தேர்தல் நிதி பத்திர விவரத்தை மே 30ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
தேர்தல் நிதி பத்திரம் என்பது ஒருவகை பணப்பரிமாற்ற முறை. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் வங்கிகளில் கொடுக்கப்படும் தேர்தல் நிதி பத்திரத்தின் மூலம் நன்கொடை அளிக்கலாம். ஆனால், இந்த முறையில் நன்கொடை கொடுத்தவர்கள் யார் என்பது பற்றிய விவரமும், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் இடம்பெறாது. இந்த முறையை பாஜக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதால், தேர்தல் நிதி பத்திர திட்ட முறைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதஒதொடர்ந்து, இந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நட்த்திவந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஏப்ரல் 12) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து மே 30ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.