நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பிஷன் என்பவர் சமீபத்தில் மாட்டுக்கறி சூப் குடித்ததை புகைப்படமெடுத்து முகநூலில் பதிவுசெய்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, அவரை வெறித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்கப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் ஜெராக்ஸ் கடை நடத்திவந்த அந்த இளைஞரை, என்.தினேஷ் குமார், ஆர்.அகத்தியன், ஏ.கணேஷ் குமார் எம்.மோஹன் குமார் ஆகியோர் இணைந்து மிரட்டியுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் நால்வரும் இணைந்து அந்த இளைஞரை உருட்டுக்கட்டை மற்றும் இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். இவர்களில் தினேஷ் குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரியவந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட நால்வருமே 28 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
தாக்கப்பட்ட இளைஞர் முகமது பிஷன் அளித்த புகாரின்பேரில் கீழ்வேலூர் காவல்துறையினரால் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 153(A) – மதங்களின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், பிரிவு 307 – கொலை முயற்சி, பிரிவு 506(ii) – குற்றவியல் மிரட்டல், பிரிவு 324 – கொடிய ஆயுதங்களால் தாக்குதல், பிரிவு 294(b) – பொது இடங்களில் ஆபாச வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற 5 குற்றவியல் வழக்குகள் அவர்கள்மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையின் செயல் பாரட்டுக்குரியது.