அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதால் டிரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு சுவரை மாநகராட்சி கட்டி வருகிறது. மேலும் டிரம்ப் மோடி சந்திப்பு நிகழும் மோட்டேரா மைதானத்திற்கு அருகில் வாழும் 45 குடும்பங்களை அப்புறப்படுத்தக்கோரி அகமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அப்பகுதியில் 22 வருடங்களாக வாழும் தேஜா மேத்தா என்பவர் இதைப்பற்றி கூறும்போது, “ அகமதாபாத் மாநகராட்சி திடீரென்று எங்களை இந்த இடத்தைவிட்டு காலிசெய்ய சொல்கிறார்கள், மஜூர் அதிகார் மஞ்ச் என்பரின் கீழ் 300ரூபாய் கூலிக்காக கட்டுமான தொழிலில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், இங்குதான் நாங்கள் ரொம்ப காலமாக இருக்கிறோம், இப்போது காலிசெய்ய சொன்னால் இது எந்தவிதத்தில் நியாமானது.” என்று கூறுகிறார்.
மேலும் பங்கஜ் டாமர் என்பவர், “அந்த அதிகாரி எங்களை எங்க வேண்டுமானாலும் போங்கள். இங்கே இருக்காதீர்கள் என்றார், இது எங்கள் விதி, நான்கு உறுப்பினர்களை கொண்ட எங்கள் குடும்பம் இப்போது எங்கே செல்வது?” என்று கேள்வி எழுப்பினார்
இதைப்பற்றி அகமதாபாத் மாநகராட்சி கூறும்போது, “ ஏழு நாட்களுக்குக்குள் நகர திட்டமிடல் திட்டத்தின் கீழ் நாங்கள் இவர்களை இந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த சொல்லியிருக்கிறோம். இந்த இடமெல்லாம் அகமதாபாத் மாநகராட்சிக்கு சொந்தமானது. இவர்கள் அத்துமீறி இங்கு வசித்துவந்துள்ளனர் என்று கூறுகிறது.