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொல்லியிருந்தாங்க.
கஷ்டம் வந்தா தொடர்ச்சியா வரும்பாங்களே!… அது மாதிரி அங்கே வந்த டாக்டர் எழுதித் தந்த அந்த மாத்திரை மூலம் இவங்களுக்கு இன்னொரு பெரிய ஆபத்து வர இருந்தது! நல்ல வேளையா வீட்டுக்குப் போயிட்டு சரியா அந்த நேரம் திரும்பின செல்வியண்ணி, டாக்டர் எழுதித்தந்த மருந்து சீட்டைப் பார்த்ததுமே ‘ஐயையோ!’ன்னு அலறிட்டாங்க.
காரணம், சீட்ல இருந்த மருந்து. எங்க வீட்டுக்காரங்களுக்கு எங்க கல்யாணத்துக்கு முன்னால உடம்பு வெட்டி வெட்டி இழுத்து பயங்கர அலர்ஜி ஏற்படுத்தின அதே ஆபத்தான மாத்திரை!
பொதுவா டாக்டர்கள் வாமிட்டுக்கு அப்போ இந்த மாத்திரைதான் அதிகமா எழுதிக் கொடுக்கிறதால, இவங்களுக்கும், வாமிட்டை நிறுத்த இதையே எழுதிக் கொடுத்திட்டாங்க… இந்த மாத்திரை இவங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தின விஷயம் டாக்டர்ஸுக்குத் தெரியாதே…
நல்லவேளையா செல்வியண்ணியால அந்த ஆபத்து தடுக்கப்பட்டுச்சு!
எங்களால இவங்க பக்கத்தில் உட்காரக்கூட முடியாத சூழல் இருந்ததால், ‘அரசியல், மிசா கைதிக்கு ஹாஸ்பிட்ல்ல ‘ஸ்பெஷல் வார்டு’ல இடம் தரலாம்’கிற விஷயம் தெரிஞ்சுட்டு நாங்க அதுக்கான பர்மிஷன் கேட்டோம்… அடுத்த நாள் அதுக்கான பர்மிஷன் கிடைச்சது!…
அது தனி ரூம் மாதிரியான வார்டு… இவங்க மிசா கைதிங்கிறதால கதவை எப்பவும் மூடக் கூடாது. வெளீல போலீஸ்காரங்க நிப்பாங்க!
தினமும் ராத்திரி நேரத்தில ரூமுக்குள்ளே இவங்க பக்கத்தில ஒருத்தர்தான் கூட இருக்கலாம்கிற விதி இருந்ததால் நானோ அத்தையோ ஒருத்தர் மட்டும் ரூமுக்கு உள்ளே இருப்போம். இன்னொருத்தர் வெளீல உட்கார்ந்துட்டே இருப்போம்! கொழுந்தனார் தமிழரசுவும் அங்கேயே இருப்பார்!
பகல்ல நாங்க வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு வர்ற நேரம் செல்வியண்ணி வந்து இவங்களைப் பார்த்துப்பாங்க…
நாங்க அங்க ஹாஸ்பிடல்ல இருந்த பீரியட்ல ஒருநாள் நள்ளிரவில் ஒரு போன்… அப்போ செல்போன் இல்லே… ஹாஸ்பிடல் ஸ்டாஃப் ரூம்லதான் போன் இருக்கும்… விடிகாலம் போன் வந்திருக்கே… என்னவோ ஏதோன்னு நான் பயத்தோட போயி அட்டெண்ட் பண்ணினா “காந்தியக்காவுக்கு குழந்தை பிறக்கிற மாதிரி இருக்கு… வாங்க”னு அத்தையைக் கூப்பிட்டு அனுப்பிச்சாங்க. எங்க குடும்பத்தில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் குழந்தையை அத்தைதான் முதன்முதலா தூக்கி எடுப்பாங்க! உடனே அத்தை கிளம்பிட்டாங்க. மறுபடி விடிகாலை ஒரு போன்… “காந்திக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு!…” அப்படின்னாங்க அத்தை… செப்டம்பர் 28 விடிகாலை பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ‘அஞ்சுக செல்வி’ன்னு மாமா பேர் வச்சார்… அடுத்து ஏழாவது நாள் அக்டோபர் 4ஆம் தேதி மல்லிகா அண்ணிக்கு ‘அரசி’ பிறந்தது…
கோபாலபுரம் வீட்ல புதுசா ரெண்டு குழந்தைகள்! கைக்குழந்தைகள் அரசியையும் அஞ்சுவையும் கையில் இன்டர்வியூவுக்கு தூக்கி வருவாங்க.
இவங்க உடம்பு நல்லா தேறி மறுபடி ஜெயிலுக்குப் போனதுக்கு அப்புறம் அடுத்த மூணு நாலு மாசத்தில் அதாவது ஜனவரி 31 அன்னிக்கு இவங்களை ரிலீஸ் பண்ணாங்க.
ரொம்ப நாள் கழிச்சு எங்க வீட்டுக்கு உயிர்வரப் போற மாதிரி எனக்குள்ளே ஒரு ஃபீலிங்.
