கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் குமாரசாமி.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான மஜத-காங்கிரஸ் கூட்டணி தன்னுடைய பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், பாஜக ஆட்சியமைக்க முயற்சி செய்துவருகிறது. இதனால், கர்நாடக அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு நாட்கள் நடைபெற்ற நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆளும் கூட்டணி, வேண்டுமென்றே வாக்கெடுப்பைத் தாமதப்படுத்துவதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வால இருமுறை கெடு விதித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுமுறை தினம் என்பதால், அவை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இன்று மாலை 5.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர், நாகேஷ் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று (ஜூலை 22) விசாரிக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று கூடிய சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னை நாளை காலை 11 மணிக்குச் சந்திக்குமாறு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.