தமிழகத்தில், காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசனுக்கு அதிமுக சார்பாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளில் ஒன்றான தேமுதிகவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைக் கேள்விப்பட்டதுமே, தமிழ் மாநில காங்கிரசை விடவா, தேமுதிக சின்ன கட்சியாக போய்விட்டது என ஆவேசப்பட்டாராம் பிரேமலதா விஜயகாந்த். இதனால் கூட்டணிக்குள் சிக்கல் எழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், உங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்குகிறோம் என்று, அதிமுக தரப்பில், சமாதானம் பேசியுள்ளதாகவும், இதை ஏற்பதா இல்லையா என்று தேமுதிக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில், அதிமுகவுக்கு ஆதரவை அதிகரிக்க ஜி.கே.வாசனை பயன்படுத்துவது அதிமுக தலைமை திட்டமாக இருக்கிறதாம்.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின்போது திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வைத்து டெல்டா மாவட்டத்தில் திமுக வலுவாக உள்ளது என அதிமுக கணித்துள்ளது. இந்த நிலையில்தான், காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க யோசித்து வருவதாகவும், அறிவிப்பு வெளியிட்டார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பல திட்டங்களையும் அறிவித்தார். இந்த நிலையில்தான், வாசனையும் டெல்டாவில் அதிமுக வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.