‘எப்படா ஒருத்தரை ஒருத்தர் பார்ப்போம்’ன்னு காதலர்கள் ஏக்கப்படற மாதிரி ஒரு நிலையில் நாங்க அப்போ இருந்தோம்… அந்த சிரிக்கிற கண்களை, புன்னகை முகத்தை இதோ இன்னிக்குப் பார்க்கப் போறோம்கிற உணர்வே எனக்கு உடம்பெல்லாம் பாய்ஞ்சு பயங்கர பரவசத்தைத் தந்துட்டு இருந்துச்சு!
கல்யாணத்துக்கு முந்தின தினத்தில் ஒரு பொண்ணுக்கு ஏற்படற மாதிரியான வெட்கம், படபடப்பு, பரவசம், பயம், மகிழ்ச்சின்னு விதவிதமான உணர்வுகள் எனக்குள்ள. இப்படிப்பட்ட உணர்வுகளில் சிக்கின நான் எங்கிருந்து அன்னிக்கு ராத்திரி தூங்க?
கனவுகளும், நினைவுகளுமா ராத்திரி முழுதும் ஓடிப்போயிடுச்சு! விடிகாலைல எழுந்ததும் குளிச்சுட்டு முதல்ல கோபாலபுரத்தில் எங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கும்பிட்டுட்டு வந்தேன். யப்பா!… இந்த கிருஷ்ணன்கிட்டேதான் எத்தனை வேண்டுதல்கள் வச்சிருப்பேன்? எத்தனை அழுகை… எத்தனை விம்மல்!… நன்றி சொல்ல வேண்டாமா கிருஷ்ணனுக்கு!
இவங்க வந்ததும் அன்னிக்கு சாயங்காலமே மறக்காம மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்கு முதன் முறையா மனசு நிறைய சந்தோஷத்தோட போயிட்டு வந்தோம் நானும் செல்வியண்ணியும்!
இவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச மீன்குழம்பு சமையல் அன்னிக்கு! கலகலன்னு திருவிழா மாதிரி அன்னிக்கு வீடே ஒரே கூட்டமா இருந்தது.
எங்க குடும்பத்தில் எல்லோருமே அங்கே இருந்தோம். தவிர குடும்ப நண்பர்கள், கட்சிக்காரர்கள்னு இவங்க ஜெயிலுக்குப் போறப்போ எப்பிடி வீட்லேயும் தெரு முழுக்கவும் ஜேஜேன்னு மனுஷங்க நிறைஞ்சிருந்தாங்களோ, அதே போல இப்பவும் நிறைஞ்சிருந்தாங்க… ஒரே வித்தியாசம். அப்போ அழுகை… இப்போ மகிழ்ச்சி!
அன்னிக்கு (23.01.1977) அதிகாலை நேரத்தில் இவங்க விடுதலையாகி ஜெயில்ல இருந்து கிளம்பியதுமே நேரே அண்ணா சமாதிக்குப் போய் கும்பிட்டுட்டு, ஜெயில்ல உயிர் துறந்த சிட்டிபாபு அண்ணன் வீட்டுக்குப் போய் அவர் படத்துக்கு மாலை போட்டுட்டுதான் வருவாங்கன்னு முதல்லேயே சொல்லிட்டாங்க…
திடீர்னு வாசல்ல இருந்த ஜனக் கூட்டத்தில் பயங்கர உணர்ச்சிக் கொந்தளிப்பு! இவங்கதான் உள்ள வர்றாங்க அப்டீங்கிறது புரிஞ்சுது. உள்ளே வந்தவங்க வழக்கமா பண்ற மாதிரி நேரே போய் ஆத்தா – தாத்தா படங்களைக் கும்பிட்டு வந்தாங்க… ஒரு மாச தாடி முகத்தில் இருந்துச்சு! (சிட்டிபாபு அண்ணன் இறந்தபின் விட்ட தாடியாம்!)
இளைச்சு இருந்தது இவங்க உடம்பும் முகமும்! ஆனா கண்ணுல மட்டும் அந்த ஒளி குறையாம அப்பிடியே இருந்துச்சு!…
இவங்க, தன் அப்பாவை (கலைஞர்) கும்பிட்டு வாழ்த்து வாங்கிட்டு எல்லோரையும் விசாரிச்சுட்டு அப்புறம்தான் எங்க பக்கம் வந்தாங்க. பார்த்துப் பேசி ரொம்ப நாளான கூச்சத்தில் நான் இவங்களை நேரா பார்க்க முடியாம கடைக்கண்ணால பார்க்க… சரியா பிடிச்சுட்டாங்க மல்லிகா அண்ணி.
“என்ன சாந்தா… மறுபடி இன்னிக்குத்தான் உங்களுக்குக் கல்யாணம் ஆனமாதிரி இருக்கா? ஒரு வருஷம் கழிச்சு மறுபடி உங்க வீட்டுக்காரரோட தனியா இருக்கப் போற…ம்!… நடக்கட்டும் நடக்கட்டும்!”னு பயங்கரமா கிண்டல் பண்ண, அந்த இடமே மகிழ்ச்சியில் பூத்துப் போச்சு – என் மனசு மாதிரியே!
நன்றி: அவரும் நானும், உயிர்மை பதிப்பகம் வெளியீடு