நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு தாக்கல் செய்த மசோதவை மத்திய அரசு நிராகரித்தது தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் தாக்கல் செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தகவல் அளித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உட்பட பலர் கண்டம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 8) கூடிய சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் நீட் தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். “தமிழகத்தின் மசோதாவை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “சட்டமன்ற தீர்மானங்களைப் பரிசீலிப்பது குடியரசுத்தலைவரின் பணி. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாது” என்று பதிலளித்தார்.

”சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கருத்தைக் கேட்டறிந்து மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ”நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆராய்ந்து, அதை சரிசெய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது” என்று சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.